வடக்கை உலுக்கிய “மகாசென் சூறாவளி”: இயல்பு நிலையிலும் பாதிப்பு- மக்கள் அவதி!
வடக்கில் நேற்றுக் காலை வீசிய கடும் காற்று மற்றும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக குடாநாட்டிலேயே அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டுக்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பனைமரங்கள், வாழைகள் முறிந்து வீழ்ந்ததுடன் மக்களும் காயமடைந்த அதேவேளை குருநகர் பகுதியிலுள்ள கார்மேல் மாதா ஆலயம் மீது வீழ்ந்த இடியினால் அவ்வாலயம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையத்திலேயே அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டன. மயிலிட்டி, தையிட்டி போன்ற பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நீண்டகால மாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் நேற்றைய அசாதாரண காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக அந்தப் பகுதியில் நின்ற பனைமரங்கள் நலன்புரி நிலைய குடியிருப்புக்கள் மீது வீழ்ந்ததனால் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப் பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (வயது - 42), அவரது மகனான சுயந்தன் (வயது- 13) மற்றும் மாவை கலட்டி பகுதியைச் சேர்ந்த தி.சதீஸ்வரன் (வயது - 43) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
அனர்த்த பாதிப்புக்களை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த பிரதேச செயலர் மற்றும் இராணுவத்தினர், வீழ்ந்த பனை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான உதவிகளை பிரதேச செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான வீதிகள் பலவற்றின் குறுக்கே மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்துக்களும் சிறிது நேரம் தாமதமானது. அத்துடன் யாழ். இலுப்பையடிச் சந்தையில் தொலைத்தொடர்பு கோபுரமொன்றும் சரிந்து வீழ்ந்துள்ளது.
பல பகுதிகளில் மக்களின் வீட்டுக்கூரைகள், வர்த்தக நிலைய கூரைகள் என்பன தூக்கி வீசப்பட்டன. அத்துடன் கைதடி வெளிப்பகுதிகளில் காணப்பட்ட வர்த்தக விளம்பர பதாதைகளும் தூக்கி வீசப்பட்டிருந்தன.
நீர்வேலிப் பகுதிகளில் பெருமளவான வாழைமரங்கள் முறிந்து வீழ்ந்தன. நேற்றைய அசாதாரண காலநிலையால் பாடசாலைகளுக்கான மாணவர் வருகையும் வெகுவாகக் குறைந்து காணப்பட்டதுடன் அரச அலுவலகங்களிலும் பணியாளரின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.
இதேவேளை குடாநாட்டில் நேற்றைய அசாதாரண காலநிலையால் 42 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 8 வீடுகள் முற்றாகவும், 200 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலிருந்தே மேற்படி 42 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெல்லிப்பழை, சங்கானை, ஊர்காவற்றுறை, பிரதேச செயலர் பிரிவில் 8 வீடுகள் முழுமையாகவும் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும் வீடுகளைத் திருத்துவதற்கு கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் பலத்த மழையினால் 3 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கரைச்சி பகுதியில் பன்னங்கண்டியிலும், கண்டாவளையில் பரந்தன் குமாரசாமிபுரத்திலும், பூநகரியில் முழங்காவில் பகுதியிலுமே இவ்வாறு கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
எனினும் மாவட்டத்தில் இடப்பெயர்வுகள் எதுவும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் சுழல்காற்று பலத்த மழையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
மன்னார் விடத்தல்தீவில் நேற்றுக்காலை சுமார் 3 நிமிடங்கள் வரை வீசிய சுழற்காற்றினால் 10 வீடுகளின் கூரைகள் பறந்தன. அத்துடன் இக்கிராமத்திலுள்ள மின்கம்பங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன
வடக்கை உலுக்கிய “மகாசென் சூறாவளி”: இயல்பு நிலையிலும் பாதிப்பு- மக்கள் அவதி!
Reviewed by Admin
on
May 14, 2013
Rating:

No comments:
Post a Comment