உயிர் அச்சுறுத்தல்: யாழ். ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்கள் ஐவரும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜிடம் தமது முறைப்பாட்டினை பதிவு செய்தனர்.
முறைப்பாட்டை பதிவு செய்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வலி. வடக்கு கட்டுவான் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து நேற்றைய தினம் குறித்த பிரதேசத்திற்கு நாம் செய்தி சேகரிக்க சென்றிருந்தோம்.
அங்கு உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்ள வீடுகளை இராணுவத்தினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி கொண்டு இருந்தார்கள். அதனை நாம் ஒளிப்படம் எடுத்தோம்.
அதனை அவதானித்த இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஓடி வந்து எம்மை சுற்றி வளைத்து எம்மிடம் இருந்த ஒளிப்பட கருவி, ஒலிப்பதிவுக்கருவி என்பவற்றை வலுக்கட்டாயமாக பறித்து அதில் இருந்த சகலவற்றையும் அழித்தனர்.
அத்துடன் ´இச் சம்பவம் தொடர்பாக ஏதாவது படங்களோ செய்திகளோ ஊடகங்களில் வெளியானால் அதன் பின்னர் நடப்பதே வேறு அதன் பின்னர் நாம் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டி வரும்´ என தன்னை இராணுவ பிரிகேடியர் என அறிமுகம் செய்த இராணுவ அதிகாரி மிரட்டி இருந்தார்.
நேற்றைய இச்சம்பவம் தொடர்பான செய்திகள், படங்கள் என்பன தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவத்தினரால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்பதனால் நாம் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
அதேவேளை நேற்றைய தினம் அப்பகுதிக்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
உயிர் அச்சுறுத்தல்: யாழ். ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
Reviewed by Author
on
October 29, 2013
Rating:

No comments:
Post a Comment