தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது: சம்பந்தன்

ஜனநாயகக் கட்சியொன்றுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளே கூட்டமைப்புக்குள்ளும் இருக்கின்றன எனவும், தமிழர் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அவர்களுக்கு நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய தீர்வைப் பெறும் தற்போதைய பயணத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்குதாரர்களும் மிக உறுதியான ஒற்றுமையுடனும் தெளிவான நோக்குடனும் இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுநாள் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நியாயமான தீர்வைபெற்றுக்கொள்ளும்வரை இந்த சாத்வீகப் போராட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்காதென்றும் அவர் சூளுரைத்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு:
உள்நாட்டில் எமது பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படவில்லை. அதனால் தான் எமது பிரச்சினை சர்வதேசமயமானது. அது முன்பிருந்த நிலையைவிட இப்போது சர்வதேசமயமாகி உள்ளது என்பதை இந்த அரசு உணரவேண்டும்.
தமிழர் பிரச்சினை தீர்வில் இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் கருத்தொருமைப்பாடு இருந்ததில்லை. ஆனால் அந்தக் கருத்தொருமைப்பாடு ஏற்படும் சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது என்பதனை நான் சொல்லிவைக்க விரும்புகிறேன்.
இலங்கை அரசு ஒரு குரலில் பேசுவதில்லை. அது முன்னுக்குப்பின் முரணாக செயற்பட்டு வருகிறது. தீர்வுப் பேச்சுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசு ஏற்கவேண்டும்.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அரசியல் தீர்வுக்கான இணைக்கப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. நியாயபூர்வமான, ஆக்கபூர்வமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைத்து நிற்கக் கூடிய தீர்வொன்றை நோக்கிய இதயசுத்தியுடனான பேச்சுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது.
இப்படித் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.தந்தை செல்வா நினைவுரையில் சம்பந்தன் திட்டவட்டம்
தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது: சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
April 27, 2013
Rating:

No comments:
Post a Comment