இலங்கையர்களுக்கான புதிய குடிவரவு முறைமை: கனேடிய அரசினால் அறிமுகம்
இலங்கை உள்ளிட்ட கணிசமான அளவிலான நாடுகளுக்கான உயிரியல் இயல்பு சம்பந்தப்பட்ட அடையாளத் தேவைப்பாடுகளை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்த புதிய முறைமையின் கீழ் கனேடிய சுற்றுலா, மாணவர் மற்றும் தொழில் சம்பந்தமான விசா ஒன்றுக்கென விண்ணப்பிக்கும்போது பயணிகள் தங்களின் கைவிரல் அடையாளங்களையும் நிழற்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அல்பேனியா, அல்ஜீரியா, கொங்கோ, ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சோமாலியா, தென் சூடான், சூடான் மற்றும் டியுனிஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தங்கள் உயிரியல் இயல்பு நிலைத் தகவலை வழங்க வேண்டுமென்ற தேவைப்பாடு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வரும் அதேசமயம், எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் இத்தகைய தேவைப்பாடு இலங்கை மற்றும் கணிசமான அளவிலான வேறு நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்கப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலம்பியா, ஹெய்ட்டி மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகள் மீது இந்த மாத முற்பகுதியில மேற்படி உயிரியல் இயல்பு நிலைத் தேவைப்பாடுகள் விதிக்கப்பட்ட தைத் தொடர்ந்தே கனேடிய பிரஜாவுரிமை மற்றும் குடிவரவுத் திணைக்களம் நாடுகள் பற்றிய பட்டியலொன்றை வெளியிட்டுள்ள து.
நாட்டின் எல்லையைத் தாண்டி உள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை கடினமாக்கும் பொருட்டு கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டிருந்த கனேடிய குடிவரவு முறைமைச்சட்டத்தைப் பாதுகாக்கும் அங்கமாக இத்தகைய நாடுகளிலிருந்து கனடாவுக்கு வருகை தருவோர் தங்கள் விசா விண்ணப்பங்களிலான தங்களின் கைவிரல் அடையாளங்களையும் நிழற்படங்களையும் பெற்றுக் கொள்வதற்கென மேலதிக கட்டணமாக 85 டொலர்களை ஒட்டாவாவுக்கு செலுத்த வேண்டும்.
விசா விண்ணப்ப நிராகரிப்புக்களின் பரிமாணங்கள் அல்லது வீதங்கள், நாடு கடத்தல் உத்தரவுகள், அகதி அந்தஸ்து கோரல்கள், உரிய ஆவணங்களின்றி வந்தடையும் அல்லது பொய்யான ஆளடையாளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்று வரும் நாட்டவர்கள் மற்றும் கனடாவின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக கொள்கை நோக்கங்களுடன் அவர்கள் கொண்டுள்ள சம்பந்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்குறிப்பிட்ட நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா, மாணவர் அல்லது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் விசாக்களுக்கென விண்ணப்பித்துள்ள 300,000 விண்ணப்பதாரர்களில் சுமார் 20 சதவீதத்தினர் முதலாவது வருடத்தில் தங்களின் உயிரியல் இயல்பு நிலை பற்றிய தகவலை சமர்ப்பிக்க வேண்டி வருமெனவும் சிறுவர், முதியோர் மற்றும் இராஜதந்திரிகள் இத்தகைய தேவைப்பாட்டிலிருந்து விதிவிலக்குப் பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான புதிய குடிவரவு முறைமை: கனேடிய அரசினால் அறிமுகம்
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment