மன்னார் மாவட்டச் செயலகத்தில் மீனவர் பிரச்சினை குறித்து பேச இடமளிக்கப்படவில்லை: என்.எம்.ஆலம்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட மீன்பிடி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும் மாறாக திணைக்களம் தங்களின் தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டமாகவே இதனை நடத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'இந்திய இழுவைப் படகுகளின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உள்ளுர் மீனவர்களும் இந்த இழுவைப்படகு தொழில்களை நிறுத்துமாறு கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும் இத்தொழில் நிறுத்தம் ஏற்பட்டால் தங்கள் பகுதி மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்வார்கள் என பேசாலை மீனவர் சங்கம் குறித்த கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இழுவைப்படகு தொழிலை நிறுத்தும் இந்திய மீனவர்களுக்கு நட்டஈடும் மானியமும் இந்திய அரசு வழங்குகின்றது.
அது போன்று எமக்கு மானியமும், நட்டஈடும் வழங்கப்படும் பட்சத்தில் குறித்த தொழிலை நிறுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இருந்தும் இந்தியா - இலங்கை மீனவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் எந்த விபரமும் நடைபெற்ற கூட்டத்தில் கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் தெரிவிக்கவில்லை' என்றார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பேசப்படவுள்ள விடையங்கள் குறித்து எதுவித கருத்துக்களும் கேட்கப்படவில்லை. மீனவர்களின் காப்புறுதி தொடர்பில் பேசப்பட்டது. வருடா வருடம் காப்புறுதி என்ற பெயரில் மீனவர்களிடம் பணம் அறவிடப்படுகின்றது. இந்த காப்புறுதியினால் மீனவர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை.
மாறாக அதனை ஆயுள் காப்புறுதியாக மாற்றப்பட வேண்டும். இதன்போது செலுத்தப்படுகின்ற பணம் இறுதியிலாவது மீனவர்களுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டது. உயிர்காப்பு அங்கி அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இதனை கொண்டு செல்லாது பாதிக்கப்படும் பட்சத்தில் அப்படகு உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1.5 மில்லியன் வரை தண்டம் அறவிட சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கடற்தொழில் திணைக்களம் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. சுமார் 30 வருட பழமையான மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் திணைக்களத்தினால் சகல விடையங்களிலும் புறக்கணிக்கப்படுகின்றது. சங்கத்தினால் அனுப்பப்படுகின்ற எந்த விடையமாக இருந்தாலும் கடற்தொழில் திணைக்களம் உதாசீனம் செய்கின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
மீனவர்கள் தொடர்ந்தும் தமது பிரச்சினைகளை குறித்த கூட்டத்தில் முன்வைக்க முயற்சித்த போதும் பேசுவதற்கு இடமளிக்காது கூட்டம் முடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் ஒவ்வெரு மாதமும் நடைபெற்று வந்த மேற்படி கூட்டம் தற்போது வருடத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் இடம்பெறுகின்றது' என்றார்.
தற்போது மீனவ திணைக்களம் தமது தீர்மானங்களை தெரிவிப்பதற்காக தேவை ஏற்படும் போது கூட்டப்படும் கூட்டமாகவே இக்கூட்டம் உள்ளது. குறித்த கூட்டத்தில் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே எதிர்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான கூட்டங்களுக்கு மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கலந்து கொள்வது கேள்விக்குறியதாக உள்ளது' மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் மீனவர் பிரச்சினை குறித்து பேச இடமளிக்கப்படவில்லை: என்.எம்.ஆலம்
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment