கொழும்பில் டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள்
கொழும்பு மாநகரில் டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் மழைக்காலம் ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் தமது சூழலை நீர் தேங்காத வண்ணம் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக டாக்டர் விஜயமுனி மேலும் தெரிவிக்கையில்;
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதை தடுக்கவும் கொழும்பு மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தவும் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் மற்றும் முப்படையினர் என 18,000 ஆளணியினர் இணைந்து கொழும்பு மாநகரில் 1,18000 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதோடு அரச தனியார் பாடசாலைகளும் பரிசோதிக்கப்பட்டு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
அசுத்தமான சூழலை வைத்திருக்கும் பிரதேசங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டுகளை விட நூற்றுக்கு 60 வீதம் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது வரையில் டெங்கு காய்ச்சல் மட்டுமல்ல ஏனைய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என 1788 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் வரை காலப்பகுதியில் 6 பேர் மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
வட கொழும்பு, கொழும்பு கிழக்கிலும் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால் பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்மென்றும் டாக்டர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
கொழும்பில் டெங்கு நோய் நூற்றுக்கு 60 வது வீதம் கட்டுப்பாட்டுக்குள்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment