வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்-படங்கள்
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற கருத்தை நான் ஆணித்தரமாக முன் வைக்கின்றேன். மத வேற்றுமை இருந்த காலம் மாறி மனிதர்கள் மனிதர்களாக வாழ விரும்புகின்றனர்.
அது இஸ்லாமியருக்கு நடந்த கொடுமை என இந்துவும் இது இந்துவுக்கு நடந்த கொடுமை என இஸ்லாமியரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல் அது யாருக்கு நடந்தாலும் அதனை நாம் தட்டிக் கேட்க வேண்டும்.
இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் மனிதாபிமானம் கொண்டவர்கள் ஒன்று சேரவேண்டிய தேவை வந்துள்ளது. அதற்கான காலம் கனிந்துள்ளது.
முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது ஆனால் நாம் முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம், என்பது தொடர்பான அமைச்சு பொறுப்பினை அவரிடம் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
அதேவேளை முஸ்லிம் மக்கள் அலகு பற்றிய விடயங்களை பார்க்கும் பொறுப்பு அஸ்மினிடம் கொடுக்க உள்ளோம். அதேபோலவே மாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு அமைச்சு தொடர்பான அதிகாரங்களை கொடுக்க உள்ளோம்.
அதாவது குறித்த அமைச்சர்களுக்கு கீழ் இவர்கள் பொறுப்பாக இருந்து அந்த அமைச்சு தொடர்பாக பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ் முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலணி உறுப்பினர் ஒருவர் உரையாற்றுகையில்,
90 களில் நடந்த கசப்பான அனுபவங்களை நாங்கள் மறக்க தொடங்கியுள்ளோம் முன்னர் நீங்கள் புத்தளத்திற்கு சென்றால் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பார்கள். ஆனால் இன்று வரவேற்க தயாராக உள்ளனர்.
உங்கள் ஆட்சியிலையே அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. கடந்த கால கசப்பான அனுபவங்கள் இனிவரும் காலத்தில் எமது சமூகத்திற்கு வரக்கூடாது.
எந்த இடத்திலும் தமிழ் முஸ்லிம் என்ற உறவு பிரியக்கூடாது இதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த இப் பிரார்த்தனையில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்-படங்கள்
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:

No comments:
Post a Comment