இந்த மூவரையும் அடையாளம் காட்டுங்கள் மன்னாரில் சுவரொட்டிகள்
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து மூவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.
கோபி என அழைக்கப்படும் கசியன், அப்பன் என அழைக்கப்படும் நவனீதன் மற்றும் தெய்வீகன் என அழைக்கப்படும் பகீரதன் என்பவர்களே தேடப்படுவதாக சுவரொட்டிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தருவோருக்கு ஒரு மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோபி, தெய்வீகன் மற்றும் அப்பன் ஆகிய மூவர் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரியே மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள், நகர பகுதிகள், அரச திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டப்படடிருக்கின்றன.
இதனிடையே மேற்படி மூவரின் புகைப்படங்களுடனான சுவரொட்டிகள் வட பகுதி எங்கும் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் குறித்த பிரசுரம் எவரால் உத்தியோக பூர்வமாக உரிமை கோரி வெளியிடப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஒருசில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
குறிப்பாக பொது போக்கு வரத்து மற்றும் அணைத்து வாகனங்களும் பயணப்பாதையில் இடை மறிக்கப்பட்டு சல்லடைத்தேடல் இடம்பெறுகின்றன.
அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் துப்பாக்கிப்பிரயோகத்தின் பின்னரே வட பகுதி எங்கும் ரோந்து மற்றம் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மூவரையும் அடையாளம் காட்டுங்கள் மன்னாரில் சுவரொட்டிகள்
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment