அண்மைய செய்திகள்

recent
-

வன்னியில் விசாலமாகும் பாலியல் வகையறாக்கள்!

'பாலியல்', 'வன்புணர்வு', 'முறையற்ற உடல் தொடர்பு'  என்பன நமது கலாச்சாரத்தில் மிகவும் பாரதூரமான தவறுகளை குறிக்கின்ற சொற்கள். அதுவும் பாரம்பரிய விழுதுகள் வியாபித்து கிடக்கும் வடக்கு பிரதேசங்களில் சொல்லவே தேவை இல்லை. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இந்த அசாதாரண, சமூக, கலாச்சார பிரச்சனைகள் உருவெடுத்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த ஒரு விடயம். இதுவே என்றும் இல்லாதது போன்று நமது கலாச்சார ஆசாமிகளின் வெறுப்பேத்தும் கலாச்சார பிரச்சாரங்களுக்கு வித்திட்டது. இன்றெல்லாம் பத்திரிகைகள் வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்களில் இலகுவாக காணக்கூடிய ஒரு செய்தித் தலைப்பு எதுவென்றால் அது இது சார்ந்ததாகவே இருக்கிறது. தணிக்கைகள் இல்லாமல் நமது ஊடகங்களில் வரும் செய்திகளில் நீலப்படங்களாகவே எமது கதைகள் உருவப்படுத்தப் படுகின்றன.


ஒழுக்கம் உயிரிலும் பெரிதாய் மதிக்கப்படும் தமிழ் கலாச்சாரத்திற்கு இவை இப்பொழுது பெரும் சவாலாகவே அமைந்திருக்கின்றன. போரிற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் பிரச்சனைகள் பிரதானமாக மூன்று  வகையறாக்களில்  வடக்கில்  பதிவு  செய்யப்பட்டிருக்கின்றன. 1. சிறிய அளவிலான பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பாலியல்  தொந்தரவுகள்  அல்லது  பாலியல்  சேட்டைகள். 2. கற்பழிப்பு/வன்புணர்வு மற்றும்  இது  சார்  பிற  தீவிர  குற்றங்கள். 3.  விருப்பத்தின்  பேரிலான முறையற்ற உடல், பாலியல் தொடர்புகள். இந்த மூன்று வகையறாக்களும் அதிகமான எண்ணிக்கையில் இப்பிரதேசங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதுவே  இப்பொழுது  அல்லது  இனி  வரும் காலங்களில் இப்பிரதேசங்களில் வாழும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் முன்னுரிமை திட்டங்களாக முன்மொழியப்படலாம். இந்த கட்டுரை மூலம் பொதுவாக இந்த மூன்று வகையறாக்களையும் பற்றி பேசினாலும் இந்த மூன்றாவது வகையறாவைப்பற்றி அதிகம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

அது ஒரு மெல்லிய மாலை பொழுது. அவள்  முகத்தில்  ஒளி  இல்லை. ஆனாலும் அழகாக சிரிக்கிறாள். அவள் உடல் தோற்றமும், பேச்சும், அழகிய புன்னகையும், அவள் அருகில் ஓடிவந்து நின்றுகொண்ட அவளுடைய ஒரு  அழகிய மகளும்  அந்த பெண் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் தாய் என்பதை எனக்கு  அடையாளம்  காட்டியது. அவளுடன்  பேசி  முடித்து  வெளியில்  வருகையில் 'முறையற்ற பாலியல் தொடர்பு' பற்றியதான  எனது  கருத்தியல் சுக்குநூறாகிப்போயிருந்தது. அந்த பெண் கடந்த போரில் கணவனை இழந்த இளம் பெண். மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண்பிள்ளைகள். சிறு வயதில் திருமணம் முடித்த இந்தப் பெண் நால்வரின் வயிற்றுப்பாட்டிற்கு வருமானம் ஈட்ட எந்தவித தொழிலும் தெரியாத ஒரு குடும்பத்தலைவி. அருகில்  இருக்கும்  பெரிய  பண்ணையிலும், சில  தனிப்பட்டவர்களின் தோட்டங்களிலும் பணி புரிவதை தவிர இவளால் செய்யக்கூடிய காரியங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும்  வீட்டில்  பிள்ளைகளோடு இருப்பதையே அதிகம் இரும்புகிறாள். இவ்வாறான இந்த பெண் மீது அந்த சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டு "இவள் நடத்தை சரியில்லாதவள், பணத்திற்காக படுப்பவள்!"

