முத்தான முதல்வன் சூரியனுக்கு வயது-16 (சிறப்புக் கட்டுரை-பட இணைப்பு)
முத்தான முதல்வன் சூரியனுக்கு வயது-16
தரமான நிகழ்ச்சிகள் பல தந்து தரணியில் தனக்கென்று ஓர் தனிவழி வகுத்த தங்கச் சூரியனுக்கு வயது பதினாறாகிறது.தரம் தனித்துவம் என்ற மகுடம் தாங்கி அன்று போல் இன்றும் தமிழ் பேசும் மக்கள் மனங்களில் மங்காப்புகழோடு வீறு நடை போடுகிறது சூரியன் வானொலி.
தமிழ் பேசும் மக்கள் மனங்களை வென்று அவர்தம் இதயத்துள் இரண்டறக்கலந்து இன்றுவரை முதல்வன் என்ற உயரிய அங்கீகாரத்தோடு முத்தான முதல்வன் சூரியனை முதல்தரத்தில் முன்னிலைப்படுத்தி மகிழ்பவர்கள் சூரியனின் உயிரான +உயர்வான நேயர்களே!
இலங்கையின் வானொலி யுகத்தில் புதிய பரிணாமத்தை தோற்றுவித்த பெருமை சூரியனையே சாரும்.இலங்கையின் தாய் வானொலி தனி ராட்சியம் படைத்து கோலோச்சிய காலத்தில் "சூரியன் "எனும் நாமகரணம் கொண்டு உதயத்தில் உதயமான நாள் முதலாய் எட்டு திக்கும் எண்ணற்ற நேயர்களால் நேசிக்கப்படும் வானொலி என்ற பெருமை அப்போது போல் இப்போதும் சூரியனுக்கே.
1998 ம் ஆண்டு ஜூலை மாதம் 25 ம் திகதி இலங்கை வானொலி யுகத்தில் புதிய பரிணாமம் படைக்கபட்டது என்றால் அது ஒன்றும் மிகையில்லை.வானொலி பெட்டிகள் வாசம் வீச ஆரம்பித்த காலமது.காற்றலை வழியே கலந்து காதுகளுக்கு இதம் சேர்க்கும் இனிய நண்பனாய் இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் உயரிய கட்டடமான உலக வர்த்தக மையத்திலிருந்து நாற்திசையும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது சூரியன் வானொலி .
ஜூலை மாதம் 25 ம் திகதி பகலவன் ஒளி பாரெங்கும் பரவும் வேளைதனில் வானத்து சூரியன் உதயத்தோடு ஆசை திரைப்பட "புல்வெளி புல்வெளி "பாடலோடு காற்றலை முதல்வன் ஒலி காதுகளுக்குள் ரீங்காரமிட ஆரம்பித்தது.
வானொலி அறிவிப்பாளர்களுக்கும் நேயர்களுக்கும் இடையில் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி,அவர்களை வானலைக்கு அழைத்து அன்போடும் ,நட்போடும் பழகி+பழக்கி அவர்களை நண்பர்களாக நோக்கிய பாங்குதான் சூரியனை மக்கள் மனங்களில் அதிகம் விரும்பப்பட செய்தது.
புதிய வானொலியில் புதுமைக்கும் ,புதியவைக்கும் பஞ்சமில்லாமல் அப்போது புகுத்திய ஒவ்வொன்றும் ஓராயிரம் இதயங்களை கொள்ளை கொண்டது.இலங்கையின் வானொலி நேயர்கள் அதுவரை அதிகம் கேட்டிராத புதிய துடிப்பான அறிவிப்பாளர் குழாம் இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்களின் வழிகாட்டலில் நடைபயில ஆரம்பித்தது.
புதியனவற்றை புதுமையாய் புகுத்தி தமிழ் பேசும் மக்கள் மனங்களை வெற்றிகொள்ளும் வேட்கை கொண்ட இளசுகளின் அறிவிப்பு பசிக்கு அத்திவாரம் இட்டவர் நடராஜசிவம் அவர்கள்.எதனை எந்த நேரத்தில் எப்படி கொடுக்கலாம் என்ற மாயாஜாலம் தெரிந்த நடராஜசிவம் அவர்கள் புதுமையான நிகழ்சிகள் மூலமாக இலங்கையின் தனியார் வானொலி யுகத்திற்கு சூரியன் மூலமாக புத்துயிர் கொடுத்தார்.
இலகு தமிழில் வானொலியில் பேசுவது எப்படியென்று இலங்கையின் பன்னெடுங்கால வானொலி நேயர்களுக்கு பழக்கியது மட்டுமல்லாமல் புத்தம் புதிய நிலையகுறியிசைகள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் சுடர்விட ஆரம்பித்தது.மாட்டு வண்டிகள் செல்லாத இடங்களுக்கும் பாட்டு வண்டி மூலமாய் வானொலி நேயர்களை அவர்கள் இடங்களிலேயே சந்தித்து பரிசில்களை அள்ளி வழங்கி பரவசபடுத்திய சூரியனின் விரிவாக்கல் நுட்பங்கள் இன்றும் எத்தனையோ தனியார் வானொலிகளால் பின்பற்றபடுகிறது.
நகருக்குள் நகரும் இசை வாகன இசை நிகழ்ச்சி மூலமாய் இலங்கையின் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு இசைவான களம்கொடுத்து ஊக்குவித்த சூரியன், உள்ளூர் இசைக்கலைஞர்களோடு சேர்த்து இப்போது தென்னிந்திய பிரபலங்களையும் இப்படியான நிகழ்ச்சிகளில் இணைத்து புதிய சரித்திரம் படைத்துவிட்டது.
இலங்கையின் இசை நிகழ்ச்சி வரலாற்றில் லட்சக்கணக்கான ரசிகர்களோடு வெற்றிகரமாய் நடாத்தி வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக சூரியன் mega blast இப்போது பேசப்படுகிறது.பிரபல தென்னிந்திய பிரபலங்களோடு நாட்டின் முன்னணி கலைஞர்கள் ,நடனதாரகைகள், கண்கவர் வானவேடிக்கைகள்,மின்னொளி அலங்காரங்கள் என சூரியன் mega blast இலங்கையின் இசைத்துறையில் வரலாறு படைத்து நிற்கிறது.
இலங்கை ஊடக வலையமைப்பில் புரட்சிகள் பல படைத்த ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு .ரெய்னோர் சில்வா அவர்களின் வழிநடத்தலில் சூரியன் வானொலியின் தொடர்ச்சியான மகுடம் சூட்டும் மகத்தான வெற்றிகள் பலவற்றுக்கு சூரியன் வானொலியின் பணிப்பாளர் திரு .ARV லோஷன் அவர்களின் பங்கு மறக்க முடியாததே.
கால நேரம் பார்க்காத கடுமையான உழைப்பும் வழிகாட்டலும் சூரியனை 16 வது அகவையிலும் முதல்தரத்தில் வைத்து நிற்கிறது.திறமையும் தேடலும் நிறையவே நிறைவாய் பெற்ற பணிப்பாளர் திரு .ARV லோஷன் வழிகாட்டலில் சூரியனின் இளம் அறிவிப்பாளர் படையணி அசத்திவருகிறது.
சூரியனின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி திறமைகளைத் தன்னகத்தே கொண்டு பல புதுமைகளை வானலையில் புகுத்தி, மக்கள் மனங்களில் இன்னும் நீங்காத கதாநாயகர்களாக திகழ்கின்றார்கள்.
நகைச்சுவையான பேச்சாற்றல், சிறப்பான நிகழ்ச்சி வடிவமைப்பு இவற்றையும் விட விளம்பர கோர்ப்புகள், என பல திறமைகளைக் தன்னகத்தே கொண்ட இசைச்சமர் கதாநாயகன் சந்ரு, சூரியனின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராக தன்னுடைய சேவையை வழங்குகிறார்.
