கிளிநொச்சி உதயன் அலுவலகத் தாக்குதல் -ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

விநியோகப் பணியாளர்கள் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பிரசுர உபகரணங்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவமானது , தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கடப்பாடுகளை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
நேற்று காலை கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி இனங்களுக்கிடையே மீண்டும் நல்லிணக்கம் ஏற்படவும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை அரசு மேற்கொள்ளவும் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், “ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு: பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், ஊடக நிறுவனங்களை அழித்தல் போன்ற சம்பவங்களையிட்டு புலன் விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
இந்தநிலை தொடர்வதையிட்டு ஆணைக்குழு ஆழ்ந்த கவலை அடைகிறது. ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான மோசமான தாக்குதலினால் ஆணைக்குழு அதிர்ச்சியடைவதோடு அதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுபற்றி புலன் விசாரனை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதன் மூலமே நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட முடியும் எனவும் நல்லிணக்க செயன்முறைகளுக்கு தடை விதிக்கும் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதால் இனங்களிடையே நம்பிக்கையீனம் ஏற்படுவதோடு, நல்லிணக்க செயன்முறைகளுக்கு தடை விதிக்கும் இச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெறுகின்றன.
ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். புலன் விசாரணைகளை நிறைவுசெய்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்வதோடு,தகவல்களுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எல். ஏல். ஆர்.சியில் தெளிவாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரை அரசால் உருவாக்கப்பட்டவையே அன்றி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டவையல்ல. தாமே கொண்டு வந்த தீர்மானங்களைத் தாங்களே மீறுவதிலும் தமக்கு ஏற்ற சிங்கள பௌத்த இனவாத நிகழ்ச்சி நிரலின்படியான செயற்திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதிலும் இவர்கள் வெற்றி காண்பவர்கள்.
ஏற்கனவே, அரசுடன் இணைந்திருக்கும் பௌத்தவாதக் கட்சிகளுக்கு மேலதிகமாக தற்போது பொது பலசேன, சிங்கள ராவய, ராவண பலய என்கின்ற பௌத்த பிக்குகள் தலமை தாங்கும் இனவாத அமைப்புக்களைக் கொண்டு இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஊக்குவிக்கின்றது.
இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக அவை பல்வேறு வடிவங்களில் தமது கொடூர அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அலுவலகத்தில் 30.03.2013 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வேளை இடம் பெற்ற கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு இதுவரை அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
வடக்கில் காணி அபகரிப்பு, வன்னியில் இடம்பெறும் காடழிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி சுவீகரிப்பு, ஆசியாவிலேயே மிக உயரமான புத்தர் சிலை நிர்மாணம், இராணுவக் குடியேற்றங்கள், தமிழ் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மீதான வாழ்வாதாரத் தடைகள், கைதுகள், காணாமற் போதல்கள் முதலான தமிழ் தேசிய இனத்தின் மீதான தொடர் ஆக்கிரமிப்புக்கள் அரசால் நிறுத்தப்படவேயில்லை.
ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் பின்பு இவைகள் புதிய வடிவில் புது உத்வேகம் பெற்றுள்ளன.
அண்மைக் காலங்களில், யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களுள் உதயன் மற்றும் தினக்குரல் ஊடகங்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டன.
வன்னியில் பத்திரிகை விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதனால், மக்களின் தகவல் அறியும் உரிமை பேரச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்படவும் அலுவலகங்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், மக்களின் கருத்தறியும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படவும் தமிழர் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவும் உள@ர் ஊடகவியலாளர் அமைப்புக்கள், சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் உட்பட சர்வதேச சமூகம் முன் வர வேண்டும்.
இனிமேலும் இங்கு இவ்வாறான ஊடக அடக்கு முறைகள் தொடராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(s.vinoth)
கிளிநொச்சி உதயன் அலுவலகத் தாக்குதல் -ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்
Reviewed by NEWMANNAR
on
April 04, 2013
Rating:

No comments:
Post a Comment