அண்மைய செய்திகள்

recent
-

முள்ளியவளை காட்டை அழித்து முஸ்லிம் குடியேற்றம்! அமைச்சர் றிசாத்திற்கு அனுமதியளித்தது யார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி


முல்லைத்தீவு – முள்ளியவளை 2ம் வட்டாரம் பகுதியில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்காக காடழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் சட்டரீதியானவை அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் அனுமதியில்லாமல், பகிரங்க கேள்வி கோரப்படாமல், அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு காடழிக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள் எனவும் காடழிப்பதற்கான நிதி எங்கிருந்து எடுக்கப்பட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுமார் 1400 ஏக்கர் காட்டை அழித்து மேற்குறித்த பிரதேசத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையிலான முஸ்லிம் குடியேற்றமொன்றை தோற்றவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் முள்ளியவளை 2ம் வட்டாராம் பகுதியில் பெருமளவு காட்டை அழித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றுவதற்கான முயற்சிகளை அமைச்சர் றிசாட் எடுத்து வருகின்றார். ஆனால் அவர் யாருடைய அனுமதி பெற்று காட்டை அழிக்கிறார் என்பது குறித்து எமக்கு தெரியாது.

ஆனால் மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளான, அரசாங்க அதிபர், பிரதேச செயலர் போன்றோருக்கு எழுத்து மூலமான ஆவணங்கள் எவையும் வழங்கப்படவில்லை. மேலும் அவர்களுக்கு இந்த விடயம் குறித்து எதுவும் தெரியாது என்பதே நாங்கள் அறிந்தவரை உண்மையாக இருக்கின்றது.

ஆனால் நிர்வாக ஒழுங்கின்படி அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலருக்கும் எழுத்து மூல ஆவணங்கள் வழங்கப்பட்டு, பகிரங்க கேள்வி கோரப்பட்டு அவர்கள் ஊடாகவே காடழிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு அவ்வாறு எந்த நிர்வாக, சட்ட ஒழுங்குகளும் பின் பற்றப்படவில்லை.

அதைவிட அமைச்சர் றிசாட் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சரும் இல்லை. அவருடைய அமைச்சு துறையும் வேறு. இந்த நிலையில் தன்னுடைய எண்ணப்படி காட்டை அழிப்பதற்கும், குடியேற்றம் செய்வதற்கும் அமைச்சர் றிசாட் பொருத்தமானவர் அல்ல.

மேலும் அந்தப் பகுதியில் கடந்த 1972ம் ஆண்டு தொடக்கம் நிரந்தரமாக வாழ்ந்துவரும், தமிழ் மக்களுடைய நலன்கள் முதலில் கவனத்தில் எடுக்கப்படவேண்டும்.

அதைவிடுத்து காடழிப்பதற்கு கனரக வாகனங்களை கொண்டுவருவதும், தமிழ் மக்களுடன் முரண்படுவதும், முஸ்லிம் மக்களை அழைத்துவந்து கூட்டமைப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்துவதும் ஏற்புடையதல்ல.

இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. நாம் சட்டரீதியான நடவடிக்கைளில் இறங்கும்போது கேள்வி கேட்கப்படுபவர்கள் மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளே.

எனவே அமைச்சர் தான் நினைத்தபடி எதையும் செய்துவிடலாம் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும், ஏற்கனவே இந்த குடியேற்ற விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கு யூன் 3ம் திகதி வரை அரச தரப்பினர் கால அவகாசம் கோரியிருக்கின்றனர். இந்த நிலையில் காடழிப்பதற்கு முயற்சிப்பது எவ்வகையில் பொருத்தமானது என மக்கள் எம்மிடம் கேட்கின்றனர்.

இந்நிலையில் காடழிப்பதற்கும், குடியேற்றுவதற்கும் அமைச்சர் றிசாட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? காடழிப்பதற்கு நிதி எங்கிருந்து எடுத்தார்? என்பதை கூறவேண்டும்.

ஏனெனில் இது மக்களுடைய பிரச்சினை நிர்வாக, சட்ட ஒழுங்குகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும். பணம் எங்கிருந்து எடுக்கப்படுகின்றது என்ற கணக்கு காட்டப்பட வேண்டும். ஏனெனில் இது வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதி. அதில் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைக்கப்படவேண்டும் என்றார்.
முள்ளியவளை காட்டை அழித்து முஸ்லிம் குடியேற்றம்! அமைச்சர் றிசாத்திற்கு அனுமதியளித்தது யார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி Reviewed by NEWMANNAR on April 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.