இவர்களுடன் தன்னுடைய இனிமையான குரலால் பல உள்ளங்களை வசீகரித்து 'யாரு பேசுறீங்க' என்ற நிகழ்ச்சியூடாக பலரை தொலைபேசி வழியாக தொடர்பு சிறந்த நகைச்சுவையுணர்வை தூண்டும் நிகழ்ச்சியைத் தருபவர், மாலை வேளையின் மன்னன் தன்னுடன் பழகும் அனைவருக்கும் மாலை போடக்கூடிய (மாலையின் ரகசியம் ஒரு சிலருக்கு தான் தெரியும்) அலுவலகத்தில் இருக்கும் நேரம் அனைவரையும் கலகலக்க வைக்கும் ஒருவர், அவர் தான் DJ டிலான், உதவி முகாமையாளராக செயற்படுகிறார்.
பெருமை மிகு 16ஆவது ஆண்டில் கால்பதித்த சூரியன் வானலையில் அதிகாலை வேளையில் ஆனந்தமாய் நாள் ஆரம்பத்தில் பொழுது விடியும் பொழுதிலே, உறவுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மனதுக்கு இனிமைத் தரும் பாடல்களுடன் சூரியன் தன்னுடைய கதிர்களை அருணோதயம் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றான். றிம்ஷாட் மற்றும் பிரஷா ஆகியோரின் குரலுடன் உதயமாகிறது அன்றைய நாள்...
புதிய நாளில் புது தகவல் கேட்க, நாட்டு நடப்புகளை நன்கறிந்துக்கொள்ள, சூரியனின் "சூரியனின் சூடான விளையாட்டு செய்திகள் "பேப்பர் பொடியனின் நகைச்சுவையான நக்கல் உரையாடலுடன், தென்னிந்திய பிரபலங்களின் உள் மன குமுறல்களை கிளறிக்கொட்டுவதுடன், காலைக்கு தேவையான மூளைக்கான பலமாக வருகிறது சூரிய ராகங்கள். சூரியனின் பணிப்பாளர் A.R.V. லோஷனுடன் மனோஜ் சிறப்பாக தொகுத்து வழங்க, அறிவு வளம் பெருகும் காலையாக புதிய நாள் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு நாளும் சிரிக்க வேண்டும், அதுவும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்களே, அதேபோல் சிரிக்க குதூகலமாய் நிகழ்ச்சி கேட்க, நகைச்சுவை பேச்சாற்றலால் நல்ல நிகழ்ச்சியை வழங்கும் சூரியனின் சிரேஷ்ட முகாமையாளர் சந்ருவுடனும் மேனகாவுடனும் இசைச்சமர் வெற்றிநடை போடுகிறது.
இசைச்சமர் ஓயும் நேரம் மதிய பொழுதை அட்டகாசமாக ஆரம்பிக்க, இனிய பாடல்கள்தர உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் சொல்ல, அலுவலக கடமைகளின் ஓய்வு நேரத்தின் உற்ற தோழனாய் ஓங்கி ஒலிக்கிறது, மதிய நேர இசை விருந்து, நிஷாந்தன் மற்றும் வர்ஷி ஆகியோர் நிகழ்ச்சியை தருகின்றனர்.
மாலை வேளையின் ஆரம்பமாக உலகின் புதினமான தகவல்களை அள்ளிக்கொண்டு, ஏனையோரை முந்திக்கொண்டு மனம் கவர்ந்த பாடல்களுடன், விளையாட்டு தகவல்கள், சினிமா, அரசியல், தொழில்நுட்பம் என சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக 'கும்மாளம்' ஒலிக்கிறது. இதனை தரணீதரன் மற்றும் பிரவீனா சிறப்பாக மற்றும் தெளிவாக தருகிறார்கள்.
அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு பயணம் செய்வோரின் மனங்களை மகிழ்விக்க, கலகலப்பான மாலை வேளையை அலங்கரிக்கும்படி இனிய புதிய பாடல்களைக் கேட்க 'யார் பேசுறீங்க' பகுதியினூடாக பல இரசிகர்களைக் கலகலப்பாக்கி அவர்களையும் மகிழ்விக்கும் சூரியனின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் டிலான் மற்றும் கோபிகா ஆகியோரின் 'என்றென்றும் புன்னகை' எல்லோரையும் புன்னகைக்கச் செய்யும் இரவு 8.45 வரை.
காதல் கீதங்களுடன், மனதுக்கு இனிமையான இடைக்கால பாடல்களின் பயணம், பல கவிஞர்களை உருவாக்கிவரும் நிகழ்ச்சி, உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓர் இரவுமருந்து - சூர்யா தொகுத்தளிக்கும் 'நேற்றைய காற்று' நள்ளிரவு 12 மணிவரை தாலாட்டு பாடுகிறது.
அதிரடியான ஆட வைக்கும் பாடல்கள் தர சூரியனின் விடிய விடிய இரவுச் சூரியன், இரவு நேர வேலையாட்களை மகிழ்விக்கிறது. அவர்களின் உற்ற தோழனாக விடிய விடிய இரவுச் சூரியன் தனது பங்களிப்பை வழங்குகிறுது. ரமேஷ், பிரஷாந்த், கஸ்ட்ரோ, லரீப் ஆகியோர் ஆடல் பாடல்களாக குதூகலிக்க வைக்கிறார்கள்.
உலகில் எந்த மூலையில் என்ன விளையாட்டுக்கள் நடந்தாலும், உடனுக்குடன் தெட்டத் தெளிவாக உண்மையான தகவல்களை அள்ளித்தர சூரியனின் 'வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகள்' என தினமும் தகவல்களைத் தர சனிக்கிழமை பொழுதின் மாலைவேளை முழுமையான விளையாட்டு நிகழ்ச்சியாக 'அட்டகாசம்' வருகிறது. புது புது தகவல்களை தரணீதரன் தொகுத்து வழங்க, காலை நேரத்தின் விளையாட்டு தகவல்களை சூரியனின் சூடான விளையாட்டுத் தகவல்களை, கிழமை நாட்களில் A.R.V. லோஷன் தொகுத்தளிக்கிறார்.
இவ்வாறாக சூரியனின் தொடரும் சாதனைப் பயணத்தில் மணிவண்ணன், மயூரன், ராகவன், வேணி, பிரசாந்தா ஆகியோர் தமது தனித்துவமான செய்தி வாசிப்பினால் நேயர்களின் நெஞ்சங்களில் தமக்கென தனித்துவமானதோர் இடத்தினை பிடித்துள்ளதோடு, வார இறுதி நாட்களில் பல சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றனர்.
வார நாட்கள் போன்றே வார இறுதி நாட்களிலும் சூரியனின் புதுமையான நிகழ்சிகள் மூலமாய் விருந்து படைத்திடும் அதேவேளை இப்போதைய இளசுகளின் இதயத்துடிப்பாய் சூரியனின் "பொற்காலப்புதன்" ஒவ்வொரு புதனிலும் மனது மறக்காத இனிய இடைக்காலப்பாடல்கள் தந்து பரவசமூட்டுகிறான்.அந்த நாள் ஞாபகங்களை நெஞ்சில் நிழலாடச் செய்யும் வல்லமை இந்த "பொற்காலப்புதனுக்கு இருக்கிறது.வயது வித்தியாசம் கடந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த நிகழ்ச்சியை கேட்டு ரசிக்க காத்திருக்கும் நேயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து நிற்கிறது.
அத்தோடு சூரியனின் வித்தியாசமான நிலைய குறியிசைகளை தரமாகவும்,தனிநிகராகவும் ,கேட்போர் ரசிக்கும் விதமாகவும் கொடுப்பது எப்படியென்பதை நன்கே அறிந்து தெரிந்து அற்புதமாய் படைக்கும் திறமை சூரியனின் இசைகலைஞன் ஹனிக்கு இருக்கிறது.
