ஒருவருக்கொருவர் உதவும் வகையில் தான் தமிழர்கள் முன்னேற முடியும்: விக்னேஸ்வரன்
எமது தமிழ்ச் சமுதாயம், ஒருவர் ஒருவருக்கு உதவும் வகையில்த்தான் முன்னேற்றம் அடைய முடியும் என்பது எனது கருத்து. ஆனால் அதற்காக நாம் உதவிகளைப் பெற்று சோம்பேறிகளாக மாறாமல்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கைதடி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு மாலை 2.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
இந்தநிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஆற்றிய முழு உரை பின்வருமாறு,
சர்வதேச முதியோர் வாரத்தின் கடைசி நாளன்று முதியோர் மத்தியில் பேச முதியவர் ஒருவரை அழைத்தமை சாலப் பொருத்தமானதே. ஆனால் உடல் முதுமையிலும் உள இளமையுடன் வாழலாம் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.
முதுமை ஒரு வரப்பிரசாதம் என்று கூறுகிறது எமது பண்டைய இந்து நூல்கள். அதாவது எமது முன்னோர்கள் ஒருவர் வாழ்க்கையை நான்கு காலகட்டங்களாகப் பிரித்தார்கள். முதல் இருபது வருடங்களையும் பிரம்மச்சரிய ஆசிரமம் என்றார்கள். அடுத்த இருபது வருடங்களையும் கிரகஸ்த ஆச்சிரமம் என்றார்கள்.
மூன்றாவது இருபது வருடங்களையும் வானப்பிரஸ்த ஆச்சிரமம் என்றார்கள். கடைசி இருபது வருடங்களையும் அல்லது மரணம் வரையிலான கடைசிக் கால கட்டத்தை சந்நியாச ஆச்சிரமம் என்றார்கள். ஆச்சிரமம் என்றால் ஒரு தங்கு நிலை என்று கொள்ளலாம்.
இந்த நான்கு ஆச்சிரமங்களும் சேர்ந்தே மனித வாழ்க்கை. ஆனால் சந்நியாச ஆச்சிரமத்திற்கும் அல்லது முதுமை நிலைக்கும் மற்றைய நிலைகளுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
அதாவது எமது முன்னோர்கள் மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் பிரிக்கும் போது இயற்கையைப் பார்த்தே அந்தப் பாகுபாட்டைப் உருவாக்கிக் கொண்டார்கள். அது என்ன இயற்கையின் பாடம் என்று நீங்கள் கேட்பீர்கள்.
நெல்லை எடுங்கள். முதலில் நெல்லை விதைக்கின்றோம். அது விதைக்கும் நிலை. அடுத்து அது வளரும் நிலை. அதாவது வளர்ந்து கதிர்விட்டு அழகு மிளிர தென்றலில் அசைந்து ஆடும் நிலை. விரைவில் மூன்றாவது நிலையான அறுவடைநிலை வந்து விடுகிறது.
காற்றில் ஆடி அசைந்த நிலை போய் விடுகிறது. சாயத் தொடங்குகின்றன கதிர்கள். வெட்டப்பட்டு கதிர் அடித்து தானியங்களைச் சேர்த்து வீடு கொண்டு போகும் நிலைதான் அந்த மூன்றாவது நிலை. கடைசி நிலை என்னவென்று பார்த்தால் அது நெல்லைச் சுத்தப்படுத்தி பதப்படுத்தி எடுத்து அரைத்து மாவாக்கி இடியப்பம் செய்வதும் பிட்டு செய்வதுந் தான் அந்த நிலை. நெல் அப்பொழுது மாவாகி மற்றவர்களுக்கு உணவாகின்றது.
இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முதல் மூன்று நிலைகளும் நெற்கதிர்களுக்கென்று ஒதுக்கி வைத்த நிலைகள். ஆனால் நான்காவது நிலை அப்படியல்ல. அது மற்றவர்களுக்கு உணவாகப் பயன்படும் நிலை. இந்த நான்கு நிலைகளுடன் மனித வாழ்க்கையை ஒப்பிட்டுத்தான் நான்கு ஆச்சிரம நிலைகளை வகுத்தார்கள் எமது முன்னோர்கள்.
முதல் மூன்று நிலைகளும் நமக்காக வாழும் நிலைகள். பிரம்மச்சரிய நிலையில் வாழ்க்கைக்கு வித்திடுகின்றோம். கிரகஸ்த நிலையில் வாழ்க்கையைச் சுவைக்கின்றோம். வானப்பிரஸ்த நிலையில் வாழ்க்கையில் ஓய்வு பெறுகின்றோம். ஆனால் சந்நியாச நிலை வந்ததும் நாம் எமக்காக வாழாது பிறர்க்கென்றே வாழ்கின்றோம். அதனால்த்தான் முதுமை நிலையான சந்நியாச ஆசிரமத்தை மிகவும் மகோன்னதமான ஒரு நிலையாக எமது பண்டைய முன்னோர்கள் கருதி வந்தார்கள்.
சந்நியாசநிலை அல்லது முதுமைநிலையானது எம்மால் போற்றிப் பணிய வேண்டிய ஒரு நிலை. காரணம் அவர்கள் “தாம்” என்ற நிலைக்குள் இருந்து விடுபட்டு “நாம்” என்று மற்றவர்களுக்காகத் தம்மை வருத்திச் சேவை செய்யும் கால கட்டமே இந்த நான்காவது ஆச்சிரம நிலை.
இன்று உள்ளக உறுப்பினர்களான நீங்களும் நானும் இந்த மகத்தான ஆச்சிரம நிலைக்குள் நிற்கின்றோம். எங்களுக்கு இனிமேல் வேறு ஆச்சிரம நிலைகள் இல்லை. இது தான் கடைசி. ஆகவே நாங்கள் எமக்கிருக்கும் அந்திம காலத்தை மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பாவிக்க வேண்டும்.
நீங்கள் எவரும் மற்றையவர்களின் உதவி எம்மை அடைய வேண்டும், நாம் வலுவற்றவர்கள், முதியவர்கள் என்று நினைத்துக் கிடக்காமல் சுற்றியுள்ள உலகத்திற்கு என்ன விதத்தில் நாம் நன்மை புரியலாம் என்று எம்மை நாமே கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நாம் எம்மாலான நன்மையைச் செய்கின்றோம் என்ற ஒரு உயர் கருத்து உள்ளத்தில் உதித்தால் தானாகவே எமது முதுமை பெற்ற அவயவங்கள் வலுப்பெறத் தொடங்கி விடுவன.
மனதில் இளமை புகுந்துவிடும். எங்கள் இந்த வயதில் நாம் விருப்பு வெறுப்பைக் கடந்தவர்கள். ஆகவே சேவையொன்றையே எமது குறிக்கோளாகக் கொண்டு வாழத் தலைப்பட வேண்டும் என்று எனது இங்கிருக்கும் ஆண் பெண் உறவினர்களாகிய உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
உலகத்திற்கு நன்மை செய்தல் என்று கூறும் போது அது இவ்வாறு தான் அமைய வேண்டும் என்று கருதுவது தவறாகும். எமது உள்ளத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது தான் முக்கியம்.
அந்த மனோநிலைதான் உங்களை மேன்மையான ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அந்த மனோநிலையை நடைமுறைப்படுத்தும் விதம் வேறுவேறாக அமையலாம். பணத்தால் சேவை புரியலாம். மனத்தால் சேவை புரியலாம். உடலால் சேவை புரியலாம். உற்ற கல்வியால் சேவை புரியலாம். வெறுமனே நிரோடையில் இருந்து “எல்லா உயிர்களும் அன்புடன், அமைதியுடன், மகிழ்வுடன் வாழ இடமளிப்பாய் இறைவனே” என்று பிரார்த்தனை செய்வது கூட மக்கட் சேவையேயாகும்.
ஆகவே எமது முதியோர் நிலையில் நாங்கள் சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். “எம்மக்கள் எம்மைப் பார்க்க வரவில்லையே எம்மைத் தனிமையில் தள்ளி விட்டார்களே” என்று மனம் அங்கலாய்ப்பது முதுமை நிலைக்கு அழகல்ல.
இத்தருணத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆங்கிலப் பேச்சுப் போட்டி பல வருடங்களுக்கு முன் நடந்தது. இறுதிப் போட்டிக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் இன்னொருவருக்கு ஒரு வயது குறைந்தவர். வயது குறைந்தவருக்கு மேடையில் ஏறிப் பேச முன் சற்று நடுக்கம் ஏற்பட்டிருந்தது. போட்டியாளர்கள் யாவரும் ஒரு அறையினுள் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஒவ்வொருவர் இலக்கத்திற்குத் தக்கவாறு அவர்கள் பேச அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது அந்த வயதில் குறைந்த சிங்கள இளைஞர் சற்று மருண்ட நிலையில் இருந்தார்.
உடனே வயதில் கூடிய அந்தத் தமிழ் இளைஞர் அவரிடம் சென்று “தம்பி! ஏன் பயப்படுகின்றாய்? தோற்று விடுவேன் என்பதால்த் தானே? தோற்றால் பரவாயில்லை. நாம் இதில் முழுமனதுடன் பங்குபற்றுவது தான் முக்கியம்.
உன்னால் முடிந்தவாறு பேசு, பயப்படாதே. வெற்றி தோல்வி எம் கையில் இல்லை” என்று கூறினார்.சற்றுத் தேறினார் வயதில் குறைந்தவர். பின்னர் சென்று நன்றாகத்தான் இளையவர் பேசி விட்டு வந்து மற்றையவருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
போட்டியில் அந்த இருவருமே வெற்றி பெறவில்லை. ஒருவரும் எதிர்பார்க்காத இன்னொருவர்தான் வென்றார். வயதில் கூடிய தமிழ் இளைஞர் இரண்டாவதாகவும் வயதில் குறைந்தவர் மூன்றாவதாகவும் வந்தார்கள். இந்தக் கதை இத்துடன் முடியவில்லை.
சுமார் 20, 30 வருடகாலத்தின் பின்னர் அந்தத் தமிழ் மகன் இங்கிலாந்து சென்றபோது மற்றையவர் அவரைக் காண நேர்ந்தது. அது 1983க்குப் பின்னைய காலம். அப்படியிருந்தும் அச்சிங்களப் பெருமகன் அந்தத் தமிழ் மகன் தனக்குப் உற்சாகம் ஊட்டிப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்தது பற்றி பலருக்கும் பெருமையுடன் கூறினார்.
“போட்டியில் நாம் இருவருமே போட்டியிட்டோம். அவர் தமிழர். நான் சிங்களவர். அப்படியிருந்தும் இவர் என்னை உற்சாகமூட்டியமை இன்றும் என் கண் முன் இருக்கின்றது” என்றார். இதை எதற்குக் கூறுகின்றேன் என்றால் நாம் மற்றவர்களுக்கு உதவி புரியக் கூடிய ஒரு காலகட்டம், ஒரு சந்தர்ப்பம் எத்தருணத்திலும் வரலாம்.
அப்பொழுது நாம் எக்காரணத்திற்காகவும் எமது கடமையில் இருந்து பின்வாங்கப்படாது என்பதைச் சொல்லி வைக்கவே. பலனை எதிர்பாராது எமது கடமைகளைச் செய்வதில்த்தான் ஆன்மீகம் அடங்கியிருக்கின்றது. அதைத்தான் பகவத்கீதை எமக்கு உபதேசிக்கின்றது.
பகவத்கீதையை வைஷ்ணவ நூல் என்று எம்முள் பலர் ஒதுக்கி வைப்பதைக் கண்டுள்ளேன். குறிப்பாக யாழ் மக்களிடையே இந்தக் கருத்தைக் கவனித்துள்ளேன். உண்மை என்பது எந்த ஒரு சமயத்திற்கோ சமய அலகுக்கோ தாரை வார்த்துக் கொடுக்கப்படவில்லை.
உண்மையை எந்த சமயத்தில் இருந்தோ வேறு மூலத்தில் இருந்தோ நாம் பெற்றுக் கொள்ளலாம் ஆனால்.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்றான் வள்ளுவன். கூறியது உண்மையா என்பது தான் முக்கியம்.
பகவத் கீதையில் கூறியவாறு பயனை எதிர்பாராது மற்றவர்களுக்குச் சேவை செய்வது பற்றி பத்து வருடங்களுக்கு முன் ஆற்றிய எனது உரையொன்று இப்பொழுது கொழும்புத் தமிழ் சங்கத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டு எனக்கு சில தினங்களுக்கு முன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சிலவற்றைக் கொண்டு வந்துள்ளேன். அவை இனாமாக இங்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.
நாம் மற்றவர்களுக்கு உதவியோ, சேவையோ, நன்மையோ செய்வதில்தான் எமது மனித வாழ்க்கை உயர்நிலை அடைகின்றது என்பதைக் கூறி வைக்கவே இவ்வளவையும் எடுத்தியம்பினேன்.
அதுவும் முதியோர்களைப் பொறுத்த வரையில் அப்பேர்ப்பட்ட சேவை மனப்பான்மை எந்நேரமும் எம்மனதில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன். அவாக்கள் தணிந்துவிட்ட எமது மனங்களில் அவற்றின் இடத்தில் அன்பு மேலோங்க வேண்டும்.
இன்றைய எமது தமிழ்ச் சமுதாயம், ஒருவர் ஒருவருக்கு உதவும் வகையில்த்தான் முன்னேற்றம் அடைய முடியும் என்பது எனது கருத்து. ஆனால் அதற்காக நாம் உதவிகளைப் பெற்று சோம்பேறிகளாக மாறாமல்ப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
என்ஜினியர் வேலை செய்கின்றேன் என்று கூறி வெளிநாடுகளில் கழியல் அறைகளைச் சுத்தப்படுத்தி வரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை நான் வெளிநாடுகளில் சந்தித்துப் பேசியுள்ளேன்.
கழியல் அறை எந்திரிகள் என்று தான் அவர்களை அங்கு கூப்பிடுவார்கள். ஆகவே தாம் எந்திரியர்கள் என்று கூறியதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு மூன்று வேலைகள் செய்து பணத்தை உழைத்தே ஊருக்கு அனுப்புகின்றார்கள் என்பது இங்கு நன்மை பெறும் நம்மவர்களுள் பலருக்குச் சில சமயங்களில் புரிவதில்லை.
சும்மா கிடைக்கும் பணத்தில் இங்கு சொகுசு வாழ்க்கை வாழத்தலைப்படுகின்றார்கள். உழைத்து வாழ்ந்து பெருமையுற்ற எம் மக்கள் இன்று உள்ளூருக்குள் வரும் வெளிநாட்டுப் பணங்களில் சொகுசு வாழ்க்கை வாழத் தலைப்படுவது எம்மை எமது உயர்ந்த நாகரிக நிலையில் இருந்து விழுத்தி விடக் கூடுமோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றது. உழைத்துக் கிடைக்கும் ஊதியமே உலக வாழ்க்கையில் நிலைக்கும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.
இந்த விடுதியில் வாழும் முதியவர்கள் எல்லோரும் பிறரிடம் இருந்து எதிர் பார்ப்புக்களைக் குறைத்துப் பிறருக்கு நாம் எதைச் செய்து கொடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அதுவே எமது முதுமையின் மனித இலட்சணம். அதற்காக இங்கிருக்கும் அலுவலர்கள் எமது முதியோரை “அது செய் இது செய்” என்று வற்புறுத்த விழையாதீர்கள்! அவர்கள் தாமாகவே ஒரு சேவை மனப்பான்மையைத் தமக்குள் வளர்த்துக் கொள்ள உதவி புரிவதுதான் உங்கள் கடமை.
அத்துடன் நான் கூறுவது முதியோர்களின் நோக்கில், மனோநிலையில் ஒரு மறுமலர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் விதத்தில்த்தான் அமைகின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று “பெற்றோரைப் பிள்ளைகளே பராமரிக்க வேண்டும்” என்ற தொனிப் பொருளில் நடந்துள்ள விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மாறான கருத்து என்று என் சொற்கள் பற்றி எவரும் தப்பபிப்பிராயம் கொள்ளக் கூடாது.
பெற்றோரைப் பேணுவது பிள்ளைகளாகிய எம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்தக் கடப்பாட்டில் பிள்ளைகள் எந்தவிதக் குறைபாடும் வைக்கக் கூடாது. ஆனால் முதியவர்கள் என்ற வகையில் சுற்றி உள்ளோர், உலகத்தார் மீது கரிசனை காட்டுவது சேவை செய்ய முன் வருவது முதியோர்களின் தனியுரித்து என்பதை மறவாதீர்கள்.
நோயினால் பாதிக்கப் பட்டிருந்தால் அன்றி இறைவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டு எமது வாழ்க்கையை மக்களுக்குப் பயன் தரும் வாழ்க்கையாக மாற்ற ஆவன செய்வோம் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmszATbKWmu6.html#sthash.AwYWn5Jb.dpuf
ஒருவருக்கொருவர் உதவும் வகையில் தான் தமிழர்கள் முன்னேற முடியும்: விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:


No comments:
Post a Comment