அண்மைய செய்திகள்

recent
-

மற்றவரை அவராகவே ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவமே மகிழ்ச்சியான குடும்ப வாழ்விற்கான அடித்தளம்- தமிழ் நேசன் அடிகளார்-Photo

இன்று கணவன் மனைவி ஆகிய இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. காரணம் ஒவ்வொருவரும் தம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆளாக மற்றவர் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். பொதுவாக 'நான் எதிர்பார்க்கும் ஆளாக நீ இருக்க வேண்டும்' என்றுதான் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரைக் குறித்து எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்புத்தான் குடும்பங்களுக்குள் குழப்பத்தையும், சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றது. இங்கேதான் பிரச்சினைக்கான அடித்தளம் உருவாகின்றது. நாம் எதிர்பார்க்கும் ஒருவராக மற்றவர் இருக்க முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 'நீ நீயாக இரு. உன்னை நீயாகவே ஏற்றுக்கொள்கிறேன்

.' 'நான் நானாக இருக்கின்றேன். என்னை நானாக நீ ஏற்றுக்கொள்' என்று சொல்லக்கூடிய ஒரு மனநிலை, மனப்பக்குவம், மன முதிர்ச்ச்சி ஏற்படும்போது அந்தக் குடும்பத்தில் உண்மையான புரிந்துணர்வு, அன்பு, அமைதி ஏற்படும் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

 இம்மாதம் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற கிறிஸ்தவ மாநாட்டில் உரையாற்றும்போதே மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி இயக்குனரும், மன்னா பத்திரிகை ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

 'குடும்பமே சமூக வாழ்வின் ஊற்று' என்ற மையப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது, பலத்த எதிர்பார்ப்புகளோடு திருமண வாழ்க்கைக்கள் நுழைகின்ற தம்பதியரில் பெரும்பான்மையானவர்கள் இறுதியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் விலையாக வாங்கிக்கொள்கின்றனர். தமது எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிவிட்டதை உணருகின்றனர். 

திருமண வாழ்வை நாம் எப்படி சிறப்பாக ஆரம்பிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அதை எப்படி நாளாந்தம் வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியமானது. வெளிநாடுகளில் உள்ளதைப்போல எடுத்ததற்கெல்லாம் விவாகரத்துக்கோருகின்ற நிலை நமது நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இங்கு பல குடும்பங்கள் மனதளவில் பிரிந்து, உடலளவில் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலைமையை நாம் பார்க்கின்றோம். இதை 'உள்ளார்ந்த விவாகரத்துக்கள்' அல்லது 'உள்வாரிப் பிரிவுகள்' (Internal Divers) என அழைப்பார்கள். பல குடும்ப தலைவர்கள் அல்லது தலைவியர் தங்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களாக, வாழ்க்கையில் பிடிப்பற்றவர்களாக ஏனோதானோ என்று நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, 'என்ன செய்வது பிள்ளைகளுக்காக வாழ வேண்டி உள்ளது' கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆற அமர இருந்து மனம் திறந்த பேசவேண்டும். தமது மனஆதங்கங்களை, எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தி பேசவேண்டும். அப்போதுதான் உண்மையான புரிந்துணர்வும், உறவும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் ஏற்படும்.










மற்றவரை அவராகவே ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவமே மகிழ்ச்சியான குடும்ப வாழ்விற்கான அடித்தளம்- தமிழ் நேசன் அடிகளார்-Photo Reviewed by NEWMANNAR on October 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.