"சூரியன்னா காசுதான் "எனும் புதுமைப்படைப்பினூடாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளி வழங்கி அசத்துகிறான் தங்கச் சூரியன்.இப்படியான விரிவாக்கல் வேலைகளோடு தமிழ் பேசும் மக்களின் கலை ,கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து அவற்றை நாடறியச் செய்யும் நல்ல பணியையும் சூரியன் விரிவாக்கல் பிரிவு செவ்வனே செய்கின்றது.சிரேஷ்ட விரிவாக்கல் முகாமையாளர் ALM அஸ்ரப்பின் திறமையான வழிநடத்தலில் உதவி முகாமையாளர் அஜித்குமார் மற்றும் கார்த்திக் ,சுலைமான் பாரி ,சுரேன் ஆகியோரும் துடிப்புடனே விரிவாக்கல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சூரியன் நிகழ்ச்சிகள் எப்படி வானொலி நேயர்களால் விரும்படுகிறதோ அதே போன்று தமிழ் பேசும் மக்களின் நாடித்துடிப்பறிந்து நாற்திசையும் இருந்து துணிவாய் ,தரமாய் ,தெளிவாய் கொடுக்கும் சூரியன் செய்திகள் தமிழ் பேசும் மக்களை இன்னுமின்னும் கவர்ந்திழுத்தது. இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலம் முதற்கொண்டு இப்போதும் சூரியன் செய்திகள் மக்கள் மனங்களை ஆட்கொண்டிருக்கிறது.
பக்கச்சார்பின்றி நாளுக்கு நான்கு வேளை முழங்கும் சூரியன் செய்தி பிரிவின் முகாமையாளராக இந்திரஜித் தலைமையில் மூத்த அனுபவம் நிறைந்த செய்தியாசிரியர் சிகாமணி மற்றும் முருகேசு சதீப்குமார்,பரமேஸ்வரன் விக்னேஷ்வரன்,M .G .கிருஷ்ணகுமார்,ஸ்ரீ நாகவாணி ராஜா , ஆகியோர் சூரியன் செய்திகளுக்கு இன்றும் உயிர் கொடுக்கின்றனர்.
காற்றலை வல்லரசனாக காதுகளுக்கு இதம் கொடுக்கும் வானலை முதல்வன் சூரியன் இணையத்திலும் இணையற்ற சாதனைகளை படைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருக்கும் எந்தவொரு தனியார் ஊடகத்தாலும் நினைத்தே பார்க்க முடியாத எல்லை கடந்து சூரியனின் face book பக்கம் வியாபித்திருக்கின்றது.கடல்கடந்து ,உறவுகளை பிரிந்து வெளிநாட்டு வாழ்கையில் தம் வேதனைகளையும் அவர்தம் குடும்ப சாதனைகளுக்காக தியாகம் செய்யும் சகோதர உறவுகளுக்காக இணையத்தின் வழியேயும் இதமாய் வலம்வருகின்றான் சூரியன்.
தரமான நிகழ்ச்சிகள் இணையில்லாத வெளிக்கள விரிவாக்கல் செயற்பாடுகள் மூலமாய் தரணியில் தனியிடம் பிடித்து எட்டிதொட முடியாத எல்லையை தொட்டு நிற்கும் வானலை முதல்வன் சூரியனின் 16 ம் பிறந்த நாளில் நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.
வாழ்க சூரியன்...
வளர்க உன் பணி..
![]() |
சூரியன் குழு |
![]() |
Chairman - திரு.ரேய்னோசில்வா - தலைவர் - ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் |
A.R.V.லோஷன் - பணிப்பாளர் - சூரியன் FM |
![]() |
M.இந்திரஜித் - சிரேஷ்ட செய்தி முகாமையாளர் |
P.சந்த்ரு - சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர் |
A.L.M.அஷ்ரப் - விரிவாக்கல் பிரிவு
சிரேஷ்ட
முகாமையாளர்
|
![]() |
சூரியன் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் -S.N .டிலான் |
![]() |
சூரியன் செய்திப் பிரிவு |
முத்தான முதல்வன் சூரியனுக்கு வயது-16 (சிறப்புக் கட்டுரை-பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment