அண்மைய செய்திகள்

recent
-

தமிழை சர்வதேசமயப்படுத்தியதில் தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு தனித்துவமானது - வவுனியாவில் தமிழ் நேசன் அடிகளார்


  தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணி தமிழ் உலகின் எல்லைகளைக் கடந்ததுளூ உலகின் ஐந்து கண்டங்களையும் தளமாகக்கொண்டதுளூ உலகம் தழுவியது. தமிழ் மொழியை சர்வதேசமயப்படுத்துவதில்  தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு தனித்துவமானதுளூ தன்னிகரில்லாதது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

  கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பதினாறாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு தனிநாயகம் அடிகளார் நினைவுச் சொற்பொழிவு ஆற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவி நிறுவனத்தின் இயக்குனரும், மன்னார் தமிழ்ச் சங்கம் மற்றும் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவரும், 'மன்னா' என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்பும்போது கூறியதாவது:

 தனிநாயகம் அடிகளாரைப்போனறு அல்லது அவரைவிட மேலாகத் தமிழ் அறிந்த பண்டிதர்கள், புலவர்கள், தமிழ் அறிஞர்கள்; ஐம்பதுகளின் இறுதியில், அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவிலும் இருந்துள்ளனர். இலங்கையிலும் இருந்துள்ளனர். தமிழறிந்த இந்தப் புலவர்கள், பண்டிதர்கள், அறிஞர்களில் இருந்து என்ன அடிப்படையில் தனிநாயகம் அடிகளார் வேறுபட்டு நிற்கின்றார் அல்லது தனித்துவமானவராக விளங்குகிறார் என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் புலவர்கள் பண்டிதர்கள் தமிழ்; அறிஞர்கள் எல்லாம் தமக்குள்தாமே தமிழின் பெருமையச்சொல்லி சொல்லி மகிழ்ந்திருந்தனர். 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடி எங்கள் குடி' என்று தமிழரின் பழம்பெருமைகளைச் சொல்லி புளகாங்கிதம் அடைந்தனர்.

  ஆனால் தனிநாயகம் அடிகளார் பாரதியாரின் கனவை நனவாக்கினார். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்', 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை அவர் நனவாக்கினார். ஆம், தமிழை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்றார். உலகப்பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியின் சிறப்பைக்குறித்து விரிவுரைகள் ஆற்றினார். ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒரு வருடத்தில் மட்டும் இருநூறு விரிவுரைகளை வழங்கியிருக்கின்றார்.

 தனிநாயகம் அடிகளார் தமிழை உலக வரைபடத்தில் பொறித்தவர் என்றும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அவரைப்போல் தமிழ்ப்பணி புரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்றும் அறிஞர் பெருமக்கள் அடிகளாரைக் குறித்துக் கூறிய வார்த்தைகள் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. 'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வார்த்தைகளின்படி தமிழ் உள்ளளவும் தனிநாயகம் அடிகளாரின் பெயரும் வாழும்.






தமிழை சர்வதேசமயப்படுத்தியதில் தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு தனித்துவமானது - வவுனியாவில் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Author on January 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.