நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்
கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களது சடலங்கள் நெதர்லாந்துக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அங்கு அந்த சடலங்களை அடையாளம் காண்பதற்கான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த 298 பேரில் 193 பேர் நெதர்லாந்து பிரஜைகளாவர்.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நெதர்லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் 200 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்றிய பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சடலங்களை ஒப்படைப்பதை தாமதப்படுத்துவதுடன் ஆதாரங்களை மாற்றிவருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
விமான அனர்த்தம் இடம்பெற்று 4 நாட்களின் பின் சுமார் 200 சடலங்களுடன் குளிரூட்டப்பட்ட புகையிரதம் உக்ரேனிய அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள கார்கிவ் நகரை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.இதனையடுத்து புதன்கிழமை காலை அவற்றில் 40 சவப்பெட்டிகள் கார்கிவ் விமான நிலையத்திலிருந்த இரு இராணுவ விமானங்களில் ஏற்றப்பட்டன.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் தூதுவர்களும், அதிகாரிகளும், படைவீரர்களும் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நெதர்லாந்தின் எயின்ஹோவன் விமான நிலையத்தை புதன்கிழமை மாலை முதலாவது விமானம் வந்தடைந்துள்ளது.
இதன்போது, அந்த விமான நிலையத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் அந்நாட்டு அரச குடும்பத்தினரும் சமுகமளித்திருந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதேசமயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்சியாளர்களால் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி தரவு உபகரணங்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அவை பார்ன்பரோவிலுள்ள விமான விபத்துக்கள் தலைமையகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதில் ரஷ்யா பொறுப்பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்தத்தில் ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தொடர்பு பட்டதற்கான சான்று எதுவும் இல்லை என அமெரிக்க சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சான்றுகளை சமர்பித்துள்ளனர்.
ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சூழ்நிலையின் கீழ் கிழக்கு உக்ரேனில் இருந்து ஏவப்பட்ட எஸ். ஏ.11 ஏவுகணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட மலேசிய விமான பயணிகளது சடலங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment