18ம் திகதி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு! த.தே.கூ அழைப்பு
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 2009 மே மாதத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அவர்களின் உயிர்த் தியாகம் என்றைக்கும் வீண் போகாது. அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கூட்டம் - தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை அனுஸ்டித்து ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கூட்டமொன்றை வவுனியாவில் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 18ம் நாள் காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் இப் பிரார்த்தனை நிகழ்வை உணர்வுர்வமாக அனுஸ்டிக்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஏனைய கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அனைவரையும் உணர்வபூர்வமாகக் கலந்து கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன அழிப்பு நோக்குடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டியது தமிழர்களாகிய நமது ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமையாகும். “மே 18” உலகத்திலுள்ள அனைத்துத்தமிழ் மக்களாலும் மறக்க முடியாத ஓர் வரலாற்றுத்துயரம் நிறைந்த நாளாகவே நோக்கப்படுகின்றது.
யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் உயிர் நீத்த இந்நாளை, தமிழ் மக்கள் அனைவரும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும், அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் நாளாகவும் அனுஷரித்து வருகின்றமை கவனத்துக்குரியதாகும். இந்த நாளில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் எங்கள் வீடுகளில் உயிர் நீத்த ஓர் உறவினை நினைவு கூருவதைப்போலவே நினைந்துருகி, வன்னி இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கும் அஞ்சலி செய்வோமாக.
அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒன்று கூடிப் பிரார்த்திப்போமாக. மே 18,19 நாட்களை சிறீலங்கா அரசு போர் வெற்றி நாளாகப் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களினால் இந்நாட்களில் நடைபெற்ற ஓர் இன அழிப்பு நடவடிக்கையை சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் மூடிமறைத்து வருகின்றது. இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த இந்நாட்டுப் பிரஜைகளை இந்த அரசு இந்நாட்களில் ஒரு சிறு கணப்பொழுதேனும்; நினைவுகூரத்தலைப்பட்டதில்லை.
மாறாக இறந்த எம் மக்களின் புதைகுழிகளுக்கு மேல் நின்று யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களைக் கொண்டாடி வருகின்றது. எனவே இந்நாளில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு உணர்வுபூர்வத்துடன் எமது உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும். இதன் மூலம் இந்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் பேரவலத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
18ம் திகதி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு! த.தே.கூ அழைப்பு
Reviewed by Admin
on
May 14, 2013
Rating:

No comments:
Post a Comment