பொதுநலவாய அமைப்பு மகாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது! -தமிழ் அமைப்புகள் பாரிய அழுத்தம்
ஏற்கனவே தமிழ் அமைப்புகள் சில விடுத்த இது தொடர்பான கோரிக்கையை பிரித்தானியா அரசு நிராகரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை புதிதாக அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து அதே கோரிக்கையை முன் வைத்துள்ளன.
அரசின் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கவும் தமிழ் அமைப்புக்கள் திட்டமிட்டு வருகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவையும் நாடு கடந்த தமிழீழ அரசும் இதில் தற்போது மும்மூரம் காட்டி வருகின்றன.
தமிழருடனான நல்லிணக்க நடவடிக்கை எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் போர் முடித்து நான்கு ஆண்டுகளைக் கடந்த போதும் தமிழர் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் இதுவரை காணப்படவும் இல்லை. மொத்தத்தில் சர்வதேசத்திற்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழரின் வாழ்க்கைத்தரம் அங்கு தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் கொழும்பில் பொதுநலவாய அமைப்பு மகாநாட்டை நடாத்துவது அதன் முக்கிய குறிக்கோளை மீறிய செயலாகும். அதனால் பொதுநலவாய அமைப்பு மகாநாட்டை வேறொரு நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு கொழும்பில் மகாநாடு நடாத்தப்படுமேயானால் பிரித்தானியா அதில் கலந்து கொள்ளக்கூடாது என பிரித்தானிய தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானியா தமிழர் பேரவை பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று இந்தியாவும் இம் மகாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் ஆளும் கட்சியாகிய அ.இ.அ.தி.மு.க மும்மூரமாகக் குரல் எழுப்பி வருகின்றது. இந்திய நாடாளுமன்றத்திலும் இவ்வாரம் இக்கோரிக்கை எதிரொலித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழீழ ஆதரவு அமைப்பு (டெசோ) தி.மு.க தலைமையில் பாரிய போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளது. நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களும் டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
இந்தியா பொதுநலவாய மகாநாட்டில் பங்கு பற்றக்கூடாது. தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு சம உரிமை வழங்கும் வரை இந்தியா இது போன்ற மகாநாடுகள் கொழும்பில் நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளக்கூடாது என தி.மு.க கோரி வருகின்றது.
சென்னையில் ஐந்து சட்டக்கல்லூரி மாணவர்களும் இதே கோரிக்கையை முன் வைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுநலவாய அமைப்பு மகாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது! -தமிழ் அமைப்புகள் பாரிய அழுத்தம்
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment