முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை எமக்கும் மகிழ்ச்சி : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை ரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளமை எமக்கும் மகிழ்ச்சியான விடயமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக முதலமைச்சரிடம் நேற்று யாழிலுள்ள அவருடைய இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எத்தனையோ பேரைச் சிறைக்கு அனுப்பியிருக்கிறேன். சிறையிலிருந்து வெ ளிவந்தவர்களில் பலரையும் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். யாராவது ஒருவருக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அவர்களுக்கும் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம்.
ஏனெனில் 18 அல்லது 20 வருடங்கள் சிறையிலிருக்கவேண்டிய இடத்தில் 23 வருடங்கள் தொடர்ந்தும் இவர்கள் சிறையிலிருந்திருக்கின்றார்கள். அவர்களில் இருவர் கணவனும் மனைவியுமாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு வழிகளில் சிக்கல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள். ஆகவேதான் இன்று அவர்களுக்கு விமோசனம் கிடைத்திருக்கின்றது.
கட்சிகள், பல நிறுவனங்கள் போன்றன ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததன் பயனாக இது நடந்திருக்கின்றது என நம்புகின்றோம். ஏனென்றால் இது சம்பந்தமான தீர்ப்பு ஏற்கனவே வந்துள்ளது. அதன் அடிப்படையில் அத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு பிரதம நீதியரசர் சதாசிவம் என்பவருக்கு கஷ்டமாக இருக்கவில்லை. எனவே அது நல்லதொரு திருப்பம் என்றே கருதுகின்றேன் என்றார்.
இதேவேளை இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் இவ்விடயம் தொடர்பில் பலவகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். நன்மைகள் கிடைக்கவில்லை. காலக்கிரமத்தில் இவ்விடயத்தில் முன்னேற்றம் ஒன்று ஏற்படுமென நம்புகின்றேன். முடியுமான வரை இதனைச் செய்வோம் என தெரிவித்தார்.
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை எமக்கும் மகிழ்ச்சி : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
February 20, 2014
Rating:

No comments:
Post a Comment