மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் அவல நிலை-இடிந்து விழும் நிலையில் நீர்த்தாங்கி.-Photo
மன்னார் பொது விளையாட்டு மைதானம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல வருடங்களாக இயங்கி வருவதாகவும்,இதனால் குறித்த விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும் வீரர்களும்,பயிற்சிகளுக்காக செல்லும் வீரர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் நகரில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த விளையாட்டு மைதானமாக மன்னார் பொது விளையாட்டு மைதானம் இயங்கி வருகின்றது.இவ் மைதானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
குறிப்பாக குடி நீர் பிரச்சினை மலசல கூட பிரச்சினை என்பன குறித்த பொது விளையாட்டு மைதானத்தில் காணப்படுகின்றது.
குறிப்பாக குறித்த மைதானத்தில் இடம் பெறுகின்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்தும்,ஏனைய கிராமங்களில் இருந்தும் வரும் விளையாட்டு வீர வீரங்கனைகள் அவசியத்தேவைகளுக்காக விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்றே தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.குறிப்பாக மலசல கூட வசதி,குடி நீர் ஆகியவை.
அதுமட்டுமின்றி குறித்த மைதானத்திற்கு வரும் பெண் வீரர்கள் ஆடை மாற்றுவதற்கான வசதிகள் கூட இன்றி பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,மைதானத்தில் மறைவான இடங்களுக்குச் சென்று ஆடை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தினுள் பழைமை வாய்ந்த அதியுயரம் கொண்ட நீர்த்தாங்கி ஒன்று காணப்படுகின்றது.குறித்த நீர்த்தாங்கி சேதமடைந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.தற்போது நீர்த்தாங்கி உடைந்து துண்டு துண்டுகளாக கீழே விழுகின்றது.குறிப்பாக நிழலுக்காக நீர்த்தாங்கிக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மேலும்,வீதியால் செல்பவர்களுக்கு மேலும் கற்கள் வீழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்னார் நகர சபை பல மாதங்களாக தெரிவிக்கின்ற போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மன்னார் நகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த மைதானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமை தொடர்பில் மன்னார் நகர சபை உரிய கவனம் செலுத்தி குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என பாதிக்கப்பட்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் அவல நிலை-இடிந்து விழும் நிலையில் நீர்த்தாங்கி.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:

No comments:
Post a Comment