தொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
தொண்டமானாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டது போன்று மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாறு பாலத்தை இன்றைய தினம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த தொண்டமானாறு பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
யுத்தகாலத்தின் போது சேதமடைந்த இப்பாலத்தின் ஊடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் படைத்தரப்பினரால் தற்காலிகமாக பாலமொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இன்று எமது கோரிக்கைக்கு அமைவாக அரசு மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாக இப்பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொண்டமானாறு பாலத்தை போன்று மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்ற நிலையில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வதனூடாக மேலும் பல்வேறு பயன்களை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
120 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இப்பாலம் 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment