இந்திய வீட்டுத்திட்டத்தில் வாய்ப்புக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகள் தெரிவிலும் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனக்கூறி, அழுத்தமும், அரசியல் தலையீடுமின்றி தங்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும், மீள்குடியேறிய மக்களுக்கான நலன்புரி அமைப்பினரும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தனர்.
இதன்போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பியுள்ளார்கள்.
வவுனியா மன்னார் வீதியிலிருந்து வவுனியா அரச செயலகத்திற்குப் பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரைக் கையளிப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்றனர்.
எனினும் அவர்களை அரச அலுவலக வளவுக்குள் செல்லவிடாமல் பிரதான வாயிலைப் பொலிசார் மூடியிருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ9 வீதியை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரஜைகள் குழு, மற்றும் மக்களுக்கான நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்க அதிபரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துக் கூறியதையடுத்து, அரச செயலக வளவுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு 4500 வீடுகள் மாத்திரமே கிடைத்திருப்பதாகவும், ஆனால் மாவட்டத்திற்கு 7000 வீடுகள் தேவையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் வீடற்ற அனைவருக்கும் இந்தியா வீடுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதனால், முன்னுரிமை அடிப்படையிலேயே பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேநேரம் அரச அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளுக்கமைவாகவே பணியாற்ற வேண்டியிருப்பதனால், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தங்களுக்குக் கடினமானது என்றும், தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் செயற்படுவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கென தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜரை உடனடியாக அனுப்பி வைப்பதாகவும், இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள நிலைமைகள் குறித்த தமது சிபாரிசையும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களையும் தேவைகள், கஸ்டங்களையும் நேரடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்திய வீட்டுத்திட்டத்தில் முதலாம் இரண்டாம் கட்டங்களில் தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்ததாகவும், அப்போது, மூன்றாம் கட்டமாகப் பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் அது நடைபெறாத காரணத்தினாலேயே இந்தப் பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மீள்குடியேறியவர்களுக்கென வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளும் பழுதடைந்து, கூரைகள் சேதமடைந்திருப்பதனால், அந்த வீடுகளில் வசிக்க முடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும், இதனால் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துப் பராமரிப்பதும், வசிப்பதும் பெரும் கஸ்டமாக இருக்கின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட சில கூரைத்தகடுகள், சில சீமெந்து பக்கற்றுகள் தவிர வேறு எந்த வீடமைப்பு உதவியும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பலர் தெரிவித்தனர்.
ஓமந்தை, செட்டிகுளம், நெடுங்கேணி போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்திய வீட்டுத் திட்டமானது, போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டிருந்த போதிலும், வெளி மாவட்டங்களில் போர்க்காலத்திலும் வசதியாக வாழ்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் புதிய இடங்களில் காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசியல் இலாபம் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனினும் உண்மையாகவே போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளவர்களாகிய தங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எந்தவிதமான அழுத்தங்களும், அரசியல் தலையீடுகளுமின்றி, வீடுகள் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் கோரப்பட்டிருக்கின்றது.
இந்திய வீட்டுத்திட்டத்தில் வாய்ப்புக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
January 29, 2014
Rating:

No comments:
Post a Comment