யாழில் இ.போ.ச. பேரூந்துகள் மீது தாக்குதல்; போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதம்
யாழ்.குடாநாட்டில் இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் உள்ளூர் தனியார் மினி பஸ் ஓட்டுநர், நடத்துநருக்குமிடையில் நேற்றும் முறுகல் நிலை தொடர்ந்தமையால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்து பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர்.
நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை- யாழ். வழிப் பாதையில் சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்தின் (780) ஓட்டுநர் புளியங்கூடல் பகுதியில் இடைமறிக்கப்பட்டு தனியார் மினி பஸ் நடத்துநரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவ்விடத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகளை ஏற்றிவர யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தின் நடத்துநரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவங்களைக் கண்டித்து நேற்று முன்தினம் மாலை வரை இலங்கை போக்குவரத்துச் சபைக்கான யாழ்.டிப்போவினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும் மாணவர்களும் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். யாழ். டிப்போவினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இவ்விவகாரத்தில் பொலிஸார் தலையிட்டு சமரசம் காணப்பட்டு நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்று காலைவரை இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். டிப்போ பேரூந்துகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டன.
நேற்றுக்காலை சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்திற்குச் சொந்தமான யாழ். - பருத்தித்துறை (750) வழிப்பாதை பேரூந்து யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இடைமறிக்கப்பட்டு அதன் ஓட்டுநர், யாழ்.- பருத்தித்துறை வழிப் பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் மினி பஸ்ஸினரால் தாக்கப்பட்டார்.
இதனைக் கண்டித்து நேற்றும் இலங்கைப் போக்குவரத்துச்சபையின் பேரூந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து யாழ்.குடாநாட்டில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேரூந்துகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனால் பருவ கால சீட்டில் பயணம் செய்யும் மக்களும் பாடசாலை மாணவர்களும் நேற்றும் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகினர். யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் சன நெரிசலும் ஏற்பட்டது.
இரு தரப்பினரின் முரண்பாட்டையடுத்து அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடும் என்ற அச்சத்தில் பெருமளவிலான கலகமடக்கும் பொலிஸார் யாழ். மத்திய பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இரு தரப்பினருடனும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொலிஸார் முரண்பாடுகளைத் தவிர்க்கும் முகமாக யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் மணிக்கூட்டு வீதியில் தனியார் மினி பஸ்களை நிறுத்துவதற்கு தடை விதித்தனர். இருப்பினும் தனியார் மினி பஸ்கள் தமது சேவையைத் தொடர்ந்தனர்.
இவ்விருநாள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை .யாழ். பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இ.போ.ச. பேரூந்துகள் மீது தாக்குதல்; போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதம்
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment