அண்மைய செய்திகள்

recent
-

யாரையும் சந்திக்கும் உரிமை எமக்குண்டு: ஜகத் ஜயசூரியவின் குற்றச்சாட்டுக்கு சுமந்திரன் பதில்

அரசியலமைப்பிற்கோ நாட்டின் ஏனைய சட்டங்களுக்கோ முரணாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை. யாரையும் சந்திக்கும் உரிமை எமக்குள்ளது. இதனை அரசியலமைப்போ வேறு சட்டங்களோ அல்லது தரப்புகளோ தடுக்க முடியாது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினர் போர்க்குற்றச்சாட்டுக்கள் உட்பட உள்நாட்டில் இராணுவத்திற்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய முடியாத முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய நாட்டின் நற்பெயர் குறித்து பேசவோ இராணுவ கெளரவம் தொடர்பில் கதைப்பதோ வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்,

தற்போது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக உள்ள ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகிக்கையில் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றை இராணுவம் குழப்பியடித்து தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதில் இராணுவ சீருடையில் வந்த இனந்தெரியாதவர்களென குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 தொடக்கம் 50 வரையிலான இராணுவத்தினர் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை குழப்பியடித்த போதிலும் அதனை இராணுவத் தளபதி விசாரிக்கவில்லை. அதேபோன்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வந்து வன்முறையாக செயற்பட்டு போராட்டத்தை குழப்பினார்கள். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றது.

மேலும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு உறுப்பினர்களை புகைப்படம் எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையையும் சமர்ப்பித்தார். ஆனால் இதுவரையில் இராணுவத் தளபதி எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்விரு சம்பவங்களுக்கும் யாழ். கட்டளை தளபதியும் இராணு தளபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என குற்றம் சுமத்தியிருந்தோம். ஆனால் இதுவரையில் பதிலில்லை.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இராணுவமும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை புரிந்துள்ளதாக கூறி அறிக்கை வெளியிட்டது. இவ்வறிக்கையை கூட்டமைப்பு வரவேற்றது. அத்துடன் நடைபெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். வடக்கில் இராணுவம் செய்த அடாவடித்தனங்கள் தென்னிலங்கையிலும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்கு வெலிவேரிய பகுதியில் குடிநீர் கேட்ட மக்களை இராணுவம் சுட்டதிலிருந்து வெளிப்பட்டு விட்டது.

இவ்வாறு இராணுவம் பல்வேறு மனிதாபிமானமற்ற செயல்களை செய்கையில் அதனை தடுத்து நிறுத்தவோ அல்லது விசாரணைகளை மேற்கொண்டு இராணுவத்திற்குரிய ஒழுக்கத்தையும் கெளரவத்தையும் தனது பதவிக் காலத்தில் பாதுகாக்க தவறிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய தற்போது நாட்டின் நற்பெயர் இராணு ஜெனரல் தொடர்பில் பேசுவது வேடிக்கையான விடயமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பையோ இலங்கையில் வேறு சட்டங்களையோ மீறி செயற்படவில்லை எனக் கூறினார்.


யாரையும் சந்திக்கும் உரிமை எமக்குண்டு: ஜகத் ஜயசூரியவின் குற்றச்சாட்டுக்கு சுமந்திரன் பதில் Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.