அண்மைய செய்திகள்

recent
-

'மகாசென்' சூறாவளி வடக்கு நோக்கி நகர்வு! மீனவருக்கு எச்சரிக்கை


திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் 'மகாசென்' சூறாவளி வடபகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் நேற்றுத் தெரிவித்தார்.



இச்சூறாவளி நிலத்தை அடைவதற்கு நான்கு நாட்கள் செல்லுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்துவரும் சில தினங்களுக்கு மன்னார் முதல் யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சூறாவளி பங்களா தேசத்தையே ஊடறுக்கக் கூடியவகையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் தற்போது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சூறாவளி இலங்கையை ஊடறுக்காவிட்டாலும் நாட்டில் இடையிடையே காற்றின் வேகம் அதிகரிக்கும். அத்தோடு கடும் மழையும் பெய்யும் என்றும் அவர் கூறினார்.

நேற்று காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக் கூடிய மழை குக்குலேகங்கையில் 134 மில்லி மீற்றர் பெய்துள்ளது. என்றாலும் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்குள் வட மாகாணத்தில் 200 மி. மீ. வரை மழை பெய்யக் கூடிய சூழல் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இச்சூறாவளி காரணமாக மன்னார் முதல் யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு - அம்பாறை வரையான கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. அதனால் மீனவர் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் இச்சூறாவளி மேலும் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தலும் நிலவுகின்றது. அத்தோடு நாட்டுக்குள் இடையிடையே மணித்தியாலத்திற்கு 60 கி. மீற்றர்களுக்கும் மேல் கடும் காற்று வீசலாம் என்றும் அவர் கூறினார்.

பலத்தகாற்று; கடல் சீற்றம்; கனத்தமழை

'மகாசென்' சூறாவளி காரணமாக இலங்கையின் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூறாவளி காரணமாக நாடெங்கிலும் இடையிடையே கடும் காற்று வீசுவதுடன் கடும் மழையும் பெய்து வருகின்றது.

இதன் விளைவாக யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் என்று அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.

இச்சூறாவளி காரணமாக காலி, மாத்தறை, தங்கல்ல உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கிழக்குக் கடல் பரப்புக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட் டத்தின் பல பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதால் நுவரெலியாவுக்கான இரவு வேளை வாகனப் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில்

இச்சூறாவளி மற்றும் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக யாழ். குடாநாட்டில் இரு வீடுகள் முழுமையாகவும், இருநூறு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வல்வெட்டித்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நேற்றுக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சங்கானை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் வசித்து வந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் மல்லாகம் மற்றும் கொல்லன்கலட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரங்கள் முறிந்து விழுந்ததாலும், வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு சென்றதாலும் ஆறு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் நேற்று மாலை வரையும் வீடு திரும்பவில்லை.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கப்படுவதுடன் பகுதியளவில் சேதமடைந்துள்ள வீடுகளின் கூரைகளைத் திருத்துவதற்குக் கூரைத் தகடுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக ஆரம்பித்துள்ளோம் என்றார்.

நுவரெலியா மாவட்டத்தில்:

நுவரெலியா மாவட்டச் செயலாளர் கூறுகையில், கடும் மழை காரணமாக மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. இதனால் வட்டவல, அப்கொட், நுவரெலியா, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் மண்சரிவு அபாயமும் உள்ளதால் நுவரெலியாவுக்கு இரவுப் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் முதித்த மஞ்சுல குறிப்பிடுகையில், கொட்டகல, ஸ்டெனிக் பீச் தோட்டத்தில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினர். அவர்கள் காயங்களுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி மற்றும் கொட்டகல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதேநேரம் தலவாக்கலை கொட்டகலை வீதியிலுள்ள பத்தனை என்ற இடத்தில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இப்பாதை ஊடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது என்றார்.

அம்பாறை மாவட்டத்தில்

அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ் குறிப்பிடுகையில், இச்சூறாவளி காரணமாக காலி, மாத்தறை, தங்கல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 70 - 80 படகுகள் கிழக்குக் கடலுக்கு அடிபட்டு வந்துள்ளன. இப்படகுகளை மீட்கும் பணிகளை நேற்று காலை முதல் கடற்படையினர் மேற்கொண்டனர். இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்ட 150 படகுகள் ஒலுவில் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

என்றாலும் இச்சூறாவளி காரணமாக 15 படகுகள் படகு முற்றாக அழிவுற்றுள்ளன. பல மீனவர்களின் வலைகளும் கடலில் அடிபட்டு சென்றுள்ளன. இவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

கண்டி மாவட்டத்தில்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரணவீர கூறுகையில்; வெள்ளம், மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக நாவலப்பிட்டி ஹெரல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி நாவலப்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளன.
'மகாசென்' சூறாவளி வடக்கு நோக்கி நகர்வு! மீனவருக்கு எச்சரிக்கை Reviewed by Admin on May 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.