தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியானமைக்கு கருணாநிதி கண்டனம்
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் எழுதிய கடிதங்களை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை அரசாங்க இணையத்தளம் கட்டுரை வெளியிட்டமைக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழக முதலமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தியிருந்ததாக
இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவருக்கும், தனக்குமிடையில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களை களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் இலங்கை அரசாங்கத்தினால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிப்பதில்லை என்பதுடன், அத்தகைய இழிமொழிகளை கண்டிக்கத் தவறியதும் இல்லையென கருணாநிதி கூறியுள்ளார்.
குறிப்பிட்ட கட்டுரையின் மூலம் தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி இந்திய பிரதமரையும் இழிவுபடுத்தியிருப்பதாக கருதி இந்த பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மேலும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியானமைக்கு கருணாநிதி கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 02, 2014
Rating:


No comments:
Post a Comment