திருமணம் என்னும் நிக்காஹ் விமர்சனம்
ரயிலில் டிக்கெட் கிடைக்காமல், ஒரு முஸ்லிம் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்கிறார், விஜய ராகவாச்சாரி (ஜெய்). தன் முஸ்லிம் தோழிக்காக புராஜக்ட் செய்ய, அவளது பெயரில், அதே ரயிலில் செல்கிறார் அய்யங்கார் பெண் நஸ்ரியா. ரயிலில் தூங்கும் நஸ்ரியாவை செல்போனில் படம் பிடிக்கும் ஒருவனைத் தடுத்து, போலீசில் ஒப்படைக்கிறார் ஜெய்.
அங்கு தொடங்குகிறது காதல். இருவரும் ஒருவரை ஒருவர் முஸ்லிம் என்று தவறாகப் புரிந்துகொண்டு, தங்களை மறைத்துக் காதலிக்கிறார்கள். நஸ்ரியாவுக்காக ஜெய் முஸ்லிம் மதம் பற்றி தெரிந்துகொண்டு அவரை நெருங்குகிறார். நஸ்ரியா தன்னையும் முஸ்லிம் பெண்ணாக மாற்றி அவரைக் காதலிக்கிறார். உண்மை தெரியும்போது, அவர்கள் காதல் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ்.
நஸ்ரியாவும், ஜெய்யும் சரியான ஜோடிகளாக வலம் வருகிறார்கள். இருவரும் மதம் மாறி அறிமுகமாகும் ரயில் காட்சிகளும், பாண்டியராஜன் செய்யும் குட்டி கலாட்டாக்களும் சிரிக்க வைக்கிறது.
சில நிமிடங்களே வந்தாலும், நஸ்ரியாவை செல்போனில் படம் எடுத்து மாட்டிக்கொள்ளும் வக்கிரமான ஐ.டி இளைஞர், ஷார்ப். நஸ்ரியா, ஆயிஷாவாக அப்படியே மனதிற்குள் நுழைகிறார். குற்ற உணர்ச்சியுடன் காதலிக்கும்போது தவிப்பையும், உண்மை தெரியும்போது குற்ற உணர்வையும் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் அய்யங்காராகவும், அபூபக்கராகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
முஸ்லிம் வீட்டுக்குள் புகுந்து இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும், நஸ்ரியாவைப் பார்க்கும்போது பதட்டத்துடனேயே காதல் வளர்ப்பதையும், ரசிக்க வைக்கிறார். முஸ்லிம் பெரியவராக வருபவர் தோற்றத்திலும், நடிப்பிலும் மனதைக் கவர்கிறார். அவருக்கு நாசர் குரல் நன்கு பொருந்துகிறது. பின்னணி இசைக்கு ஜிப்ரான் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். லோகநாதனின் ஒளிப்பதிவு, இரு மதங்களுக்குரிய பிரத்தியேக வண்ணங்களுடன் காட்சிகளைப் பதிவு செய்திருப்பது சிறப்பு.
சிக்கலான கதைக் கருவை கையில் எடுத்தாலும், அதை நடுநிலையுடன் நகர்த்திய வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்கு னர். ஹீரோவும், ஹீரோயினும் உண்மையை அறியும் அந்த இடத்தை உணர்ச்சிபூர்வமாக காட்டியிருக்க வேண்டாமா?
வெறும் காபி ஷாப் காட்சியாகவே கடந்து போகிறது. புதிய கதை, புதிய களம் அமைந்திருந்தும் கூட, சிறப்பான திரைக்கதையால் நின்று விளையாட தவறியிருக்கிறார்கள்.
திருமணம் என்னும் நிக்காஹ் விமர்சனம்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:


No comments:
Post a Comment