சாராயம் வாங்கித் தருமாறு கேட்ட கடற்படையினர் எனது கணவரையும் அழைத்துச் சென்ற நிலையில் அவர் காணாமல் போனார்-மனைவி சாட்சியம்.
எனது வீட்டுக்கு வந்த கடற்படையினர் எனது கணவரிடம் சாராயம் வாங்கிக் கொண்டு வரும்படி கேட்டனர். அவரும் அதை வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றார். அங்கே அவர்கள் சாராயத்தையும் வாங்கிக் கொண்டு எனது கணவரையும் அழைத்துச் சென்றனர்.இந்த நிலையில் எனது கணவர் காணாமல் பேயுள்ளதாக மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அவரது மனைவி எட்னா டயஸ் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக ஐனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெற்ற போது குறித்த பெண் அவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
'எனது கணவர் அமிர்தநாதர் ஆனந்தராஜா (வயது 42) பேசாலை, வங்காலைப்பாடு பகுதியில் உள்ள கடற்படையினரால் காணாமல் போயுள்ளார்.
அதாவது வங்காலைப்பாடு கடற்படையினர் 17-8-2008 அன்று பிற்பகல் ஒரு மணியளவில் எங்கள் வீட்டுக்கு வந்து எனது கணவரிடம் கடையில் போய் சாராயம் வாங்கிக் கொண்டு பிற்பகல் 7 மணியளவில் வரும்படி கேட்டுக் கொண்டனர்.
'இதற்கிணங்க எனது கணவர் என்னிடம் இருந்து ஆயிரம் ரூபாவை வாங்கிக் கொண்டு, அவர் மதுபானம் பாவிக்காதவர் என்பதால் மதுபானக் கடைக்கு தனது நண்பர் ஒருவரை அனுப்பி சாராயப் போத்தலையும் வாங்கிக் கொண்டு அவர்கள் வரச்சொன்ன இடமான பேசாலை சென்.மேரிஸ் பாடசாலைக்கு அருகிலுள்ள இடத்துக்குக் கொண்டுச் சென்றார்.
'அப்பொழுது அவ்விடத்துக்கு ஒரு வாகனத்தில் வந்த கடற்படையினர் சாராயப் போத்தலையும் வாங்கிக்கொண்டு எனது கணவரை அவர்கள் வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றதை அயலில் இருந்தவர்களும் எனது அம்மாவும் கண்டுள்ளனர்.
'போனவர் திரும்பி வராததனால் நான் பாடசாலைப் பகுதிக்குச் சென்று வாகனம் வந்து சென்ற அடையாளங்களைக் கண்டுகொண்டேன்.
இதைத் தொடர்ந்து பிரதான பாதைக்குச் சென்ற வேளையில் வங்காலைப்பாடு பக்கம் இருந்து பயணிகளுடன் வாகனம் ஒன்று வந்தது.
'அப்பொழுது அவர்களிடம் இந்த பக்கத்தால் குறிப்பிட்ட வாகனம் ஒன்று போகின்றதா என்று கேட்டேன். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், 'அந்த வாகனம் வங்காலைப்பாடு கடற்கடை முகாமுக்குள் போய்க் கொண்டிருந்ததைக் கண்டோம்' என்றனர்.
'உடனே நான் பேசாலை பங்குதந்தை அருட்பணி அகஸ்ரின் அடிகளாரை அழைத்துக் கொண்டு வங்காலைப்பாடு நேவிக் காம்புக்கு போனோம்.
அங்கே எனது கணவரைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.
'நேவி பிரியந்த தான் சாராயப் போத்தல் வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார் என்றும் அவருடன் வந்தவர்கள்தான் எனது கணவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தோம்.
அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். 'இது விடயமாக நான் பல இடங்களுக்கும் அறிவித்திருந்தேன். ஆனால் எந்தவிதமான பலனும் எனக்கு கிடைக்கவில்லை.
உங்கள் மூலமாக பலன் கிடைக்குமா? என்று பார்க்க இருக்கின்றேன். 'எனது கணவர் எந்த இயக்கத்துடனும் தொடர்பு கொண்டவர் அல்லர். ஆகவே நான் குறிப்பிட்ட கடற்படை உறுப்பினரைக் கொண்டு எனது கணவரைக் கண்டு கொள்ளலாம்' என தனது கனவனை இழந்து நிற்கும் பெண்மணி இவ்வாறு தெரிவித்தார்.
சாராயம் வாங்கித் தருமாறு கேட்ட கடற்படையினர் எனது கணவரையும் அழைத்துச் சென்ற நிலையில் அவர் காணாமல் போனார்-மனைவி சாட்சியம்.
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:

No comments:
Post a Comment