குடும்பநல தாதியர்கள் பிரச்சினை; விசேட நிபுணர்கள் குழு நியமனம்
வைத்தியசாலைகளில் இடம்பெறும் பிரசவ பயிற்சிகள் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக மருத்துவ தொழிநுட்ப விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்களுக்கு பிரசவ பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தாதி உத்தியோகத்தர்களுக்கும், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்து, பிரச்சினை குறித்து அவர்களின் கருத்துகளையும், யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் ஊடாக, தீர்வு காண்பதற்குரிய சிபாரிசுகளை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு விசேட நிபுணர் குழுவிற்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு சகல தொழிற்சங்கங்களிடமும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இன்று கூடவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது தீர்மானிக்கப்படும் என அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் தேவிகா கொடிதுவக்கு கூறினார்.
குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நேற்றுமுன்தினம் முதல் நாடு தழுவிய ரீதியாக துறைசார் சேவைகளில் இருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்திருந்தனர்.
தாதி உத்தியோகத்தர்களுக்கு பிரசவ பயிற்சிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் குடும்பநல சுகாதார நிலையங்களில் தாய் / சேய் நலமேம்பாட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
குடும்பநல தாதியர்கள் பிரச்சினை; விசேட நிபுணர்கள் குழு நியமனம்
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment