அண்மைய செய்திகள்

recent
-

Facebook கின் காரணமாக தற்கொலை செய்த வெனுஷா இமந்தி. உண்மையில் நடந்தது என்ன? - படங்கள்

இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா ?. உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 

10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்

"2014 -02-05

"அப்பாவுக்கு..

இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது. 

எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி' எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி' எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள். 

நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று 'எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.


பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.

அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார். 

அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார். 

நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும். என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன். 

I love my family

நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.

இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்."


தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் 'அதிபர்' என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.
"எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது"


இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.

ரிஷான் செரிப்


Facebook கின் காரணமாக தற்கொலை செய்த வெனுஷா இமந்தி. உண்மையில் நடந்தது என்ன? - படங்கள் Reviewed by NEWMANNAR on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.