பொது மக்களின் எதிர்ப்பினையும் மீறி மன்னாரில் மது விற்பனை நிலையம்!
மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் தனியார் ஒருவருடைய வீட்டில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடனடியாக அகற்றக்கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரியகடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், பெரிய கடை கிராம மக்களும் இணைந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த மது விற்பனை நிலையம் திடீர் என திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெரியகடை உப்பள வீதியில் குறித்த மது விற்பனை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருடைய வீடே தற்போது மது விற்பனை நிலையமாக மாறியுள்ளது.
குறித்த மது விற்பனை நிலையத்தினைச் சுற்றி மக்களின் குடியிருப்புக்கள், தனியார் கல்வி நிலையம் போன்றவை உள்ளது.
குறித்த மது விற்பனை நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் மன்னார் பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.
அப்பகுதியில் அதிகளவான பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளனர். யுவதிகளும் அதிகமாக அப்பகுதியில் உள்ளனர்.
குறித்த மது விற்பனை நிலையத்தினால் அப்பகுதியில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மக்கள் அச்சம் தெரிவிககின்றனர்.
குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள இடம், மன்னார் நகர சபைக்கு உரிய இடமாக காணப்படுகின்ற போதும், மன்னார் நகர சபை இட அனுமதியை எந்த அடிப்படையில் வழங்கியுள்ளது என அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீர் வடிகாலமைப்பு மற்றும் சமூர்த்தி உதவித்திட்டம் ஆகியவற்றிற்கு இக்கிராம மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பங்களை தவரான முறையில் பயன்படுத்தி இக்கிராம மக்களும் ஆதரவு வழங்குவதாக கோரி குறித்த மது விற்பனை நிலையத்தினை அமைத்துள்ளதாக அந்த மக்கள் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.
இவ் மது விற்பனை நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் இக்கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சிகைள் தொடர்பாக ஏற்கனவே மன்னார் நகர சபையின் தலைவர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேசச் செயலாளர் ஆகியோருக்கு அந்த மக்கள் எழுத்து மூலம் வழங்கி இருந்தனர்.
எனினும் மக்களின் எதிர்ப்பினையும் மீறி தனி நபர் ஒருவர் மக்களின் குடியிருப்குக்கு மத்தியில் மது விற்பனை நிலையத்தை திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளமையினை சமூக ஆர்வலர்கள் வண்மையாகக் கண்டித்துள்ளனர்.
-மதுவரித்திணைக்களம்,மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச செயலகம்,மன்னார் மாவட்டச் செயலகம் போன்ற திணைக்களங்களின் அசமந்தப்போக்கின் காரணமாகவே இவ் மது விற்பனை நிலையம் அமைந்துள்ளதாக பெரிய கடை கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் எதிர்ப்பினையும் மீறி மன்னாரில் மது விற்பனை நிலையம்!
Reviewed by NEWMANNAR
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment