மன் /புனித ஆனாள் ம.ம.வி – வங்காலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி – 2014 - படங்கள்
மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வு தடகள நிகழ்வுகள் 30.01.2014 வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ சிவசக்தி ஆனந்தன் (பாராளுமன்ற உறுப்பினர்- வன்னி மாவட்டம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக ஜனாப் ஆ.ஆ. சியான் (வலயக்கல்விப் பணிப்பாளர் – மன்னார்) அவர்களும், விசேட விருந்தினர்களாக அருட்பணி ளு. ஜெயபாலன் (பங்குத்தந்தை – வங்காலை), திரு S. தாவீது (கோட்டக்கல்விப் பணிப்பாளர்- நானாட்டான்), திரு. மதீன் (உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் – மன்னார்), திரு. P.கருணாதிலக்க (சிரேஸ்ட செயற்றிட்ட முகாமையாளர் பொறியியலாளர் – வங்காலை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முதலில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசைக்குழுவினரால் இன்னிசை வழங்கியும் , மாலைகள் அணிவித்தும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களால் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம், பாடசாலைக்கீதம் என்பன மாணவர்களால் இசைக்கப்பட்டது. பின்பு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
முதலில் மூன்று இல்லங்களுக்கிடையிலான அணிநடை நிகழ்வு இடம் பெற்றது. இது அனைவரையும் கவர்ந்த ஒன்றாக அமைந்திருந்தது. இவ்வணிவகுப்பு மரியாதையை பிரதம விருந்தினர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும், கல்லூரி முதல்வர் அவர்களும் ஏற்றுக் கொண்டனர். பின் விளையாட்டு மாணவத் தலைவர்களால் ஒலிம்பிக் தீபம் பவனியாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான சத்தியப்பிரமாணமும், நடுவர்களுக்கான சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.
தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. முதலில் சகல வயது ஆண், பெண் இருபாலாருக்குமான 200 மீற்றர் ஓட்டமும், 17, 19 வயது அண்களுக்கான 400 மீற்றர் ஓட்டமும் இடம் பெற்றது. பின் எமது கல்லூரி முதல்வர் அவர்களினால் இக்கல்லூரியின் வளர்ச்சிப் பற்றியும், இதன் அண்மைக்கால நிகழ்வுகள் பற்றியும், தேவைகள் பற்றியும், தலைமையுரையில் எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் மாணவர்கள் எப்போதும் அதிபர், ஆசிரியர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டும் என்றும், பாடசாலைக்கு கழங்கம் ஏற்படுத்தாமல் நற்பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கல்லூரிக்குத் தேவைப்படும் உதவிகளைத் தாம் செய்ய இருப்பதாகவும் கல்லூரி முதல்வர் கேட்டப்படி திறந்த வெளியரங்கு மேடை ஒன்றைக் கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார்.
பின் வலயக்கல்விப் பணிப்பாளர் தனது உரையில் இப்பாடசாலையானது பல கல்விமான்களை உருவாக்கிய பெருமையுடையது மன்னார் மாவட்டத்திலே பல நிறுவனங்களின் தலைவர்கள் இங்கிருந்தே உருவாக்கம் பெற்றனர் எனவும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வி அதிகாரிகள், பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரியையே சாரும் எனவும் மாணவர்கள் ஊக்கமுடன் கல்வி பயின்று உயர்ந்த சமூகமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
பின் அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களால் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வும் பின் கல்லூரி இடைநிலைப்பிரிவு மாணவர்களால் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்வும் காண்பிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது. பின் ஆண்பெண் இரு பாலாருக்குமான (13, 15, 17, 19, 21) வயது பிரிவினருக்கான அஞ்சலோட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. பின் புனித டிலாசால் பாடசாலைகளுக்கிடையிலான அஞ்ஞலோட்டமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக பு.ளு. பிரிவுகளுக்கு உட்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டமும் இடம் பெற்றது.
தொடர்ந்து பாடசாலைக்கு நிதி உதவி செய்தவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பின் மாலை 6.00 மணிக்கு விளையாட்டுச் செயலாளர் ஆசிரியர் திரு கு.ளு.ஐ லெம்பேட் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் , சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் றெனால்ட் இல்லம் 100 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், பஸ்ரி இல்லம் 83 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கோமஸ் இல்லம் 80 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. இறுதியில் தமிழ்மொழி வாழ்த்துடன் கொடிகள் இறக்கப்பட்டு விருந்தினர்களை மகிழ்விக்கும் முகமாக மாணவர்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.
மன் /புனித ஆனாள் ம.ம.வி – வங்காலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி – 2014 - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 27, 2014
Rating:
No comments:
Post a Comment