சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மதகுரு கைது செய்யப்படாதது சிறுவர் சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கண்டனம்.
வவுனியா அட்டபகஸ்கட சிறுவர் இல்லத்தில் தமிழ் சிறுவனொருவன் பெளத்த மதகுருவொருவரினால்துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுவனால் வாக்குமூலம் கொடுக்கப்பட்டதுடன் வைத்திய அதிகாரியினால் அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும் சம்பந்தப்பட்ட மதகுரு இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதானது எமது நாட்டில் சிறுவர்களுக்குள்ள சட்டதிட்டங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் .
அட்டபகஸ்கட சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நீலியாமோட்டையைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனொருவன் அப்பகுதி விகாராதிபதியும் குறித்த சிறுவர் இல்லக் காப்பாளருமான மதகுருவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டும் அவர் இதுவரை கைது செய்யப்படாமை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
தாய் , தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு சமூகத்தில் இருந்து போதுமான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்குடனேயே சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டு அதில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் .
இவ்வாறான நிலைகளுக்கு அப்பால் சில விஷமிகளால் துஷ்ட எண்ணத்துடன் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லங்களில் வாழும் சிறுவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது .
அட்டபகஸ்கட சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவர்களை சிறுவர் தொடர்பில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பார்வையிடுவதற்கே அஞ்சும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட மதகுரு தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி சட்டத்தின் முன்னால் தப்பித்துள்ளமையும் இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதும் இலங்கையில் சிறுவர் சட்டங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது .
1929 என்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாட்டு தொலைபேசி இலக்கங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையிலும் இவ் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரும் சிறுவர் தேசிய பாதுகாப்பு அதிகார சபையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் .
அது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது அங்கிருந்த சிலர் கற்களை வீசியும் தடிகளைக் கொண்டும் தாக்க முற்பட்ட போது அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பியுள்ளனர் .
எனவே , இத்தனை சம்பவம் நடந்தும் மதகுரு கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மதகுரு கைது செய்யப்படாதது சிறுவர் சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கண்டனம்.
Reviewed by Admin
on
October 19, 2013
Rating:

No comments:
Post a Comment