வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு, அடுத்த மாதம் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதை அடுத்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
விரைவுத் தபால்மூலம் இந்த அறிவித்தலை பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறி, பதவியிலிருந்து தாம் நீக்கப்படுவதை ஆட்சேபித்து முன்னாள் பிரதேச சபைத் தலைவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
முதல் முறையாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி ஜே.சி. வெலிஅமுன சுட்டிக்காட்டினார்.
ஆயினும், இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் கீழ், 2014 ஆம் ஆண்டிற்கான பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து ஆராயும்பொருட்டு மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரினால் மனுதாரருக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஜே.சி. வெலிஅமுன குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழு முன்னிலையில் பிரசன்னமாகியதன் பின்னர், வரவு-செலவுத்திட்டம் மீது வாக்கெடுப்பினை நடத்துமாறு முதலமைச்சர் பிரதேச சபைத் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.
இரண்டாம் முறையாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும், அதனையடுத்து, பிரதேச சபைத் தலைவர் பதவிநீக்கப்பட்டு, அந்த பதவியின் பொறுப்புகள் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதால், வட மாகாண முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை செல்லுபடியற்றதாக்கி, தம்மை மீண்டும் பிரதேச சபைத் தலைவராக நியமிக்குமாறு மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
March 19, 2014
Rating:

No comments:
Post a Comment