"பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் ஹிஸ்புல்லாஹ்": பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அப்துர் ரஹ்மான்
பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக பொய்யான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டுள்ள பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவரை இவ்விடயம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விருத்துள்ளார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று மாலை (05.02.2014) பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தி (SMS) ஒன்றின் மூலமாகவே இதனைத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை இலங்கையில் மிகவேகமாக அதிகரித்துச் செல்வதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் அதற்கு அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறும் கருத்துக்களை பொருளாதாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அண்மைக் காலமாக பொது நிகழ்வுகளின்போது தெரிவித்து வருகின்றார்.
குறிப்பாக அப்பாவி ஏழை மக்களை அழைத்து நடாத்தும் நிகழ்வுகளிலேயே இக்கருத்தினை இவர் அடிக்கடி தெரிவித்து வருவதனை ஊடகச் செய்திகளில் அவதானிக்க முடிகின்றது.
பொருட்களின் விலையேற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்ற கருத்து ஒரு அப்பட்டமான பொய் என்றும் இது போன்ற பொய்களைக் கூறி ஏழை மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் தேசிய ஊடகம் ஒன்றில் விவாதிப்பதற்கு முன்வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளதோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பதிலினை மூன்று தினங்களுக்குள் எதிர்பார்ப்பதாகவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அனுப்பிவைத்துள்ள குறுஞ்செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அன்புடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு…
பொருட்களின் விலை ஏற்றத்துக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்ற கருத்தை அப்பாவி ஏழை மக்கள் முன்பாக நீங்கள் தொடர்ந்து கூறி வருகின்றீர்கள்.
உங்களின் இக் கருத்து அப்பட்டமான பொய்யாகும்.
உங்களின் வார்த்தைகளை அப்பாவித்தனமாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது.
உங்களின் இக் கருத்து தொடர்பாக தேசிய ஊடகமொன்றில் (தொலைக்காட்சி, வானொலி) அல்லது பொருத்தமான ஒரு வழிமுறையில் உங்களோடு பகிரங்கமாக விவாதிப்பதற்கு உங்களை நான் பகிரங்கமாக அழைக்கின்றேன்.
நீங்கள் தயாரா?
உங்களின் பதிலை மூன்று நாட்களுக்குள் எதிர் பார்க்கின்றேன்.
பொறியியலாளர்
அப்துர் ரஹ்மான்
"பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் ஹிஸ்புல்லாஹ்": பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அப்துர் ரஹ்மான்
Reviewed by NEWMANNAR
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment