அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக நடந்துமுடிந்த எட்டாவது உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு – 2014-Photo

எட்டாவது உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு கண்டியில் உள்ள பொல்கொல்லை என்ற இடத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை சிறப்பாக இடம்பெற்றது. 'திருச்சபையும் சமூகப்பணியும்' என்ற மையப்பொருளில் இடம்பெற்ற இந்த நான்கு நாள் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவ அறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர். 

தொடக்க விழாவின்போது மாநாட்டு ஆரம்ப உரையை மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வழங்கினார். தொடக்க விழாவின் சிறப்பு நிகழ்வாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றக் குழந்தைக் கலைஞர்கள் வழங்கிய 'யார் குழந்தை?' என்ற நாட்டுக்கூத்து நாடகம் இடம்பெற்றது. நிறைவுநாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மேதகு பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார். 

 இந்தியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவையின் அனுசரணையோடு இம்மாநாடு இடம்பெற்றது. இலங்கையில் இம்மாநாட்டை நடத்துவதற்கென 'இலங்கை மாநாட்டுக் குழு' ஏற்படுத்தப்பட்டிருந்தது. இக்குழுவின் தலைவராக அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த வண. போதகர் ஸ்டீபன் அருளம்பலம் அவர்களும், செயலாளராக இலங்கைத் திருச்சபையைச் சேர்ந்த போதகர் ஜோன் பேரானந்தம் அவர்களும் இன்னும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர். 

மாநாட்டு இணைப்பாளராக திரு. கிறிஸ்ரி அவர்கள் செயலாற்றினார். கத்தோலிக்க திருச்சபை, பிராதான திருச்சபைகள் மற்றும் சுயாதீனத் திருச்சபைகள் ஆகிய அனைத்துத் திருச்சபைகளையும் உள்ளடக்கியதாகவே இந்த மாநாடு இடம்பெற்றது. முதல் மூன்று நாட்கள் இடம்பெற்ற பொது அமர்வில் தமிழையும், கிறிஸ்தவத்தையும், திருச்சபையின் சமூகப் பணிகளையும் உள்ளடக்கிய பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்றன. இதைவிட ஒரே நேரத்தில் பல்வேறு தலைப்புக்களில் பாசறைகளும் இடம்பெற்றன. 

 இம்மாநாட்டின் நிறைவுவிழா நிகழ்வுகள் புசல்லாவையில் இடம்பெற்றன. புசல்லாவை அங்கிலிக்கன் ஆலய வளாகத்தில் மாநாட்டு நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கைத் திருச்சபையின் குருநாகல் மறைமாவட்ட ஆயர் சாந்தா பிரான்சிஸ் அவர்கள் இம்மாநாட்டுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார். நிறைவுநாள் நிகழ்வின்போது மாநாட்டுத் தீர்மானங்களை அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வாசித்தார். நிறைவு விழாவில் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.












சிறப்பாக நடந்துமுடிந்த எட்டாவது உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு – 2014-Photo Reviewed by NEWMANNAR on August 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.