தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கித் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'வடமாகாணசபைத் தேர்தல் முடிவடைந்து 02 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாகாணசபைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பல பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக மனிதாபிமானப் பணிகள் அதற்கும் அப்பால் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டிய பணிகள் என நிறையப்பணிகள் உள்ளன. இந்த நிலையில், இந்த அரசாங்கம் மக்களினுடைய ஜனநாயகப்பணிகளை மதித்து முதலமைச்சரையும் அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தாலே நம்பிக்கை வைத்த மக்களினுடைய தேவைகளை நிறைவு செய்வதற்குரிய காத்திரமான பணிகளைச் செய்ய முடியும்.
அந்த வகையில் எமது முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்திற்கு பல நல்லிணக்க சமிக்ஞைகளை காட்டியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகளும்; கூட இடம்பெற்றுள்ளன. இந்த வடமாகாணசபை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பணியாற்றுவதற்கு அரசாங்கம் சுதந்திர செயற்பாட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
எனினும், 02 மாதங்களாக துரதிஷ்டவசமாக செயற்பாட்டுக்கு பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டைகளை அரசு இட்டு வருகின்றது. ஆளுநர் மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருக்கின்றார். பிரதம செயலாளர், ஆளுநர் கூறும் விடயங்களையே கேட்டுக்கொண்டிருக்கின்றார். இவ்வாறான தடங்கல்கள் எமக்கு ஏற்பட்டுள்ளன. எனவே இவ்வாறான தடங்கல்கள் நீக்கப்படவேண்டும்.
எனினும், நாம் எண்ணுகின்றோம் நாளடைவில் சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றது என்று.
இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் கூட வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களினுடைய வாழ்வாதாரம் உட்பட இந்த மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
தென்பகுதியில் அடுத்த வருடம் வரப்போகும் தேர்தலை நோக்காக கொண்டே வரவு - செலவுத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையில் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெருமளவில் பெற்றிருந்தாலும் கூட சவால்களுக்கு மத்தியிலேயே மக்களுக்கு பணியாற்ற வேண்டியுள்ளது.
எனினும், சர்வதேச சமூகம் எம்மோடு இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை பிணை எடுக்கும் செயற்பாடாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக உள்ளது.
இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் நாம் பல அனுபவங்களையும் பட்டறிவையும் கொண்டுள்ளோம். எனவே இப்பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாகவும் மானசீகமானதாகவும் இருக்கும் என நம்புகின்றோம்'
தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
November 24, 2013
Rating:

No comments:
Post a Comment