ஆசிரியர் ' பிரதீபா பிரபா' விருது மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஆசிரியர் திரு ப. ஞானராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பு
இலங்கை கல்வி அமைச்சினால் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி 'சிறந்த ஆசிரியர்' என்ற கௌரவத்தையுடைய கல்வி அமைச்சின் அதி சிறந்த விருதான 'பிரதீபா பிரபா' விருது 2013ம் ஆண்டில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஆசிரியர் திரு ப. ஞானராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இக்கௌரவிப்பு நிகழ்வு 05.10.2013 சனி காலை 10.00 மணியளவில் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் இலங்கை கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி கௌரவ டி எம் ஜயரத்தின அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.
ஆசிரியர் ஞானராஜ் அவர்கள் மன்னாரில் சமாதான நீதவானாகவும் சமூக சேவையாளராகவும் விளையாட்டுத்துறையில் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பவராகவும் மாவட்டத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்து வருகின்றார்.
இவர் 1999ம் ஆண்டிலிருந்து இன்றுவரை மன்னார் புனித சவேரியார் கல்லூரி உதைபந்தாட்ட அணியை தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக 1ம் 2ம் 3ம் இடங்களை பெற வைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.
2004ம் ஆண்டு இலங்கையின் சார்பில் இக்கல்லூரி அணியை தென்கொரியாவின் சியோல் நகர் வரை அழைத்து சென்று பெருமை சேர்த்தவர். அத்துடன் 2012ம் ஆண்டில் இலங்கை தேசிய 19 வயது உதைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஆசியக் கிண்ணப்போட்டிக்காக ஈரான் சென்று சிறப்பான பெறுபேற்றைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தவர்.
அத்துடன் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இவரால் உருவாக்கப்பட்ட 7 மாணவர்கள் ஆடி வந்திருக்கின்றார்கள். இவ்வருடம் 3 பேர் அணியில் உள்ளார்கள்.
இவர் ஆசியாவில் அங்கீகாரம் பெற்ற உதைபந்தாட்ட பயிற்றுநர். சிறந்த நடுவர். 2002 இ 2010 ல் கொழும்பில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் நடுவராக கடமையாற்றியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் 2008ல் சிறப்பு பயிற்றுநர் பயிற்சி பெற்றார்.
தற்போது மன்னார்; உதைபந்தாட்ட லீக் செயலாளராகவும் மாவட்ட மெய்வல்லுநர் சங்க செயலாளராகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மாவட்ட இணைப்பாளராகவும் பயிற்றுநராகவும் இஇலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்க மாவட்ட இணைப்பாளராகவும் தேசிய பயிற்றுநர் குழு உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.
தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழியாற்றல் உடையவர். சிறந்த அறிவிப்பாளர். சிறந்த எழுத்தாளர். தமிழ் மொழி பற்றாளர்.
இவர் புனித சவேரியார் கல்லூரியின் பழைய மாணவனாவார். மாதோட்ட துறைமுகமாம் மாந்தையை பிறப்பிடமாக கொண்ட அமரர் செல்வம் ஜெயசோதி தம்பதிகளின் புதல்வராவார்.
இவ்வாறான தகுதி கொண்ட இவரை கல்வி அமைச்சு கௌரவித்தமையையிட்டு மன்னார் சமூகம் பெருமைப்படுவதுடன் இவர் மேலும் மன்னார் மாவட்டத்தை பல வழிகளிலும் எதிர்காலத்தில் முன்னேற்ற இறையாசீர் வேண்டி வாழ்த்துகின்றோம்.
கல்லூரி பழைய மாணவர்கள்
ஆசிரியர் ' பிரதீபா பிரபா' விருது மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஆசிரியர் திரு ப. ஞானராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பு
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:


No comments:
Post a Comment