அண்மைய செய்திகள்

recent
-

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசு தலைக்கனம் கொண்டு ஆடுகின்றது-செல்வம் எம்.பி

படு கொலைகள் முள்ளிவாய்க்காலியே முடிக்கப்பட்டு அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை வான்களிலும் அதன் பின் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் புலி உறுப்பினர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற அந்த சூழ்நிலையிலேயே இந்த படுகொலைகளும்,காணாமல் போன சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய வீரர்கள் தினம் நேற்று சனிக்கிழமை  மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.   இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,


  படுகொலைகள் என்பதை விட இன்னொரு பக்கத்திலே இந்த அரசு எங்களை,எங்களுடைய வாக்கை,பூர்விகமாக வாழ்ந்த எமது வரலாற்றை சிதைக்கின்ற வகைளிலே தங்களுடைய திட்டத்தை வகுத்து இன்றைக்கு செயலாற்றி வருகின்றது என்பதனை நாங்கள் நன்கு அறிவோம்.

-இது அடுத்த கட்ட போருக்கு தயாராக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய கடல்,எங்களுடைய  நிலம்,எங்களுடைய வாழ்க்கை,விவசாயிகளின் நிலங்கள்,தமிழர்களுடைய கலாச்சாரம்,மதத்தை உடைக்கின்ற செயற்பாடு இப்படியாக திட்டமிட்டு அழகாக செய்து வருகின்றது.

இந்த அரசு என்ன நினைக்கின்றது என்றால் வடக்கு,கிழக்கு  தமிழர்கள்  ; என்றைக்கும் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்.

அவர்கள் பூர்வீக குடியிருப்பாளர்கள் இல்லை.நாங்கள் தான் பூர்வீக குடியிருப்பாளர்கள்.ஆகவே தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்கின்ற நிலைதான் இருக்க வேண்டு என்ற நிலையிலே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் இந்த அரசு ஆடிக்கொண்டிருக்கின்றது.

ஆயுதப்போராட்டம் மிக உச்சக்கட்டத்தில் இருந்த போது இந்த அரசு என்ன சொன்னது? நாங்கள் பேசுவோம் 13 அல்ல 13 பிலஸ்.இந்த நாட்டில் நீங்கள் என்ன கேட்டாலும் தருகின்றோம் என்றார்கள்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு கூறுகின்றார்கள் 13 ஆ அதெல்லாம் கொடுக்க முடியாது.அதற்கான காரணத்தை சொல்லுகின்றார்கள் வடமாகாண சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றுகின்ற போது அது ஈழத்தை நோக்கி செயற்படும்.

ஆகவே இந்த அதிகாரத்தையும்,வடமாகாண சபை தேர்தலையும் நடாத்துவதற்கான வாய்ப்பை செயற்படத்த முடியாது என்ற வகையிலே அந்த அரசு தன்னைச்சார்ந்தவர்களை வேவி விட்டு,தன்னைச்சார்ந்தவர்களை கூக்குரலிடவைத்து இன்று 13 ஆவது திருத்தச்சட்டத்தில் மாகாண சபை அதிகாரங்களை குறைக்கின்ற வகையில் இந்த தேர்தலை அறிவித்துள்ளனர்.

அடுத்த கட்டத்தில் பார்க்கின்ற போது இன்று தேர்தல் வருகின்ற போது   இளைஞர்,யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றது. அதுவும் படித்த இளைஞர்,யுவதிகளுக்கு கிடைப்பதில்லை.

தங்களுக்கு சாதகமானவர்களுக்கும்,இவரை எம்முடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் வருகின்ற போது வேலை வாய்ப்பு தாராளமாக கொடுக்கப்படுகின்றது.

இந்த அரசு சொல்லுகின்றது அழகான வீதி இருக்கின்றது.வேலைவாய்ப்புக்களை தருகின்றோம் என.இந்த அரசு இது வரை காணாமல் போனவர்கள் பற்றி சிந்திக்காத நலையில் தற்போது ஜனாதிபதி கூறியிருக்கின்றார் ஒரு ஆணைக்குழுவை நியமித்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று.

இதுவும் ஒரு தேர்தல் யுக்தி.காணாமல் போன தனது கணவனை தேடும் மனை ஒருபுறம்,குடும்ப உறவுகளை தொலைத்து விட்டு தேடும் உறவினர் ஒருபுறம் அலைந்து திரிகின்றனர்.

இவர்கள் இனியும் கிடைப்பார்களா  என்ற எண்ணத்துடன் இந்த மக்கள் மஹிந்தவிற்கு வாக்களித்துள்ளனர்.

வசதி வாய்ப்பை தருகின்றேன் என்கின்ற இந்த அரசு எமது முகவரியை அடிமை என கூறுகின்றது.

அடிமை வாழ்க்கையிலே வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் எமது முகவரி அடிமைப்படுத்தப்படும்.

எதிர்வரும் தேர்தலில் இந்த அரசிற்கு இந்த மக்கள் ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். இந்த அரசிற்கு கொடுக்கின்ற தீர்ப்பை நாம் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எத்தனை பேரை நாம் இன்று தொலைத்து விட்டு நிற்கின்றோம்.எத்தனை தாய்,தந்தை பாரிய சுமைகளை சுமந்து கொண்டு இன்று இருக்கின்றார்கள்.எனது குழந்தையை காணவில்லை.

நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன் அந்த பிள்ளையை காணவில்லை.எனக்கு உழைத்துத்தருகின்ற பிள்ளை என தினம் தினம் கண்ணீர் விடுகின்ற அந்த குடும்பங்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்லப்போகின்றோம்.இந்த அரசு தானே அவர்களை துழைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலிலே எத்தனையே பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மறந்து விட்டோமா?இந்த கடலிலே நாங்கள் தொழில் செய்ய முடியாமல் இருக்கின்றோம்.

எங்களுடைய விவசாய நிலங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ளது இராணுவம்.அந்த விவசாய நிலங்களில் விவசாய உற்பத்திகளை இராணுவம் செய்து விட்டு மறு நாள் குறைந்த விலைக்கு அவற்றை விற்பனை செய்கின்றனர்.

-இதனால் எமது விவசாயிகள் எப்படி வாழ முடியும்.இன்று மீள் குடியேற்றம் என்ற வகையில் மன்னார் மாவட்டம் பாரிய அபாயத்தை எதிர் நோக்கியுள்ளது.மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒரு இரகசிய கூட்டம் இடம் பெற்றுள்ளது.

அந்த இரகசியக்கூட்டம் எப்படி என்றால் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்திலே தமிழ்,முஸ்ஸிம் சகோதரர்களின் காணிகளுக்குள் 6000 சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான ஒரு கூட்டமாக இருந்தது.

குறித்த கூட்டம் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து  அரச அதிபருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்துள்ளது.அழைப்பில் 2 மாதங்களுக்கு பின் முசலியில் சிங்கள குடியேற்றங்களை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

காரணம் முசலியில் சிங்கள மக்களை குடியேற்றம் செய்தால் அங்குள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வெற்றிலைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

அதனால் 2 மாதங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் சிங்கள மக்களை அங்கு குடியேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

இப்போது சொல்லுகின்றோம் தமிழ்,முஸ்லிம் மக்களை அணிதிரட்டி தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்த 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை செய்ய முடியாது என்று கூறுகின்ற அளவிற்கு இந்த தேர்தலுக்கு முன் கூட்டமைப்பு   போராட்டத்தை முன்எடுக்கும் .

 -02 மாதங்களுக்கு பின் குடியேற்றம் செய்தால் மக்கள் அரசிற்கு வாக்களித்து விடுவார்கள் என அமைச்சர் ஒருவர் உற்பட நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

முசலியை காப்பாற்றுகின்ற வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படும்.முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற முசலி பிரதேசத்தை மீட்க வேண்டும்.

அரசுடன் உள்ள அமைச்சர் றிஸாட் பதீயுதின் அரசை விட்டு வெளியில் வர வேண்டும்.என்னுடைய மக்களின் காணிகளில் சிங்கள குடியேற்றம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களால் முடியுமா? முடியாது தமிழ் மக்களின் குரலான தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மட்டுமே முடியும்.

மக்களினால் உருவாக்கப்பட்ட மக்களின் குரலான தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மட்டுமே செய்ய முடியும்.அரசுடன் உள்ள எந்த அமைச்சர்களினாலும் செய்ய முடியாது.

இந்த போராட்ட காலத்திலே எத்தனை இழப்புக்களை சந்தித்துள்ளோம்.எத்தனை போராளிகளை இழந்திருக்கின்றோம்.எத்தனை பொது மக்களை இழந்திருக்கின்றோம்.

இவற்றை எல்லாம் மறக்க முடியுமா? இந்த அரசு கொடுக்கின்ற அற்ப சொற்ப சலுகைகள் வாழ்வைத்தந்து விடுமா?

-இந்த வடமாகாண சபையை நாங்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். அன்னியர்கள் இல்லை.

அன்னியர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது.ஒரு வாக்கு அன்னியர்களுக்கு விழுமாக இருந்தால் அந்த வாக்கை போட்டவன் ஒரு தமிழனாக இருக்க முடியாது.இவ்வளவு குடியேற்றங்கள்,நிலங்கள் பறிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

ஆகவே இந்த சூழலிலே நாங்கள் இன்று ஒரு தேர்தலை சந்திக்கின்றோம்.தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்னத்தை செய்தார்கள் என்று கேட்பார்கள்.

எங்களுடைய மக்களுக்கும்,எமது மண்ணுக்கும் விடுதலையை பெற்றுக்கொடுக்க போராடுகின்றது.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசு தலைக்கனம் கொண்டு ஆடுகின்றது.

எனவே இந்த அடிமைத்தனம் உடைக்கப்பட வேண்டும் . நாம் தமிழர்கள் என்ற வகையில் எமது நிலம் எமக்கு வேண்டும்,எமது கடல் எமக்குச் சொந்தம் என்ற வகையில் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாபெரும் வெற்றியை இந்த வடமாகாண சபை தேர்தலில் பெற்றுள்ளது என தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.


ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசு தலைக்கனம் கொண்டு ஆடுகின்றது-செல்வம் எம்.பி Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.