ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் பதவியேற்றார் விக்கினேஸ்வரன்-தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் பலர் புறக்கணிப்பு
வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து சற்று முன்னர் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முதலில் சி.வி விக்னேஸ்வரன் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி. விக்னேஸ்வரன், விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் பலர் புறக்கணிப்பு
வடமாகாண முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடமாகாண மக்களை கருத்திற் கொண்டு முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என கூட்டமைபபின் ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.
எனினும் முதலமைச்சர் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்துக்கான வழி எனவும் அதுவே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் விருப்பம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் பதவியேற்றார் விக்கினேஸ்வரன்-தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் பலர் புறக்கணிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 07, 2013
Rating:

No comments:
Post a Comment