"எனக்கு குறித்த நபருடன் அல்லது நபர்களுடன் (ஆண்கள்) உறவு இருக்கிறது, அவர்கள்தான்  என்  குடும்பத்தை  பொருளாதார  ரீதியில் கவனித்துக்கொள்கிறார்கள்" என்கின்ற  அப்பெண்ணின்  வார்த்தைகள் எனக்கு அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கின்ற பல உண்மைகளையும், அவள் சொல்ல மறைக்கும் விடயங்களையும் சரியாக மொழிபெயர்துக்காட்டியது. பின்னர் கணவனை நினைத்து அவள் சிந்திய சிறு  துளி  கண்ணீர்  அவள்  கணவன்  மீதான  அன்பையும், இப்பொழுது கணவன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் ஆண்கள் மீதானா இவளின் தேவையையும் சரியாக தெளிவு படுத்தியது.

பிள்ளைகளுக்காகவே நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்கின்ற பாணியில் அவளது தவறான பாலியல் தொடர்புகளை நியாயப்படுத்தும் பேச்சில் எனக்கு நூறு விகிதம் உடன்பாடு இல்லை என்றாலும் அவளது மனிதாபிமான மற்றும் இயலாமை தளத்தில் நின்று ஜோசிக்கையில் கொஞ்சம் நியாயம் இருப்பது போன்று  எனது  தலை  அசைந்தது  அவள்  பேசும்  போது. என்னதான் நியாயப்படுத்தல்கள் வழங்கப்பட்டாலும்,  முறையற்ற பாலியல் தொடர்புகள் எமது சமூக கலாச்சாரத்தினால் முற்றாக ஏற்றுக்கொள்ளப் படமுடியாத ஒன்றாக இருந்தாலும் இந்த பெண்ணின் தனது உறவு பற்றிய தெளிவும், நியாயமும் என்னை 'பாலியல் தொடர்புகள்' மீதான பார்வையை கொஞ்சம் மாற்ற முனைந்தது  ஏதோ  உண்மைதான். அதற்காக  அதை முழுமையாக ஆதரிப்பவன் நான் என்பதும், இதில் பிழை இல்லை என்று சொல்லும் யதார்த்தவியல் இது என்றும் அர்த்தம் இல்லை.

வடக்கில் 40,000 இற்கும்  மேற்பட்ட  போரினால்  கணவனை  இழந்த பெண்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. அதிலும் அரைவாசிக்கு மேற்பட்டோர் 22 - 28 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகள் என்பதும் மிக முக்கியமான  விடயம். ஆக, இரண்டு  காரணிகள்  இந்த  பெண்களை முறையற்ற  பாலியல்  தொடர்புகளிற்கு  அழைத்துச்செல்லலாம். ஒன்று, இவர்கள் இளம் பெண்கள் என்பதனால் இவர்கள் உடலியல் மற்றும் உணர்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த முறையற்ற பாலியல் தொடர்புகளை  இவர்களாகவே  ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தவிடயம், பரிசீலனை  செய்யக்கூடிய  ஒரு  காரணம்  என்றாலும் உடலியல் மனிதாபிமான நோக்கில் (கலாச்சார, சமூக... நோக்கில் அல்ல!) இவர்கள் இந்த விடயத்தில் நலிவுற்றவர்களே (Vulnerable). இரண்டாவதாக, பொருளாதார ரீதியில், பொருளாதார நலிவுத்தன்மை காரணமாக இந்த  பிரச்சனைக்குள் சிக்குபவர்கள். இவர்கள்  பண்டமாற்று  முறையில் பணத்திற்கு, உடல்  என  வேறு  வழியற்ற  தங்கள்  பொருளாதார பிரச்சனையை  தீர்த்துக்கொள்ள  முனைபவர்கள்.

 இவர்கள்  தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள உடலை பயன்படுத்துபவர்கள். இருந்தும் இவர்களை வெறுமனே விபச்சாரிகள் என்று சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த  இரண்டு வகையான தரப்பினர்களையும் இப்போதைய வடக்கில் அதிகம் காண முடியும். இவற்றில் மிகச்சிறிய அளவிலான தொடர்புகளே முறைப்பாடுகளாகவோ அல்லது விமர்சனங்களாகவோ வெளியில் வந்திருக்கின்றன, வருகின்றன. பெரும்பாலானவை வெளியில் வராமல் இருப்பதற்கு நமது சமூகம் மீதான பயமும், கலாச்சாரம்  மீதான  மரியாதை  பயமும்  காரணங்கள் என்று சொல்லலாம். இவ்வாறான  பல  சம்பவங்களை  கிராம  மட்டத்தில் மக்களுடன்  பணியாற்றும்  அரச, அரச  சார்பற்ற  பணியாளர்களிற்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.


அத்தோடு, அடுத்த  இன்னுமொரு  பாரிய  விடயம். பாலியல் சார்ந்த விடயங்கள் எமது இளம் மற்றும் பாடசாலை மாணவ பருவத்தினரிற்கு சரியாக தெரிந்திருக்கின்றதா என்கின்ற விடயமும் பல தடவைகளில் என்னை சுற்றிக்கொண்ட கேள்விகளில் ஒன்று. பாலியல் சார்ந்த தெளிவும் அல்லது பாலியல் கல்வியும்/அறிவும் இல்லாமல் அல்லது போதுமான அளவு இல்லாமையும் இப்பொழுது நடக்கின்ற அல்லது இனிவரும் காலங்களில் நடக்க இருக்கின்ற பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்து விடுமா என்கின்ற ஒரு கேள்வியும் என்னிடம் இருக்கிறது.

அன்றைய பாலியல் வன்முறைகள் பற்றிய பயிற்சி பட்டறையில் இருபத்து நான்கு பங்கேற்பாளர்களில் இருபது பேர் பெண்கள். அதில் 95 வீதமானோர் திருமணமாகாத, இளம் பெண்கள். அனைவரும் வன்னியின் பல பாகங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது முகத்தில் சிரிப்பில்லை, அதிகமாய் வெட்கம்  முகமெல்லாம்  பரந்து  விரிந்து  கிடக்கிறது, இந்த தலைப்பை பற்றி பேச, கேட்க, தெரிந்துகொள்ள, அடிமனதில் பெருமளவு ஆசை மறைந்து கிடக்கிறது. அதுவும்  எனது  கண்களுக்கு  தெரிகிறது. பயிற்சியை  வழமை  போல்  ஆரம்பிக்கிறேன். அதிகமானோரின்  கண்கள் என்னைவிட அவர்கள் பெருவிரலையே பார்த்த வண்ணம் இருக்கின்றன...

எமது பெண்கள் 'பாலியல்'சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்ள அல்லது பேசுவதற்கு அவை ஏதோ பேசக்கூடாத தூஷண வார்த்தைகளாகவே எண்ணிக்கொள்கின்றனர். அப்படிதான்  எண்ணும்படி  பெற்றோர்களும் சொல்லிக்கொடுக்கின்றனர் தங்கள் பிள்ளைகளிற்கு மறைமுகமாக. அதன் விளைவு, பல பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவை, தைரியத்தை  இவர்கள் பெறாமல் போய்விடுகிறார்கள். பாலியல்  சார்ந்த பிரச்சனைகளை வருமுன் காப்பதில் இந்த பாலியல் கல்வி அல்லது அறிவு மிகவும் அவசியம் ஆகிறது. இதில் வெட்கப்படுவதற்கும், பேச ஸ்தம்பித்துப் போவதற்கும் அவசியமே இல்லை.

பயிற்சி பட்டறை தொடர்கிறது.. நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளிற்கு பதில் இல்லை. நன்  சொல்பவற்றிற்கு  குமீர்  என்ற  சிரிப்பு  மட்டும் வருகிறது. பாலியல் - பால் சார்ந்த விடயங்களை பற்றி நான் பேசும் பொழுது ஒரு கலாச்சார + இன துரோகி வகையறாக்களில் சிலர் என்னை பார்த்ததும் நினைவிருக்கிறது. இறுதியில், அந்த இளம் பெண்கள் மனம் திறந்து பேசுகிறார்கள் என்னிடம்.

"எங்கள் கிராமத்தில் இந்த பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றி இளைஞர்களிற்கு கட்டாயம் விழிப்புணர்வு வேண்டும்", "பெண்களாகிய எங்களிற்கு எங்கள் பற்றிய பல பாலியல் சார்ந்த விடயங்கள் இன்றுதான் தெரிந்துக்கொள்ள முடிந்தது, இதை  பற்றி  நாங்கள்  தெரிந்துகொள்ள முற்பட்டால் எங்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்கின்ற இந்த  பயத்தினாலேயே இதுபற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களிற்கு  இல்லாமல்  போய்விட்டது", "குடும்பத்தில்  கணவனிற்கும் மனைவியிற்கும் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு ஒரு காரணமும்  இந்த  பாலியல், பால் நிலை பற்றிய தெளிவு அல்லது அறிவு இல்லாமைதான் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது", "குடும்ப வன்முறைகளுக்கும் இந்த பாலியல் பால் நிலை சார்ந்த விடயங்களிற்கும் இருக்கின்ற தொடர்பு பற்றி நான் இன்றில்லை என்றோ  அறிந்திருக்கவேண்டும்", "பாலியல்  வன்முறைகள் வெறுமனே  கற்பழித்தல்  மட்டுமல்ல  அதை  விட  கொடுமையான இவ்வளவு  விடயங்கள்  இதற்குள்  இருக்கிறதே..". இவை  அந்த பயிற்சியில் பங்கேற்ற சில பெண்கள்  என்னிடம் இறுதியில் கொட்டித்தீர்த்தவை.

ஐரோப்பிய நாடுகளில் ஏன் இந்தியாவில்கூட கட்டாயமாக்கப்பட்டிருக்கும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் நம்மவர்களிற்கு தெரியாமல் போனது எனக்கும் என்றைக்கும் ஆச்சரியம் தருபவையே. ஆகக்குறைந்தது, நண்பர்கள், குடும்பம்  போன்ற  நிலைகளிலாவது  இவற்றை வெளிப்படையாக பேசி தெரிந்துகொள்ளும் துணிச்சல் இந்த இளம் பராயத்தினரிற்கு புகுத்தப்பட வேண்டும். அத்தோடு, கலாச்சாரம் என்பது வாழ்கையில் சரியான விடயங்களை கற்றுக்கொள்ள தவறான என்று நாம் எண்ணும் விடயங்களை கூட ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

 அதேபோல, இங்கு பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், போதுமான  அளவு  பொது  மண்டபத்தையும், பொது  விளையாட்டு மைதானத்தையும், புது  புது  ரோட்டுக்களையும்  கிராமங்களிற்கு அமைத்துக்கொடுத்து களைப்பாறாமல் பின்னர் இவ்வாறான சமூக மென் செயற்பாடுகளை (Soft Components) முன்னெடுக்க முன்வர வேண்டும். சமூக மென் பிரச்சனைகளிற்கு தீர்வுகாணாமல் சமூக வன் செயற்பாடுகளையும் கட்டுமானங்களையும் விரிவு படுத்துவதில் பயனில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். இளைஞர்கள் என்ற இலக்கு குழுவை இலக்கு வைக்கும் செயற்பாடுகள் இப்பொழுது வடக்கில் அதுவும் அபிவிருத்தியை நோக்கிய கட்டத்தில் (Development Phase) மிகவும் முக்கியம்.


பி.அமல்ராஜ் 
வன்னியில் விசாலமாகும் பாலியல் வகையறாக்கள்! Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.