தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியல்
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 15 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மீனவர்கள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தலைமன்னார் பொலிஸாரால் இன்று ஆஜர்செய்யப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் பி.எஃப். மிராண்டா தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு 15 தமிழக மீனவர்களும், இன்று அதிகாலை 9 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் தமிழக மீனவர்களின் 5 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
எஞ்சியுள்ள 9 தமிழக மீனவர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் முதல்சுற்று பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய மீனவ சங்கப் பிரநிதிகளும் கலந்துகொள்வார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு சில மீனவ சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியூஸ்பெஸ்ட் வினவியபோதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
பெயர்ப் பலகைகளை மாத்திரமே தன்னகத்தே கொண்டுள்ள மீனவ அமைப்புகளுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment