தமிழ் மக்களின் ஒற்றுமைகாய் ஆனந்தசங்கரி,இராயப்பு ஜோசப் அவர்களுக்கு வேண்டுகோள்.
அதி . வணக்கத்திற்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு, ஆண்டகை இல்லம் ,மன்னார் .
அன்புடையீர் ,
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு குறிப்பாக அதற்கு முன்னோடியாகிய தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றித் தாங்கள் எடுக்கும் பெருமுயற்சி சம்பந்தமாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன் . அண்மையில் வடமாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட சில உறுப்பினர்கள் முல்லைத்தீவில் சத்தியப் பிரமாணம் செய்ய எடுத்த முடிவை தாங்கள் தலையிட்டு வெற்றிகரமாக நிறுத்திய செய்தியே இக்கடிதத்தை உடனடியாக எழுதத் தூண்டியது .
தங்கள் முயற்சியைப் பாராட்டும் அதேவேளையில் தங்களுக்குரிய மரியாதையை அளித்து மிக்க தயக்கத்துடன் நான் அதிலுள்ள சில குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . தங்களின் இம்முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உண்மையாகவும் , நேர்மையாகவும் , இன ஒற்றுமைக்காகவும் உழைக்கின்ற சில தலைவர்களைப் பற்றி , ஒருசில சுயநலம் விரும்புபவர்களால் தப்பான விமர்சனத்துக்கு இலக்காகுவதோடு பின்னணி தெரியாத சில அப்பாவிகளும் தப்பாக எண்ண வழிவகுக்கும் . இத்தகையவர்களை எல்லா வேளைகளிலும் குற்றவாளிகளாக ஆக்கக்கூடிய பாதகமான நிலையைத் தவிர்க்கவேண்டும் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இக்கட்டான நிலையேற்படும்வேளையில் அவர்களை மீட்டெடுப்பது இதுதான் முதற்தடவையல்ல . இச்சந்தர்ப்பங்களில் ஒரு சிறு குழு தம்மைப் பாதுகாப்பதற்கு தங்கள் மீது சாய்வதை தாங்கள் அனுமதிக்கக்கூடாது . முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும்கூட ஏகமனதாக முடிவெடுக்க வேண்டிய தேவையிருந்தும் அவ்வாறு செயற்படவில்லையென்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன் . முதலமைச்சர் வேட்பாளர் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படக்கூடியவர் என்பதோடு அவர் என்னுடைய நண்பரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாய்ப் பயின்றவருமாவார் .
மேலும் சொல்லப்போனால் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஏற்பட்டிருந்த பிளவை நிவிர்த்தி செய்ய முயற்சித்து உண்மை நிலையை அறிந்தபின் அதில் தலையிடாமல் ஒதுங்கியவருமாவார் . எனவே அவரின் தெரிவில் எனக்கு ஒருவித அபிப்பிராயபேதமும் இருக்கவில்லை . ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எவருக்கேனும் ஏதாவது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதா ? அப்படியானால் அது நிறைவேற்றப்பட்டுள்ளதா ? என்பதே தற்போதைய கேள்வி ! கூட்டமைப்பில் உள்வட்டம் ஒன்றிருப்பதால் அவர்களாலேனும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா ? அன்றேல் முதலமைச்சர் மீது திணித்துவிடப்பட்டதா ? முதலமைச்சர் கூட்டமைப்பைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு இன்னும்பல விடயங்கள் உண்டு .
அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டிருப்பின் பல தப்பபிப்பிராயங்களையும் - பிரச்சனைகளையும் தவிர்திருக்க முடியும் .
ஏனெனில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்களே அல்லாமல் தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அல்ல . ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளரும் ஏதோ ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் . கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னிலை வேட்பாளன் நானாக இருந்தும் , தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களையும் நியமன தினத்தில் அன்று கண்டபின் இன்றுவரை காணவில்லை .
அவர்கள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் பா . உ சிறீதரன் அவர்களின் படமும் அவரது செய்தியும் , மூன்று வேட்பாளர்களின் படமும் அவர்களின் இலக்கங்கள் புள்ளடியிடப்பட்டு காட்டப்பட்டிருந்தன . அவர்கள் நடத்திய பல கூட்டங்களில் இம்முவருக்குமே வாக்களிக்கும்படி கூறப்பட்டதே தவிர ஏனைய நால்வரைப் பற்றிக் குறிப்பிடவில்லை . கிளிநொச்சி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் அல்லது ஒரே கூட்டத்தில் வைத்து கட்சித் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்படவில்லை . முதலாவது கூட்டத்தில் இம்மூவரையும் ஆதரிக்குமாறு இருகட்சித் தலைவர்கள் முறையே மாவை . சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் பா . உ சிறீதரனும் , கரைச்சி பிரதேச சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் பரப்புரை செய்தனர் . ஏனைய நால்வருக்கும் இதுபற்றி எதுவித தகவல்களும் கொடுக்கப்படவில்லை . மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரியநேந்திரன் , யோகேஸ்வரன் ஆகியோரும் கொழும்பிலிருந்து மனோகணேசன் , பாஸ்கரா ஆகியோரும் இம்மூவரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர் .
இதுதவிர தமிழரசுக் கட்சியின் நியமன பா . உ எம்.ஏ. சுமந்திரன் பல கூட்டங்களில் பேசியது மட்டுமல்ல கிளிநொச்சி நகர்ப்புறத்திலும் , சந்தையிலும் இவர்களை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தார் . மிகமோசமான செயல் என்னவெனில் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் கிளிநொச்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை . மொத்தத்தில் கட்சித் தலைவர்கள் உரையாற்றுகின்ற ஒரு கூட்டத்தையேனும் கிளிநொச்சியில் நடத்தவில்லை . பல்வேறு கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள் பற்றிய கட்டுரைகள் முக்கியமாக சில தினசரிகளில் பெருமளவில் வெளிவந்தன . ஆனால் என்னைப்பற்றிய கட்டுரைகள் எதுவும் பிரசுரிக்கப்படாமையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள் !
ஆண்டகை அவர்களே ! அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏன் - எவ்வாறு மிகமோசமாக நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது பற்றி நீங்கள் அறிந்துகொள்ள முயற்சிக்காதது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது . தங்களுக்கு என்னை 35 - 40 வருடங்களாகத் தெரியும் . நாமிருவரும் பல தடவைகள் சந்தித்தமையைத் தவிர அதற்கும் மேலாக கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகளுக்கு மேலாக பலநாட்கள் தொடர்ந்து ஒஸ்றியா நாட்டில் சில கருத்தரங்குகளில் சந்தித்துள்ளேன் . இந்தச் சந்தர்ப்பங்களில் நாம்பல விடயங்களைப்பற்றி பேசக்கூடிய வாய்ப்புக் கிட்டியிருந்தது . என்னுடைய அரசியல் சிந்தனைபற்றி முற்றுமுழுதாக அறிந்திருந்தவர் நீங்கள் ! பல விடயங்களில் எமக்கு எதுவிதமான அபிப்பிராய பேதமும் இருக்கவில்லை .
பல்வேறு விடயங்களில் நான் வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பவனாக இருந்தாலும் , தங்களின் ஆலோசனைகள் ஏதாவது இருந்திருப்பின் அவற்றை ஏற்காது மறுத்தவனல்ல . அண்மையில் எனது சில கடிதங்கள் அடங்கிய கோவையை தங்களிடம் கையளித்திருந்தேன் ! நீங்கள் அவற்றைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன் ! அதில் கூறப்பட்டவை அத்தனையும் உண்மை ! நான் பொய்யைப் பேசுவதுமில்லை . எழுதுவதுமில்லை . அக்கடிதத்தைத் தங்களுக்கு கையளித்ததன் நோக்கம் , தாங்களும் என்னைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் , கள நிலமையை நீங்கள் நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே !
அண்மையில் எனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி தமிழர்களுக்கோ , முஸ்லிம்களுக்கோ , சிங்களவர்களுக்கோ அல்லது ஏதாவது இனத்தை , மதத்தைச் சேர்ந்த எவருக்குமோ அன்றேல் ஆட்சியாளருக்கோ , எதிர்க்கட்சியாளருக்கோ மகிழ்ச்சிதரும் விடயம் அல்ல என்பது , ஆண்டகை அவர்களே தங்களுக்கு ஏன் தோன்றவில்லை . என்னை தோற்கடிக்க வேண்டுமென்ற முடிவு மக்களுடையதாக இருந்திருந்தால் நான் வருத்தப்படமாட்டேன் .
என்னுடைய வருத்தமெல்லாம் , வெளிநாடுகளில் உருவாகிய ஒரு சதித்திட்டம் நாட்டில் பல்வேறு குழுக்களால் அமுல் நடத்தப்பட்டுள்ளது என்பதே ! கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பலமுள்ள குழுவும் , புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் இதில் முக்கிய பங்கெடுத்துள்ளனர் . இந்தத் துர்ப்பாக்கியமான நாடகத்தில் கதாபாத்திரங்கள் யாரென்பதையும் அல்லது இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டில் யார் பங்கெடுத்திருந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள் !
என்னை அரசியலிலிருந்து ஒதுக்கிவிட இம்முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும் , எனது மக்களுக்கு நேர்மையாகவும் பலமாகவும் உழைக்கக் கடமைப்பட்டுள்ளவனாகையால் இம்முயற்சி அவ்வளவு இலகுவானதல்ல . இவை பெரும் அனர்த்தத்திலேயே முற்றுப்பெறும் . தங்கள் பாட்டன் , பூட்டன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோரோடு சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரால் ஒரு வருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட சதிமுயற்சி கடந்தமாதம் நடந்தேறிய தேர்தலுடன் முடிவுற்றது .
ஒரு நேர்மையுடனும் , அர்ப்பணிப்புடனும் அரசியலிலும் , சமூக சேவையிலும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த எனது சேவை புறக்கணிக்கப்பட்ட ஏழைகளுக்கும் , தேவையானவர்களுக்கும் , மறுக்கப்பட்டுள்ளதே தவிர வேறொன்றுமில்லை . இனப்பிரச்சனைத் தீர்வுக்கு நீண்ட காலமாக சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தியும் , அதற்கு மாற்றீடாக இந்திய முறையிலான ஆட்சி முறையையும் வற்புறுத்தி வந்துள்ளேன் . மேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சகல தமிழ்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிபந்தனையற்று ஏற்று , 2010 தொடக்கம் இன்றுவரை சகல உள்ளுராட்சி மன்ற , மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றிக்காக தீவிரமாக உழைத்து வருகிறேன் .
தங்களைப் போன்றவர்களின் பெருமுயற்சியினாலும் , எங்களைப் போன்றவர்களின் பல இழப்புக்களோடு , சுய கௌரவத்தையும் இழந்து , முன்வந்து எடுத்த பெருமுயற்சியால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இன ஒற்றுமையை திட்டமிட்டு இல்லாமல் செய்யுமளவுக்கு எங்கேயோ ஓரிடத்தில் பிழை நடந்திருக்கிறது என்பதை தாங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன் . உடன் நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர் செய்யுங்கள் . அன்றேல் கூட்டணி தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இயங்க இடமுண்டா ? என்பதையும் அறிந்து சொல்லுங்கள் !
வீ . ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழ் மக்களின் ஒற்றுமைகாய் ஆனந்தசங்கரி,இராயப்பு ஜோசப் அவர்களுக்கு வேண்டுகோள்.
Reviewed by Author
on
October 29, 2013
Rating:

No comments:
Post a Comment