அண்மைய செய்திகள்

recent
-

விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்திடமும் கேள்வி கேட்கவேண்டும்: மனோ கணேசன்


சர்வதேச விசாரணை கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிப்பவர்கள், 13ஐயும், 13க்கு மேலதிகமாகவும் வடமாகாண சபைக்கு அதிகாரம் வழங்குவோம் என ஐநா செயலாளர் நாயகத்துக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு, இன்று அதை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கத்தை நோக்கியும் கேள்வி எழுப்ப வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபையின் தீர்மானங்கள் தொடர்பில் தென்னிலங்கை கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில், கருத்து கேட்டபோது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வடமாகாண சபை வரம்பு மீறி விட்டது என ஐக்கிய தேசிய கட்சி சொல்கிறது. வடமாகாண சபையை கலைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சொல்கிறது.

வடமாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிவிட்டது எனவும், 13ம் திருத்தத்தில் சர்வதேச விசாரணை கோர அதிகாரம் இல்லை எனவும் ஐதேக எம்பியும், பிரபல சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ச சொல்லியுள்ளார்.

இந்த சட்ட கருத்து நீதிமன்ற விவாதத்திற்கு உரியது. வடமாகாண சபையை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு சிலர் திட்டமிடுவது எனக்கு தெரியும். அதற்குதான் இந்த கருத்து அடித்தளம் இடுகிறது.

13ம் திருத்தத்தில் இருக்கின்ற பெரும்பாலான அதிகாரங்கள் இன்னமும் வடமாகாண சபைக்கு வழங்கப்படவில்லை என்பது பிரபல சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவுக்கு தெரியாதது அல்ல.

பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படாதது ஒருபுறம் இருக்க, தெற்கின் முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரங்கள் கூட இன்னமும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கபடவில்லை.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், சட்ட அறிஞருமான விக்னேஸ்வரனிடம் கேட்டால், வழங்கப்படாத அதிகாரங்கள் பற்றிய பட்டியலை தெளிவாக தருவார். இது இந்த அரசு செய்துவரும் அப்பட்டமான அரசியல் சாசன மீறல்.

ஆகவே அரசியல் சாசன மீறல் என்று வடமாகாண சபைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அதே அரசியல் சாசன மீறல் என்று சொல்லி வடமாகாண சபை, மத்திய அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அதனால்தான் விக்னேஸ்வரனை விமர்சிக்கும் சட்டத்தரணிகள் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சொல்கிறேன்.

வடமாகாண சபையை கலைக்க வேண்டுமென்று சொல்லும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில பற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை.

மாகாண சபைகளே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு மாகாண சபையில் அமைச்சு பதவிகளையும் வகித்துகொண்டு, இன்று அதே மாகாணசபைக்கு போட்டியிடுவதற்காக நூறு, நூறு ரூபாய்கள் பணம் சேகரிக்கும் நபர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இவர்களை எதிர்வரும் தேர்தலுக்கு பிறகு மேல்மாகாணசபைக்கு சென்று நேரடியாக கவனித்து கொள்கின்றேன் என்றார்.
விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்திடமும் கேள்வி கேட்கவேண்டும்: மனோ கணேசன் Reviewed by NEWMANNAR on February 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.