நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட பேசுவதற்கு அரசாங்கம் தயார்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராகவே உள்ளது .யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திறந்த கொள்கையுடனேயே செயற்பட்டது. ஆனால் அவற்றை தவறாக அர்த்தப்படுத்திய சர்வதேச பார்வையே இலங்கை மீதும் காணப்படுகின்றது என தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஆலோசகர் கலாநிதி ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது போலியான பிரசாரமாகும். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடிவடையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பதே உண்மை. புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இலங்கைக்குள் மீண்டும் செயற்பட சந்தர்ப்பம் தேடுகின்றனர். 10 வீதமான தமிழர்கள் சர்வதேசத்தில் வாழும் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆகவே இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
21 ஆவது நூற்றாண்டில் யுத்த பயங்கரவாதத்தை முழுமையாக முடிவிற்கு கொண்டு வந்த ஒரே நாடு இலங்கை தான். அதன் பின்னர் இராணுவத்தை விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்யவும் மீள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் செயற்படுத்திய நாடு இலங்கை தான். சுமார் 3 இலட்சத்து 83 ஆயிரம் மக்களை தற்காலிக முகாம்களில் வைத்து பராமரித்து மிக விரைவாக அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவது எளிதான விடயமல்ல.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக கூறப்பட முடியாது. அங்கு பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்கள் எந்தளவிற்கு பராமரிக்கப்பட்டார்கள் என்பது முக்கியமானதாகும். இலங்கை மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நிலையான முன்னேற்றத்தை நோக்கியும் நல்லிணக்கத்தை நோக்கியுமே பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்காக சரணடைந்த புலி போராளிகள் மற்றும் சர்வதேச புலி செயற்பாட்டாளர்களை கைது செய்து அவர்களை சிறையில் அடைக்காது உரிய புனர்வாழ்வு அளித்து நல்லிணக்கத்தை நோக்கமாகக்கொண்டு செயற்படுகின்றது. குறிப்பாக கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று இலங்கையில் சுதந்திரமாக செயற்படுகிறார். தமிழ் மக்களை பிரித்து நோக்கும் நிலை அரசாங்கத்திடம் கிடையாது. அனைவரும் இலங்கையர்கள் என்ற கொள்கையே தற்போது பின்பற்றப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.
இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ருத்திரகுமார் என்பவர் அமைத்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றார். அதே போன்று நோர்வேயில் நெடியவன் பாரிசில் விநாயகம் மற்றும் லண்டனில் இம்மானுவேல் எனப்படும் பாதிரியார் ஆகியோரும் உள்ளார்கள். இலங்கைக்கு வரும் விமானங்களில் 15 சதவீதமானவை தமிழர்களினாலேயே நிரம்பியுள்ளது. இவர்கள் நாட்டிற்குள் வந்து என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளது. எவ்வாறாயினும் சர்வதேசத்தில் வாழும் 10 வீதமான தமிழர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். எனவே இலங்கைக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறைவடையவில்லை. அதேபோன்று நிலையான நல்லிணக்கத்திற்காக நாடு கடந்த தமிழீழ அரசுடன் கூட பேசுவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றார் அவர்.
ஆனால் மேற்குல நாடுகளின் இலங்கை மீதான தவறான பார்வை மாற்றமடைய வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் உள்ளக அறிக்கையின் பிரகாரம் 7 ஆயிரம் பேர் மாத்திரமே யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் புலிகள் என்பதும் உண்மை. ஆகவே போலியான எண்ணிக்கைகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததற்கு சர்வதேச நாடுகளின் தலையீடுகளே காரணமாக அமைந்தது எனவும் தெரிவித்தார்.
1983 தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை இந்தியா ஆதிக்கம் செலுத்தி புலிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது. அதேபோன்று நோர்வே இவ்வாறு நாடுகளின் பேச்சைக் கேட்கப்போய் உள்நாட்டுப் போர் மூன்று தசாப்த காலமாக நீடித்தது. ஆனால் இலங்கை தனது நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இலங்கை இந்தியாவுடனோ சீனாவுடனோ அல்லது மேற்குலகத்துடனோ ஆழமான நெருக்கத்தை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட பேசுவதற்கு அரசாங்கம் தயார்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2013
Rating:

No comments:
Post a Comment