சனியன்று நேர்முகத்தேர்வு: கடிதங்கள் தபாலகத்தில் தேங்கி கிடப்பு
வவுனியா கல்வியற் கல்லூரி பிரிவு ஒன்றிற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருப்பதாகவும் அதற்கான நேர்முக கடிதங்கள் இன்னும் விநியோகிக்கப்படாமல் வவுனியா தபாலகத்தில் தேங்கி கிடப்பதாகவும் மாணவர்கள் விசனம் தெரிவித்தனர்.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் கட்டிடத்தில் இயங்கும் இளமாணி கற்கைப்பீடத்திற்கு புது மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதற்காக வடமாகாணத்திலிருந்து 96 பேர் நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நாளை மறுதினம் (19) ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருகின்றது.
இந்த நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ள போதிலும்; அந்த கடிதங்களே தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட மாணவர்கள் வவுனியா தபால் நிலையத்திற்கு சென்று வினவியபோது நேர்முகத்தேர்விற்கான கடிதங்கள் தபாலகத்தில் கிடப்பில் இருந்தமை தெரியவந்தது.
இது தொடர்பாக வவுனியா தபால் நிலையத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இது எங்கள் ஊழியர்களினால் விடப்பட்ட தவறு என்றும், வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான கடிதங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட்டதுடன், வடமாகாணத்தின் பிற மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான கடிதங்கள் அந்தந்த தபால் நிலையங்களுக்கு இன்று மாலைக்குள் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு தவறு ஏற்படக் காரணமாகவிருந்த வவுனியா தபாலகத்தைச்சேர்ந்த ஊழியர்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இருந்தும் நாளை (18) விடுமுறை என்பதனால் வடமாகாணத்தில் பிற மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய கடிதங்களை எதிர்வரும் சனிக்கிழமையே (19) பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சனியன்று நேர்முகத்தேர்வு: கடிதங்கள் தபாலகத்தில் தேங்கி கிடப்பு
Reviewed by Admin
on
October 17, 2013
Rating:

No comments:
Post a Comment