அண்மைய செய்திகள்

recent
-

குடல் பகுதியில் ஏற்படக்கூடிய நோய்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும்

நாம், நம் வெளிப்புற அங்கங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாக இயங்கும் உடலின் உட்புற அங்கங்களுக்குக் கொடுப்பதில்லை. நாம் அலட்சியம் செய்யும் உடல் உள்ளுறுப்புக்களுள், குடல் மிக முக்கியமானது. குடல் தொடர்பான பல நோய்கள் பெரும்பாலாகவும், பரவலாகவும் தோன்றக்கூடியன. அவற்றுள், மலச்சிக்கல், குடல்வால் வளரி, குடல் இறக்கம், குடல் புற்றுநோய், நெஞ்செரிச்சல் (இதுவும் குடல் வாய்ப்பகுதியுடன் தொடர்புடையதே) என்பன பொதுவானவை. மலச்சிக்கல் என்பது பொதுவானது. 

ஆனால், எது எந்த வயதில் உள்ளவர்களுக்கு வருகிறது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்புகளைக் கூற முடியும். இருபது வயதைக் கடந்த எந்த வயதினருக்கும் உடலுக்கு ஒவ்வாத உணவை உட்கொள்வதாலும், நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணாததாலும், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதைக் கட்டுப்படுத்துவதனாலுமே மலச்சிக்கல் தோன்றுகிறது. இதற்கு மருந்துகள் மூலமே சிகிச்சை அளித்துவிட முடியும். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலச்சிக்கல் உபாதைக்கு முகங்கொடுக்க நேர்ந்தால், அது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. காரணம், இது, புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதே. பெருங்குடலில் அடைப்பு ஏற்பட்டால் மலச்சிக்கல் உண்டாகும். கொலனோஸ்கோபி எனும் பரிசோதனை மூலம் பெருங்குடலில் அடைப்பு மட்டுமன்றி, புற்றுநோய்த் திசுக்கள் பெருங்குடலில் இருக்கின்றனவா என்பதையும் கண்டறிய முடியும். 

ஆனால், பெருங்குடல் அடைப்பினால் புற்றுநோய் நிச்சயம் உருவாகும் என்பதில்லை. போதியளவு நார்ச்சத்து உடலில் சேராதபோது, குடலில் தசைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்தத் தசைகள் பை போன்ற வடிவில் வளர்வதால், உணவுக்குழாய் வெளியேற்றும் கழிவுப் பொருட்கள் இந்தப் பைகளுக்குள் தேங்கிவிடும். இது, பெருங்குடலில் அடைப்பை உருவாக்கிவிடும். சிலநேரம் குடலில் துளைகளையும் இது உருவாக்கிவிடும். இதை டைவர்டிகுலர் என்போம். டைவர்டிகுலர் நோயால் மலச்சிக்கல் தோன்றுவதில்லை. 

ஆனால், மலச்சிக்கலானது டைவர்டிகுலர் நோயை உருவாக்கிவிடலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், பேரியம் பரிசோதனை, எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி மூலம் நோய்க்காரணிகளையும் அடையாளம் கண்டு அவற்றுக்கான சிகிச்சைகளையும் வழங்கி நோயை குணப்படுத்தி விட முடியும். குடல் இறக்கத்தைப் பற்றிப் பார்ப்போமேயானால், இது ஆண்களுக்கே பெரும்பாலும் வரக்கூடியது. பெண்களைப் பொறுத்தவரையில், மிகச் சிலருக்கு, பிரவசத்தின் பின் இது ஏற்படலாம். 

குடலின் ஒரு பகுதி வெளியேறிக் காணப்படுவதே குடல் இறக்கம் அல்லது ஹேர்னியா எனப்படுகிறது. இதில், நேரடியான ஹேர்னியா, மறைமுக ஹேர்னியா என்று இரண்டு வகைகள் உண்டு. ஆண் குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது அதன் விரைகள் வயிற்றின் பின்பக்கச் சுவற்றில் இருக்கும். குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியேறி இந்தப் பூமியை வந்தடையும் சில மணி நேரத்திற்கு முன்பாகத்தான் இந்த விரைகள் இங்குவினல் கேனல் எனும் பாதை வழியாகக் கீழிறங்கி விதைப்பைக்குள் சென்றடையும். 

அதன் பின்னர் இந்த பாதை இயற்கையாக மூடிக் கொண்டு விடும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த பாதை மூடப்படாமல் இருக்கும். இப்படி மூடப்படாமல் இருக்கும் இந்தப் பாதை வழியாக, குடலின் ஒரு பகுதி வெளியேறுவதை மறைமுகமான குடல் இறக்கம் அல்லது இங்குவினல் ஹேர்னியா என்போம். வயதின் காரணமாக, குடல் இறங்கி வரும் பாதைக்கு முன்புறமுள்ள வயிற்றின் மேலுள்ள தசைகள் பலவீனப்பட்டு வெளியேறுவதை நேரிடையான ஹேர்னியா என்போம். இவை தவிர, தசைகள் பலவீனப்பட்டிருப்பவர்கள் பலமாக இருமும்போதும் குடல் வெளியேறலாம். இன்னும் சிலர், பளுதூக்கும் விளையாட்டுக்கள் அல்லது வேலை நிமித்தமாக அதிக எடையைத் தூக்கும்போதும், குடலுக்குள் ஏற்படும் அழுத்தத்தினாலும் குடல் வெளியேறலாம். சிறுவயதில் குடல் இறக்கம் ஏற்பட்டு, அதற்காகச் சத்திர சிகிச்சை செய்துகொள்ளும் பட்சத்தில், மீண்டும் அந்தப் பகுதியில் பிரச்சினைகள் தோன்றாது. 

ஆனால், வயதானவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட்டு, ஒரு முறையேனும் சத்திர சிகிச்சை செய்துகொண்டாலும், அந்தப் பகுதியில் மீண்டும் மீண்டும் குடல் வெளியேறப் பார்க்கும். போடப்பட்ட தையல் பலமில்லாமை அல்லது சிகிச்சையளிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள தசைகள் பலமிழப்பது போன்ற காரணத்தாலேயே இந்தச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுப்பதற்காகத்தான் தற்போது, வெறும் தசைகளை மட்டும் தைக்காமல், பக்கவிளைவுகள் எதையும் உண்டாக்காத வலைபோன்றதொரு அமைப்பையும் சேர்த்துத் தைத்துவிடுகிறோம். இதனால், அந்த வலையின் இடைவெளியில் வளரும் தசைநார்கள் அந்தப் பகுதிக்குத் தேவையான இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு தடுப்புச்சுவராக நிற்கும். 

இந்த வலை போன்ற அமைப்பு, சுமார் ஐம்பது வருடங்கள் பாதிக்கப்படாது என்பதால், மீண்டும் குடல் இறக்கம் தோன்ற மாட்டாது. இன்னும் சிலருக்கு, வயிற்றைப் பிளந்து செய்யப்படும் சில சிகிச்சைகள் - உதாரணத்திற்கு, சத்திர சிகிச்சை மூலமான பிரசவம் - காரணமாகவும், குடல் வெளித்தள்ள வாய்ப்பு உண்டு. இதை இன்சிஷனல் ஹேர்னியா என்போம். இதை அல்ட்ராசௌண்ட் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்துவிடலாம். வயிற்றில் வீக்கம், வயிற்றில் வலி, போன்றன இதன் அறிகுறிகளாகும். குடல் முறுக்கிக் கொண்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டு இருந்தால் குடல் அழுகிப் போகும் வாய்ப்பு உண்டு. எனவே, தகுதியான வைத்தியரிடம் இது குறித்து ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். நோயின் தன்மையைப் பொறுத்து சில வேளைகளில் லேபராஸ்கோபி சிகிச்சையும் வழங்கப்படும். 

 குடல்வால் வளரி அல்லது குடல்வால் வீக்கமும் ஒரு பொதுவான பிரச்சினையே. நம் சிறுகுடலும், பெருங்குடலும் இணையும் இடத்தில் இரண்டு அங்குல நீளத்திற்கு குடல்வால் உள்ளது. மனிதர்களுக்கு இந்த குடல்வால் என்பது பயனற்ற ஒன்றுதான். ஆனால் உயிரியியல் பரிணாம வளர்ச்சியில் குடல்வால் மனிதனுக்குள் தங்கிவிட்டது. திடீரென ஏற்படும் வீக்கம், நாட்பட்ட வீக்கம் என குடல்வால் வீக்கம் இரண்டு வகைப்படும். நாம் உட்கொள்ளும் உணவின் சில துணுக்குகள் சில சமயங்களில் குடல்வாலினுள் தங்கி விடும். இவ்வாறு தங்கும் பொருள் பாக்டீரியா பாதிப்புக்குள்ளாகி குடல்வாலில் உள்ள திசுக்கள் வீக்கமடையும். இந்த வீக்கம் சிறுகுடலின் இறுதிப் பகுதியிலோ அல்லது பெருங்குடலின் ஆரம்ப பகுதியிலோ அடைப்பை ஏற்படுத்தும். அடிவயிற்றின் தொப்புள் பகுதியில் பொறுக்க முடியாத வலி, அந்த வலி வலதுபுறமாக கீழ்நோக்கி நகர்வது, வாந்தி, பசியின்மை போன்றன இதன் அறிகுறிகள். உடனடியாக இது கவனிக்கப்படாதவிடத்து மரணமும் சம்பவிக்க வாய்ப்பு உண்டு. 

ஸ்கேன் பரிசோதனை மூலம் இதைக் கண்டறிய முடியும். ஐந்து வயதிற்குக் குறைந்தவர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு இந்நோய் மிகுந்த பாதிப்பைத் தரும். எனினும், ஒரு முறை குடல்வால் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்நோய் மீண்டும் வராது. கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாயின் வழியாக இரைப்பைக்குள் சென்றடைகிறது. இந்த உணவுக் குழாயும், இரைப்பையும் இணையும் பகுதியில் கழுத்து போன்றதொரு அமைப்பு இருக்கிறது. நடுவே ஒரு வால்வு இருக்கிறது. உணவுக்குழாய் மூலமாகக் கீழே செல்லும் உணவு, மீண்டும் மேலெழாதபடி பார்த்துக்கொள்வதே இந்தக் கழுத்துப் பகுதியின் வேலை. ஆனால், இந்தப் பகுதி விரிவடைந்து விடுவதால், உணவைச் செரிக்கச் செய்வதற்காக, இரைப்பைக்குள் சுரக்கப்படும் ஒரு அமிலம், மேலெழுந்து தொண்டைக்கு வந்துவிடும்.

 இதைத்தான் நெஞ்செரிச்சல் அல்லது எதுக்களிப்பு என்று குறிப்பிடுகிறோம். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமையால் மட்டும்தான் இந்த நெஞ்செரிச்சல் உண்டாகும் என்று கூறிவிட முடியாது. இது, புற்றுநோய்க்கான அடிப்படைக் காரணியாகவும் அமைந்துவிடலாம். எனவே, நெஞ்செரிச்சல் தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு இருந்து வருமானால், வைத்திய பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தி, எண்டோஸ்கோபிக் சிமெண்ட் இன்ஜெக்சன், ரேடியோ ஃப்ரீக்குவன்சி எனர்ஜி போன்ற அதி நவீன சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
குடல் பகுதியில் ஏற்படக்கூடிய நோய்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும் Reviewed by NEWMANNAR on July 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.