மீளச்செலுத்தாத கடன்களை அறவிட வங்கிகள் சட்ட நடவடிக்கை!- சட்டத்தரணிகள் யாழ் வருகை!
உரிய காலப் பகுதியில் திருப்பிச் செலுத்தாத கடன்பட்டோரில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் அதற்கு உட்பட்டவர்கள் மீது மத்தியஸ்தர் சபைகளின் இணக்கப்பாட்டுக்கான செயற்முறைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணக்கப்பாட்டிற்கு வராதவிடத்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2 ½ இலடசம் ரூபாவுக்கு மேற்பட்ட கடன்காரர்கள் மீது நேரடியாகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
முதற் கட்டமாக இரண்டு வார கால அவகாசத்துடன் கூடிய கேள்வி அறிவித்தல்கள் சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதற்கு கட்டுப்பட்டு பணம் செலுத்த மறுப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந்த கால யுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் என்ற வகையில் சிறு தொழில் முயற்சிக் கடன், பருவகால விவசாயக் கடன், தொழில் முயற்சிக் கடன், புனர்வாழ்வுக் கடன் என்ற வகையில் பல்வேறு வகையான கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்தக் கடன் இலகு நடைமுறையில் குறைந்த வட்டியுடன் வழங்கப்பட்டன.
ஒரே துறைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாலும் பெற்ற கடனை உரிய தொழில் முயற்சிக்கும் வேலைத்திட்டத்துக்கும் பயன்படுத்தாமல் ஆடம்பரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியமையினாலும் உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை கடன்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஒரே தேவை நோக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன்பெற்றிருப்பது உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமைக்கான முக்கிய விடயமாகவும் உள்ளது.
மத்தியஸ்த சபை இணக்கப்பாட்டிற்கு அழைக்கப்பட்ட கடன்காரர்களில் பலர் மத்தியஸ்தர் சபைக்கு சமுகமளிக்காமல் புறக்கணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கணிசமான தொகையினர் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முரண்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இக் கடன்களை அறவிடுவதற்காக வங்கி ஊழியர்கள் கடன்பட்டோரை நாடிச் சென்றும் கடனைத் திருப்பிச் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கிய போதும் எதிர்பார்த்தளவுக்கு சாதகமான நிலை உருவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் போது சட்ட நடவடிக்கை தொடர்பாக வங்கிகள் மேற்கொண்ட வழக்குச் செலவுத் தொகையையும் கடன்பட்டவர்கள் செலுத்த வேண்டும்.
அத்துடன் வங்கியின் நம்பிக்கை நாணயத் தன்மைக்கு முரணாக நடந்து கொண்ட வாடிக்கையாளர் என்ற வகையில் எதிர்காலத்தில் வங்கியுடனான தொடர்பு நிலையிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் துண்டிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது
மீளச்செலுத்தாத கடன்களை அறவிட வங்கிகள் சட்ட நடவடிக்கை!- சட்டத்தரணிகள் யாழ் வருகை!
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment