மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டுடன் நேரடி தொடர்பு- அன்வர் இப்ராகீம்
காணாமல்போன மலேசிய விமானத்தின் பைலட்டுடன் தனக்கு தொடர்பு உள்ளது என்பதை, சிறையில் இருக்கும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 8ம் தேதி காணாமல் போன மலேசிய விமானத்தின் விமானி ஜஹாரி அகமது ஷாவுக்கும், அந்நாட்டு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீமுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
விமானம் காணாமல் போனதற்கு முதல் நாளும், சிறைக்கு சென்று அன்வரை, ஜஹாரி சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஜஹாரிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அன்வர் மறுத்து வந்தார்.அவரது புகைப்படத்தை பார்த்த பின்னர், கட்சி கூட்டங்களில் அவரை பார்த்ததாக அன்வர் கூறினார்.
இந்நிலையில், முதல் முறையாக அவர், விமானி ஜஹாரியுடன் தனக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது மனைவி வழி உறவினரின் சொந்தக்காரர்தான் ஜஹாரி என்பதை நான் ஒருபோதும் மறுத்தது இல்லை. அவரை என் உறவினர் பலமுறை சந்தித்து பேசியுள்ளார். சுபாங்க் தொகுதி எம்.பி. ஆர் சிவராசாவுக்கும் ஜஹாரி மிக நெருங்கிய நண்பர். ஜஹாரி டிவிட்டரில் என்னை பின்பற்றி வருகிறார். அப்படித்தான் அவரிடம் எனக்கு தொடர்பு உள்ளது. மற்றபடி அவரிடம் நேரடி தொடர்பு எதுவும் கிடை யாது’’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, காணாமல்போன விமானம் தென் இந்திய பெருங்கடல் பகுதிக்கு பறந்து சென்றிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஆந்திர கடற்பகுதியில் பாகங்கள் மிதந்தன?
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள குட்டா கோடுரு கடற்கரைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவர் கடலில் மர்மப்பொருள் ஒன்று மிதப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மூலம் இத்தகவல் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடலில் மிதந்த பொருள், காணாமல் போன, மலேசிய விமானத்தின் பாகங்கள்தானா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. காணாமல்போன மலேசிய விமானம் வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆந்திர கடல்பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதந்ததாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேகப்படும்படி எதுவும் இல்லை
காணாமல்போன விமானத்தின் பைலட் வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் இருந்த தகவல்கள் மற்றும் அவரது இ-மெயில்களை புலனாய்வுக் குழுவினர் ஆராய்ந்ததில், அவற்றில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், தரையில் இருந்தபடியே விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற உதவும் சிமுலேட்டர் கருவியில், சந்தேகப்படும்படியான பாதைகள் அமைக்கப்பட்டு பயிற்சி பெறப்பட்டுள்ளதா என்று ஆராயப்பட்டது. ஆனால், அதுபோன்ற எதுவும் சிமுலேட்டரில் பதிவேற்றம் செய்யப்பட
வில்லை. ஆனால், மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹூசைன் கூறுகையில், ‘‘சிமுலேட்டரில் சில தகவல்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதை மீண்டும் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பைலட் ஜஹாரி இப்போதைக்கு குற்றமற்றவராகவே கருதப்படுவார். அவர் மீது ஆதாரப்பூர்வமான சந்தேகம் எழும் வரையில் இது தொடரும்’’ என்றார். இதற்கிடையே, மேற்கு பகுதியில் திரும்பி மலாக்கா ஜலசந்தி பகுதியில் ஒரு விமானம் பறந்து சென்றது தன்னுடைய ரேடாரில் பதிவாகி உள்ளது என்று தாய்லாந்து நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்பதால் அந்த விமானத்தை தேடும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்பகுதியில் போர்க்கப்பலை அனுப்பி தேடுவதற்கு மத்திய அரசிடம் சீனா அனுமதி கோரியுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டுடன் நேரடி தொடர்பு- அன்வர் இப்ராகீம்
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment