வரவு -செலவுத்திட்ட தோல்விக்கு காரணமானவர்கள் விசாரணைகளின் பின் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் - மாவை
கட்சியின் பணிப்புரைக்கு அமைய நடவாமல் 2014 ஆம் ஆண்டின் வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க மூல காரணமாக இருந்த அனைத்து உறுப்பினர்களும் குறித்த விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்று, முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட, பிரதேச சபைகளின் சிலவற்றில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கட்சியின் உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கட்சி மத்திய குழு எடுத்திருக்கும் தீர்மானத்தை அறிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்கக் கூடாது. ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. இது எழுத்து மூலமாக அந்தந்த சபை சார்ந்த உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தோம். அந்த பணிப்பையும் வழிகாட்டலையும் மீறி வரவு - செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் எதிராக வாக்களித்து தோற்கடித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளை, விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கான விசாரணைக் குழுவில் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் இணைப்பாளராகவும் அதேபோன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் இணைப்பாளராகவும் இருந்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றார்.
வரவு -செலவுத்திட்ட தோல்விக்கு காரணமானவர்கள் விசாரணைகளின் பின் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் - மாவை
Reviewed by NEWMANNAR
on
January 29, 2014
Rating:

No comments:
Post a Comment