தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
கடந்த 33 வருடங்களாக வடக்கில் நடந்த யுத்த சூழ்நிலையினால் இடை நிறுத்தப்பட்டுள்ள தலைமன்னார்- இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய அரசின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.கொன் நிறுவனம் இந்த சேவையை நடாத்தவுள்ளதாக இந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தலைமன்னாருக்கும், மடுவுக்கும் இடையிலான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் நிறைவடைந்து கொண்டிருப்பதாகவும் மடு தலைமன்னார் புகையிரதப் பாதைகள் புனரமைப்புப் பணிகள் முற்றாக முடிவடைந்த பின்னர் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கலாம் என்ற பரிந்துரை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தால் இந்திய மத்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இராமேஸ்வரம் இருந்து தலைமன்னார் வரும் இந்தியப் பிரயாணிகள் உடனடியாக கொழும்பு செல்ல வேண்டும். அத்துடன் கொழும்பிலிருந்து தலைமன்னார் வரும் பிரயாணிகள் உடனடியாக இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
இதற்கு ஏதுவாக பிரயாணிகளுக்கு புகையிரத சேவை அமைக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் புகையிரதப் பாதைகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருவதாக இந்தியத் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த இந்த கப்பல் சேவை தலைமன்னார்- மடுவிற்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் முடிவடைவதில் ஏற்பட்ட காலதாமதத்தால்தான் இந்தக் கப்பல் சேவையிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ராமானுஜம் கப்பல் சேவை
வாரத்தில் 3 தினங்கள் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும் தலை மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் போக்குவரத்துச் சேவையில் பம்பாயிலுல்ல சிப்பிங் கோர்ப்ரேசன் ஒவ் இந்தியா என்னும் நிறுவனம் எம்.வி. ராமானுஜம் என்ற இரண்டு தட்டுக் கப்பல் வேவை கடந்த 1965 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
16 வருடங்கள் தொடர்ச்சியாக பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த ராமானுஜம் கப்பல் சேவை 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் சேவையில் ஈடுபட்டு வந்தது.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வடக்கில் முதலாவது பெரிய இராணுவத் தாக்குதல் ஒன்றை புலிகள் மேற்கொண்டனர். அப்போது 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் வடக்கில் தொடர்ச்சியாக யுத்தம் மூண்டது. அதன் பின்னர் ராமானுஜம் கப்பல் சேவை 1981 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் அதன் சேவையினை இடைநிறுத்தியது.
தலைமன்னார் கப்பல் சேவை நிறுத்தப்பட்ட பின்னர் பெருமளவு இலங்கை, இந்தியா சிறு வியாபாரிகள் முதல் சாதாரண பிரயாணிகள் வரை இன்று வரை தங்களது இலங்கை, இந்தியப் பிரயாணத்தில் பெருமளவு பணத்தையும் செலவு செய்து பெருங் கஸ்டங்களையும் நாளாந்தம் அனுபவித்து வருகின்றார்கள்.
தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை என்பது 3 மணி நேரத்தில் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரத்தை அடைந்து விடலாம். மற்றும் இரண்டு வழிக்குமான கட்டணம் என்பது சுமார் 8 ஆயிரத்திற்கும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் சொகுசுக் கப்பல் சேவையென்றால் கட்டணம் அதிகரிக்கும்.
இலங்கை- இந்திய பயணிகள் கப்பல் சேவை
இலங்கைக்கும், இந்தியாவுக்குமான கடல்வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பெரும் கப்பற் படையைக் கொண்டிருந்த சோழ மன்னர்கள், கடல் வழியாக படையெடுத்து இலங்கையை வெற்றி கொண்டு, ஆட்சி செய்தனர் என்று வரலாறு எடுத்துரைக்கிறது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின் போதும் இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தனுஸ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே 1914 ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
50 ஆண்டுகள் நடந்து வந்த இந்த கடல் வழிப் போக்குவரத்து, 1964 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 1964ம் ஆண்டு வீசிய பெரும் புயலுக்கு முன்புவரை சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு “இந்தோ சிலோன் போட் மெயில்" என்ற பெயரில் ஒரு ரயில் இயங்கி வந்தது. எழும்பூரிலிருந்து தனுஷ்கோடி வரை பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து, பின் தனுஷ்கோடியில் இருந்து கப்பல் வேவை இயங்கியது.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி, வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே ஒரு வலிமையான புயல் சின்னம் உருவாகியது. 19 ஆம் திகதி இந்த புயல் மேலும் வலிமை பெற்று, தெற்கு நோக்கி நகர்ந்தது. 22 ஆம் திகதி இலங்கையின் வவுனியா அருகே, மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இந்த புயல் கரையைக் கடந்தது.
இதனால் இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியும், புயலின் கோர தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ஆண்டு டிசம்பர் 22, 23 ஆம் திகதிகளில் இப்புயல் தனுஷ்கோடியை பயங்கரமாகத் தாக்கியது.
22 ஆம் திகதி இரவு 11.55 மணிக்கு ராமநாதபுரம் பாம்பனிலிருந்து 110 பயணிகளுடனும், ஐந்து ஊழியர்களுடனும் புறப்பட்டு தனுஷ்கோடி நோக்கி வந்து கொண்டிருந்த பாம்பன் - தனுஷ்கோடி பிரயாணிகள் ரயில் தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய சில நூறு அடிகள் தூரமே இருந்த நிலையில், மிகப் பெரிய ஒரு அலை அதைத் தாக்கியது.
இதில், அந்த ரயில் சூறையாடப்பட்டு, அதில் பயணம் செய்த 115 பேரும் இறந்து போயினர். தனுஷ்கோடியை கொடூரமாக தாக்கிய அந்தப் புயல், ஒட்டு மொத்த ஊரையே தரைமட்டமாக்கி விட்டுச் சென்றது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாகாண அரசு தனுஷ்கோடியை “மறைந்த நகரம்" என்று அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் தனுஷ்கோடி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற நகரமாக இருந்தது.
ஹோட்டல்கள், ஜவுளி, நகைக் கடைகள், தர்ம சத்திரங்கள், மருத்துவ மனைகள், அரச அலுவலகங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தனுஷ்கோடிக்கு வந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் சேவை செய்து வந்தன.
ஆனால், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி இரவு வீசிய புயல் இந்தக் குட்டி தீவின் 10 கிலோ மீற்றர் சுற்றளவில் இருந்து அனைத்து கட்டுமானங்களையும் நாசப்படுத்திவிட்டுச் சென்றது.
புயலுக்குப் பின் 1965 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், எம்.வி. ராமானுஜம் என்ற கப்பலை இலங்கை - இந்தியா இடையே இயக்கி வந்தது.
சிறு வியாபாரிகளுக்கு இந்தக் கப்பல் போக்குவரத்து பெரும் பயனளித்து வந்தது. பல்வேறு வகையான இந்திய வணிகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் இலங்கை வந்து பெரும் பொருள் ஈட்டி வந்தனர். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் பொருளாதாரம் மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருந்தது.
ஆனால், இந்தக் கப்பல் போக்குவரத்தும் 1981 ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. இதற்கு இங்கு தீவிரமடைந்த உள்நாட்டு போரே பிரதான காரணமாகும்.
பயணக் கட்டணம் குறையும்!
தற்போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விரும்புபவர்கள் விமானம் மூலம் மட்டுமே செல்ல முடியும். கொழும்பு, சென்னை, திருச்சி,மதுரை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்தக் கப்பல் போக்குவரத்தின் மூலம் மிகவும் குறைவான கட்டணத்திலேயே சுற்றுலாப் பயணிகள் இந்தியா சென்று வரலாம். விமானக் கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே கட்டணம் இருக்கும்.
இலங்கை - இந்தியா இடையேயான கப்பல் போக்குவரத்து துவங்கப்பட உள்ளதால், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக நல்ல வளரச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகம்
தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்கனவே 1.5 கோடி ரூபாய் செலவில் பணயிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு, அங்கு 400 பேர் வரை அமர சொகுசு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் தூத்துக்குடி கொழும்பு பிரயாணிகள் கப்பல் சேவை போதிய பிரயாணிகள் இல்லாது அந்தச் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை
“ஸ்கோட்டியா பிரின்ஸ்" மிதக்கும் நட்சத்திர விடுதியென்று சொல்லும் அளவிலான பிரமாண்டமான உல்லாசப் பயணிகள் கப்பல் குளிரூட்டப்பட்ட அறைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், அழகான இயற்கைக் காட்சியைக் காண்பதற்கு ஏதுவான திறந்த மேல் மாடியென அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைந்திருந்த பயணிகள் கப்பலே கொழும்பு துறைமுகத்துக்கும் தூத்துக்குடி துறைமுகத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த ஸ்கோட்டியா பிரின்ஸ் கப்பலாகும்.
1970 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையில் போலந்து உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளுக்கிடையில் தனது சேவையை வழங்கி வந்த மிதக்கும் இந்த உல்லாசபுரி கப்பல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்தது.
கடந்த 13.06.2011 திங்கள் கிழமை மாலை 3.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட ஸ்கொட்டியா பிரின்ஸ் மறுநாள் 14 ஆம் திகதி அதிகாலையில் 5.30 மணியளவில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
14 மணிநேரம் 15 நிமிடங்கள் நேரத்தை இந்தக் கப்பல் எடுத்துக் கொண்டது.சுமார் 5 மாதங்கள் வேவையில் ஈடுபட்ட ஸ்கோட்டியா பிரின்ஸ் தனது சேவையை கடந்த 2011 இறுதியில் நிறுத்திக் கொண்டது.
9 தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ள இக்கப்பலில் ஒரே நேரத்தில் 1044 பேர் பயணிக்க முடியும். இதில் 317 தனியறைகள் உண்டு. 111 சிக்னப் பிரிவு கபின்களும், 191 டீலக்ஸ் கபின்களும், 11 முதல் தர கபின்களும், 2 சூட் கபின்கள் என தங்குமிடங்கள் அமையப் பெற்றுள்ளன.
விசேட தேவையுடையவர்களுக்காக 2 கபின்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கபின்களும் போதுமான இடவசதியுடன், கட்டில்கள், கண்ணாடி, கழுவுமிடம் என சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. டீலக்ஸ் கபின்கள் சிறிய ஓய்விடம், தனியான குளியலறை, தனியான அலுமாரி போன்ற வசதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.
கப்பலின் 7ஆவது தளத்தில் 200 - 250 பேர் அமரக்கூடிய மண்டபம், திருமணங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக்கூடியதாக குளிரூட்டப்பட்ட மண்டபம் அமைந்துள்ளது. பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஆறுதலாக அமர்ந்து இரசிக்கக்கூடிய வகையிலான இருக்கைகள் போடப்பட்டுள்ளன.கப்பலின் 6 வது தளத்தில் இது அமைந்துள்ளது. கப்பலின் 7 ஆவது தளத்தில் “மன்ஹான்டன் கபே" அமைந்திருந்தது.
சிக்கன வகுப்பில் பயணிப்பவர்கள் தலா 100 கிலோ எடையுள்ள பொருட்களையும், ஏனைய வகுப்புக்களில் பயணிக்கும் பயணிகள் தலா 200 கிலோ எடையுள்ள பொருட்களையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடியும். ஆனால் இந்தக் கப்பலில் சுமார் 200- 300 பிரயாணிகளே பிரயாணம் செய்ததனால் அந்தக் கப்பல் சேவை பெரும் நஷ்டத்தில் இயங்கியது. ஆதனால் அந்தக் கப்பல் சேவை இடைநிறுத்தப் பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டுகளின் பின்னர் தடைப்பட்ட ராமேஷ்வரம் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதானது, இந்தியா செல்ல விரும்பும் பிரயாணிகளுக்கு ஒரு இனிப்பான செய்திதான்.
கப்பல் பிரயாணம் என்பது ஒரு சுகமான அனுபவம்தான். இந்தக் கப்பல் வேவை என்பது தூத்துக்குடி சொகுசு கப்பல் போல் அல்லாது அரைச் சொகுசு கப்பலாக அமையும் என்று இந்திய தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் கட்டணம் குறைவாகத்தான் இருக்கும் என எதிர் பார்க்கலாம். பார்ப்போம்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszASUKWkq3.html#sthash.cbZD7lj8.dpuf
தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:


No comments:
Post a Comment